தமிழக பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை.. மாஜி சிறப்பு டிஜிபி கோரிக்கையை டிஸ்மிஸ் செய்த உச்சநீதிமன்றம்
சென்னை: பெண் எஸ்.பி.யிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தமிழக காவல்துறை சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் முந்தைய முதல்வரான எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி 21ம் தேதியன்று திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அதற்கான, பாதுகாப்பு மேற்பார்வையை முன்னாள் சுகாதாரத்துறை செயலாளரின் கணவரான சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. மேற்கொண்டார்.
இதனையடுத்து, சிறப்பு டி.ஜி.பி பாதுகாப்பு பணிமுடிந்து சென்னை திரும்பியபோது, மரியாதை நிமித்தமாக சந்தித்த பெண் எஸ்.பி.யை தனது காரில் ஏறும்படி கூறி வாகனத்தில் வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி உள்துறைச் செயலாளரிடமும், காவல்துறை தலைவரிடம் புகார் அளித்துள்ளார்.

பாலியல் தொல்லை
இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக தமிழக திட்டம் மற்றும் வளர்ச்சித் துறைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஆறு பேர் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டது, மேலும், சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர், அதேவேளையில் புகாருக்கு உள்ளான சிறப்பு டிஜிபி.யும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த பாலியல் புகார் தொடர்பான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து விசாரித்து சிறப்பு டி.ஜி.பி மீதான வழக்கு விசாரணையை கண்காணித்தும் வந்தது. இந்நிலையில், தன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு பாற்றக்கோரியும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை சிறப்பு டி.ஜி.பி, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

விழுப்புரம் நீதிமன்றம்
இந்த வழக்கை, டிசம்பர் 20ம்தேதிக்குள் விரைந்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, கடந்த 9ம் தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது. குற்றம் சாட்டப்பட்ட இருவரும் நேரில் ஆஜராகினர். அடுத்தகட்ட விசாரணைக்கு 16ம்தேதி ஆஜராகுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஆஜராகவில்லை
ஆனால், , முன்னாள் சிறப்பு டிஜிபி, எஸ்பி ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்களது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்து வெளிமாநில நீதிமன்றத்திற்கு மாற்றி, இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளோம். தமிழக அரசின் பதிலுக்கு, கால அவகாசம் கேட்டுக்கொண்டதால், இதுதொடர்பான விசாரணையை 18ம்தேதிக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி பெஞ்ச் ஒத்தி வைத்துள்ளது என்றனர். இவ்வாறு இவர்கள் குறிப்பிட்ட இந்த வழக்கு, அதாவது, விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரிய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில், விசாரணைக்கு வந்தது. ஆனால், வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

உச்சநீதிமன்றம் மறுப்பு
இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி யு.யு.லலித் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான சிறப்பு டிஜிபி சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகள் தனக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் குறிப்பாக காழ்ப்புணர்ச்சி காரணமாக தன்னுடன் பணியாற்றிய சில அதிகாரிகள் தனக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் தனக்கு எதிரான வழக்கின் விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், ஆனால் அந்த விசாரணை நேர்மையுடன் நடைபெற வேண்டும், ஆனால் விசாரணை தமிழகத்தில் நடைபெற்றால் அது நேர்மையாக இருக்காது, தனக்கு உரிய நியாயமும் கிடைக்காது. எனவே வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றி விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைக்கப்பட்டது

தமிழக அரசு வழக்கறிஞர் மறுப்பு
அப்போது குறுக்கிட்ட தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உரிய சட்ட ரீதியிலான உதவிகளும் நியாயங்களும் கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானது அவற்றை உரிய முறையில் விசாரிக்க வேண்டும்.
மேலும் இது பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தான் வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது, குற்றச்சாட்டுக்கு ஆளானவர் காவல் துறை டி.ஜி.பி.க்கு ஆவார், எனவே அவருக்கு எதிரான வழக்கினை தினசரி நடத்தி உரிய நீதியினை கிடைக்கச் செய்யவே உயர்நீதிமன்றம் தலையிட்டது எனவே, விசாரணைக்கு தடை விதிக்கக்கூடாது, வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கூடாது என வாதிடப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் வாத, விவாதங்கள்
அப்போது மீண்டும் தன் தரப்பு வாதங்களை முன் வைத்த சிறப்பு டிஜிபி தரப்பு வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டியதில்லை என்றும் அவ்வாறு விசாரிப்பதில் உள்நோக்கம் இருப்பதாக தோன்றுவதாகவும் இந்த விவகாரத்தை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து கண்காணிப்பு செய்கிறது அது தேவையில்லாத ஒன்று, மேலும் குற்றம்சாட்டப்பட்டவர் ஒரு நேர்மையான அதிகாரி ஆவார், எனவே வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதைத்தான் அஞவர் விரும்புவதாக வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வேறு மாநிலத்திறகு மாற்ற வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தனர். அதே நேரத்தில் சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிரான வழக்கு விசாரணை விவகாரத்தை கண்காணிப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications