குரங்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி எப்போது? சீரம் நிறுவனம் அளித்த முக்கிய அப்டேட்
டெல்லி: இந்தியாவில் 4 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நோய் தீவிரமாக பரவினால் தடுப்பூசி இறக்குமதி செய்ய தயாராக உள்ளதாக சீரம் இன்ஸ்டிடீயூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஆடர் பூனவால்லா தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை பெரும் பதற்றத்துக்கு உட்படுத்திய கொரோனா வைரஸ் எனும் பெருந்தொற்று நோய், தற்போதும் இரண்டாம் அலை, மூன்றாம் அலை என்று வகையில் பயமுறுத்திகொண்டு தான் இருக்கிறது.
எப்போ தான் இந்த கொரோனா வைரஸ் போகும்னு சொல்லுங்கப்பா. . என்கிற வகையில், அதன் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், குரங்கு அம்மை (Monkeypox) எனும் வைரஸ் நோய் உலக நாடுகளை மீண்டும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

4 பேருக்கு குரங்கு அம்மை
கொரோனா வைரஸ் போலவே உலக நாடுகளில் குரங்கு அம்மை வைரஸ் நோய் பரவி வருவதால் மக்கள் மத்தியில் மீண்டும் பீதி ஏற்பட்டுள்ளது. இதிலும் இந்த நோயும் இந்தியாவில் பரவியதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த 14-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த கேரள நபரின் மூலம் இந்தியாவில் குரங்கு அம்மை நோய் அடியெடுத்து வைத்துள்ளது. தற்போது கேரளாவில் 3 பேர் மற்றும் தலைநகர் டெல்லியில் ஒருவருக்கு என குரங்கு அம்மையால் இந்தியாவில் மட்டும் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொத்து கொத்தாக பாதிப்பு ஏற்பட்டால்
இந்த நிலையில், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான சீரம் இன்ஸ்டிடீயூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைவர், ஆடர் பூனவால்லா, குரங்கு அம்மை நோய்க்கும் பயன்படுத்தப்படும் தடுப்பூசியான சின்னம்மை தடுப்பூசியை டேனிஷ் நிறுவனத்திடம் இருந்து சொந்த செலவில் கொள்முதல் செய்ய தொடங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு நான்கு பேருக்கு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர், இந்தியாவில் குரங்கு அம்மை பரவல் வேகம் அதிகரித்து கொத்து கொத்தாக பாதிப்பு ஏற்பட்டால், தடுப்பூசியை இறக்குமதி செய்ய முடிவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சொந்த செலவில்..
இது தொடர்பாக அடர் பூனவல்லா மேலும் கூறுகையில், 'இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டால், இந்நோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் சின்னம்மை தடுப்பூசியை டேனிஷ் நாட்டு நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்வதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறோம். டென்மார்க் நாட்டை சேர்ந்த பவாரியன் நோர்டிக் நிறுவனம் சின்னம்மை தடுப்பூசியை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டால், அடுத்த சில மாதங்களில் சில மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும். இவை அனைத்தையும் எங்கள் நிறுவனம் சொந்த செலவில் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம்.

அரசு தான் முடிவு எடுக்கும்
இது தொடர்பாக நாங்கள் டென்மார்க் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். எனினும், இது குறித்து இந்திய அரசு, நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கும். பிற நாடுகளை போல குறைந்த எண்ணிக்கையில் நாமும் தடுப்பூசியை கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். எனது சொந்த ரிஸ்க் மற்றும் செலவில் நான் இறக்குமதி செய்ய தயராகிவிட்டேன். இறுதியில் சுகாதார கொள்கை குறித்து அரசே முடிவு எடுக்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார். நோயின் பரவல் அதிகரிக்கும் முன்பே தடுப்பூசி கையிருப்பில் இருந்தால் இந்தியாவில் நோய் பரவலை தடுக்கலாம் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கோவீஷீல்டு தடுப்பூசியை தயாரித்த நிறுவனம்
கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த சமயத்தில் இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசியே ஆரம்ப கட்டத்தில் அதிக அளவில் போடப்பட்டது. இந்த தடுப்பூசியை தயாரித்த நிறுவனம் தான் சீரம் இன்ஸ்டிட்டியூட் ஆப் இந்தியா ஆகும். புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், தடுப்பூசி தயாரிக்கும் உலகின் மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்றாகும்.












Click it and Unblock the Notifications