உ.பி.யில் 8 விவசாயிகளை காரை ஏற்றி கொன்ற பாஜக மாஜி அமைச்சர் மகனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்!
டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் 8 விவசாயிகளை காரை ஏற்றி கொன்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, முன்னாள் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. 2021-ம் ஆண்டு உலகை உலுக்கிய விவசாயிகள் போராட்டத்தின் போது உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் காரை ஏற்றி 8 பேரை கொலை செய்தவர் ஆஷிஷ் மிஸ்ரா.
2020-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை மத்திய பாஜக அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் மிகப் பெரிய அமைதிவழிப் போராட்டத்தை நடத்தினர். கடும் குளிர், வாட்டிய வெயில், பனி எதனையும் பொருட்படுத்தாமல் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை ஓராண்டு காலம் முன்னெடுத்தனர் விவசாயிகள். இந்தப் போராட்டங்களின் போது 700 விவசாயிகள் மரணம் அடைந்தனர்.

உலகையே அதிரவைத்த இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு மத்திய பாஜக அரசு அப்போது பணிந்தது. சர்ச்சைக்குரிய 3 விவசாய சட்டங்களைக் கைவிடுவதாகவும் அறிவித்தது. அத்துடன் விவசாயிகளிடம் பிரதமர் மோடி மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
இந்தப் போராட்டம் டெல்லி எல்லைகளில் நடைபெற்ற போது உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியிலும் ஒரு தரப்பு விவசாயிகள் பேரணி நடத்தினர். இந்தப் பேரணிக்குள் மத்திய இணமை அமைச்சராக இருந்த அஜய் மிஸ்ரா மகன் வேகமாக காரை ஏற்றினார். இதில் 8 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பலியாகினர். 8 விவசாயிகள் காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே பெரும் கொந்தளிப்புக்குள்ளாக்கியது.
மத்திய இணை அமைச்சராக இருந்த பாஜகவின் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ராவால் படுகொலை செய்யப்பட்ட குடும்பங்களுக்கு காங்கிரஸின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். இந்த விவகாரம் மிகப் பெரும் அரசியல் சர்ச்சையாகவும் வெடித்தது.
இதனையடுத்து ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தமக்கு ஜாமீன் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் ஆஷிஷ் மிஸ்ரா தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது கொலையாளி ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் டெல்லி அல்லது லக்னோவில் தங்கி இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்தது. மேலும் ஆஷிஷ் மிஸ்ரா மீதான வழக்கை விரைவாக விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications