ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்க்கும் இரு முக்கிய வழக்குகள்.. ஒரே நாளில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!
டெல்லி: எஸ்ஐஆர் மற்றும் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இந்த விவகாரங்களை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் இதை பெரியளவில் எடுத்து செல்ல முடிவு செய்துள்ளன. இதற்கிடையே இது தொடர்பான இரு முக்கிய வழக்குகள் நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
எஸ்ஐஆர் நடவடிக்கையில் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக சொல்லி தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஞானேஷ் குமார் தலைமை தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக உள்ளது.

பின்னணி
கடந்த 10 மாதங்களில் மட்டும் 14 முறை எஸ்ஐஆர் உட்பட பல்வேறு விவகாரங்களில் பிற தேர்தல் ஆணையர்கள் ஆட்சேபனை தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர். அதையும் தாண்டி தலைமை தேர்தல் ஆணையர் முடிவுகளை எடுத்திருக்கிறார். அதாவது தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக செயல்படுகிறார் என்பதே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு!
இது தொடர்பாக போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. டெல்லி உட்பட நாடு முழுக்க போராட்டங்கள் நடந்து வருகிறது. மக்கள் போராட்டமாக மட்டுமின்றி சட்ட ரீதியாகவும் இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. அதன்படி வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (மேற்கொள்ளும் நடைமுறையை எதிர்த்து, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணித் தலைவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.
ராகுல் தாக்கல் செய்த வழக்கு
இந்த மனுக்களை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரிக்க உள்ளது. SIR நடைமுறைக்கு எதிராக ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் தொடர்ந்துள்ள மனுக்கள் இந்த விசாரணையில் எடுத்து கொள்ளப்பட உள்ளன.
அதேபோல டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரை போராட்டங்களுக்கான அதிகாரப்பூர்வ இடமாக அறிவித்திருந்த உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தனி மனுவையும் உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. அதாவது முன்பு டெல்லியில் போராட்டங்களை நடத்த அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் ஒன்றாக ஜந்தர் மந்தர் இருந்தது.
ஜந்தர் மந்தர்
இருப்பினும், அங்கு போராட்டம் நடத்துவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக சொல்லி அங்கு போராட்டங்களை நடத்த அனுமதி இல்லை என டெல்லி போலீசார் கடந்த திங்கள்கிழமை அறிவித்தது. இதை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கான அனுமதி தொடர்பான இந்த மனுவும் அதே நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வரவுள்ளது. ஒரே நாளில் SIR நடைமுறைக்கு எதிரான மனுக்களும், ஜந்தர் மந்தர் போராட்ட இடம் தொடர்பான மனுவும் விசாரணைக்கு வருவதால் இந்த வழக்குகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications
