வெளிநாடுகளில் கொரோனா அதிகரிக்கிறது.. அலர்ட்-ஆ இருங்க.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு திடீர் கடிதம்
டெல்லி: கொரோனா பரிசோதனைக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. வெளிநாடுகளில் கொரோனா பரவல் அதிகரிப்பை சுட்டிக்காட்டி இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே இந்தியாவில் கொரோனா பாதிப்பு மூன்று இலக்க எண்களில் தான் பதிவாகி வருகிறது.
குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் பதிவான கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை வெறும் 115- ஆக மட்டுமே உள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் மூன்றாக பதிவாகி இருந்தது.

இந்தியாவில் கொரோனா
மகாராஷ்டிர மாநிலத்தில் ஒருவரும் கேரளாவில் கொரோனாவால் ஏற்கனவே உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை சரிகட்டும் விதமாக இணைக்கப்பட்டு இருந்தது. அதேபோல், கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3,490- ஆக உள்ளது. தமிழகத்தில் கூட ஒருநாள் கொரோனா பாதிப்பு நேற்று 5 ஆக பதிவாகியிருந்தது. புதிதாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை. இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கப்பட்டுவிட்டதால் மக்கள் கிட்டத்தட்ட கொரோனாவை மறந்து விட்டனர் என்று சொல்லும் அளவுக்கு இயல்பு நிலை முழுவதுமாக திரும்பி விட்டது. ஆனால், கொரோனா வைரஸ் முதன் முதலாக பரவிய சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருப்பது உலக நாடுகளுக்கு மீண்டும் கிலியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. கொரோனா பரவலால் அங்கு உயிரிழப்புகளும் அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

உலக நாடுகளில் மீண்டும் அதிகரிக்கிறது
இது ஒருபுறம் இருக்க பிரேசில், கொரியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது கொரோனா மெல்ல மெல்ல தலைதூக்க ஆரம்பித்துள்ளது. தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் உலக அளவில் பாதிப்பு அதிகரிக்குமோ என்ற அச்சமும் பரவலாக மக்கள் மத்தியில் எழாமல் இல்லை. குறிப்பாக சீனாவில் தற்போது அதிகரிக்கும் கொரோனாவால் வைரசின் புதிய பிறழ்வுகள் உருவாகி உலகம் முழுவதும் பரவக்கூடும் என்ற அச்சமும் எழுப்பப்படுகிறது. இது தொடர்பாக அமெரிக்காவும் தனது கவலையை வெளிப்படுத்தி இருந்தது.

மாநில தலைமை செயலாளர்களுக்கு கடிதம்
இந்த நிலையில், அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதித்தித்தவர்களின் ரத்த மாதிரிகளை மாநிலஙகள் மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்ப வேண்டும் என்றும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்
இதுவரை பின்பற்றப்பட்டு வந்த கொரோனா தடுப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மாநிலங்கள் மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கடிதத்தில் மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. இதேபோல் ஜப்பான், அமெரிக்கா,சீனா, பிரேசில், கொரியா போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதையும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications