தாஜ்மஹால் சர்ச்சையை கிளப்புவோரை சிறையில் அடைங்க..பிரதமர் மோடிக்கு புகார் அனுப்பிய ‛முகலாயர் வாரிசு
டெல்லி: தாஜ்மஹால் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுபவர்கள் மீது நடவடிக்கை கோரி முகலாயர்களின் வாரிசாக கூறி வரும் ஆரீப் யாக்கூப்புத்தீன் ஆக்ரா காவல் நிலையத்தில் பரபபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். மேலும் இதுதொடர்பான புகாரை பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் அனுப்பியுள்ளார்.
இந்தியாவில் கடந்த சில மாதமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக வழிப்பாட்டு தலங்கள், புராதன சின்னங்கள் குறித்து சிலர் கருத்து தெரிவிப்பது விவாதப்பொருளாகி விடுகிறது.
மேலும் கோவில்கள் இடிக்கப்பட்டு மசூதிகள் கட்டப்பட்டுள்ளதாக கூறி வடஇந்தியாவில் பல்வேறு இடங்களில் வாதம், பிரதி வாதம் வைக்கப்பட்டு வருகிறது.

தாஜ்மஹால் சர்ச்சை
இதற்கு உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலும் விதிவிலக்கல்ல. பாஜக எம்பி தியாகுமாரி சமீபத்தில் பேசுகையில், ‛‛தாஜ்மஹால் எங்களுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளது. எங்களின் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தின் நிலத்தை அவர் கைப்பற்றி தாஜ்மஹால் கட்டியுள்ளார். இதுதொடர்பான ஆவணங்கள் உள்ளன. தற்போது நீதிமன்றம் இதுதொடர்பான ஆவணங்களை கேட்டால் நாங்கள் வழங்க உள்ளோம்'' என தெரிவித்தார். இதையடுத்து பலர் கருத்து தெரிவிக்க துவங்கினர். மேலும் தாஜ்மஹால் ரகசிய அறையில் இந்து கடவுள்களின் சிலைகள் இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்தனர்.

வழக்கு தள்ளுபடி
முன்னதாக, தேஜோலாயா எனும் சிவன் கோயிலை இடித்து தாஜ்மஹாலை முகலாய மன்னர் ஷாஜகான் கட்டியதாகப் புகார் கூறப்படுகிறது. இந்துத்துவாவினர் கூறும் இப்புகாரில் தாஜ்மகாலினுள் இந்துக் கடவுள்களின் சிலைகள் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர். இதன் மீது அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ அமர்வில் தொடுக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.

போலீசில் புகார்
இந்நிலையில் முகலாயர்களின் கடைசி வாரிசாகக் கூறிக்கொள்ளும் ஆரீப் யாக்கூப்புத்தீன் ஆக்ரா காவல்நிலையத்தில் இன்று புகார் ஒன்றை வழங்கினார். அதில், "கடந்த சில மாதங்களாக தாஜ்மகால் மீது பல்வேறு வகையிலான சர்ச்சைகள் கிளப்பி விடப்படுன்றன. கீழ்த்தரமானப் புகழ்ச்சி பெறுவதற்காக உலக அதிசயமான தாஜ்மகால் மீது புகார் செய்வதாகவும் கருதப்படுகிறது. இதுபோன்றவர்கள் மீது உத்தரப் பிரதேசப் போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமருக்கு அனுப்பி வைப்பு
மேலும் அயோத்தி மடத்துறவியான பரமஹன்ஸ் ஆச்சார்யா, பாஜகவின் செய்தித்தொடர்பாளர் ரஜ்னீஷ்சிங் மற்றும் மத்ஸ்யேந்தர கோஸ்வாமி உள்பட பலரது மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதோடு, மதநல்லிணக்கத்தை குலைக்க முயற்சிப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி இந்த புகாரின் நகல், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.

யார் இந்த நபர்?
போலீஸ், பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு புகார் செய்துள்ள ஆரீப் யாக்கூப்புத்தீன் தன்னை முகலாய மன்னரின் வாரிசாக கூறி கொள்கிறார். அதாவது கடைசி முகலாய மன்னரான பகதூர் ஜபர் ஷாவின் கொள்ளுப்பேரனாக கூறி இந்த புகாரை அளித்துள்ளார். முன்னாதக இவர் தன்னை பாபர் மசூதியின் முத்தவல்லியாக அமர்த்தும்படியும் உத்தரப் பிரதேச சன்னி மத்திய வக்பு வாரியத்துக்கு கோரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications