தருண் தேஜ்பாலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்த உச்ச நீதிமன்றம் மறுப்பு
டெல்லி: 2013 ஆம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில், பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு கால சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோவாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வின் போது, தன்னுடன் பணியாற்றிய இளம் பெண் பத்திரிகையாளரை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெஹல்கா பத்திரிகை ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, கடந்த 2021 ஆம் ஆண்டு கோவா கீழ் நீதிமன்றம் அவரை விடுவித்தது. கீழமை நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை மும்பை உயர்நீதிமன்றத்தின் கோவா அமர்வில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய விடுதலை உத்தரவை ரத்து செய்த மும்பை உயர் நீதிமன்ற கோவா அமர்வு தருண் தேஜ்பால் குற்றவாளி என அதிரடியாக தீர்ப்பளித்தது.
மேலும், அவருக்கான தண்டனை விவரங்களை இன்று பிற்பகலில் அறிவிக்கப்பட்டன. அதன்படி, தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தருண் தேஜ்பால் சரணடைவதற்கு நீதிமன்றம் இரண்டு வார கால அவகாசம் அளித்துள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் தருண் தேஜ்பால். தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தருண் தேஜ்பால் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ். பிரசன்னா பி. வராலே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
தருண் தேஜ்பால் மற்றும் கோவா அரசு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள் அமர்வு, தண்டனையை நிறுத்தி வைக்க விரும்பவில்லை என்று தெரிவித்து தீர்ப்பளித்துள்ளது.



Click it and Unblock the Notifications
