அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு “ஆவணங்கள் பத்திரம்”- சுப்ரீம் கோர்ட் முக்கிய ஆர்டர்!
டெல்லி : அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு தொடர்புடைய ஆவணங்களை பத்திரமாக வைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதுள்ள வழக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்து, இறுதி விசாரணையை ஜனவரி 10-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்திருந்தது.

மேல்முறையீடு
அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் வழக்கை தொடர்ந்து நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் மேலும் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் செந்தில்பாலாஜி மீதுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், சென்னை மத்திய குற்றப்பிரிவு மீண்டும் விசாரிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதற்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் செந்தில்பாலாஜி சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இன்று விசாரணை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த பாலாஜி சார்பில் வக்கீல் பாலாஜி ஸ்ரீனிவாசன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் கடந்த 10ஆம் தேதி ஆஜரானார். அப்போது அவர், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. மேல்முறையீடு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று அவர் கூறினார். முறையீட்டை ஏற்ற உச்ச நீதிமன்றம், மேல்முறையீடு மனு நவம்பர் 18-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தது.

முக்கிய உத்தரவு
அதில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நவம்பர் 23-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என தெரிவித்தனர். அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் மேல்முறையீடு மனு தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, இறுதி விசாரணையை ஜனவரி 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. மேலும் மோசடி விவகாரம் தொடர்புடைய வழக்கு ஆவணங்களை தற்போதுள்ள நிலையிலேயே பத்திரமாக வைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications