"ஹெல்த் முக்கியம்.. அது இல்லைனா.." மாணவர்களிடம் சொல்லிவிட்டு.. மேடையிலேயே சரிந்த ஐஐடி கான்பூர் டீன்
டெல்லி: கான்பூர் ஐஐடியில் டீன் சமீர் காண்டேகர் என்பவர் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
மாறி வரும் வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணங்களால் உடல்நிலை பாதிப்பு இப்போது பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. குறிப்பாக மாரடைப்பு இப்போது பரவலாக அதிகரித்து வருகிறது.

முன்பு வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு அதிகம் ஏற்பட்டது. ஆனால், இப்போது பரவலாக மாரடைப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. இளைஞர்கள், குழந்தைகளுக்கும் கூட மாரடைப்பு ஏற்படுகிறது.
மாரடைப்பு: அதிலும் கொரோனா பரவலுக்குப் பிறகு இதுபோன்ற பாதிப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளது. திடீர் திடீரென இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு ஏற்படுகிறது. ஆய்வாளர்களும் கூட தீவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்த சில ஆண்டுகளுக்குத் தீவிர உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். நாடு முழுக்க திடீர் திடீரென மாரடைப்பு ஏற்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
பேராசிரியர்: அப்படியொரு சம்பவம் தான் ஐஐடி கான்பூரில் நடந்துள்ளது. ஐஐடி கான்பூரில் டீன் சமீர் காண்டேகர், உடல் நலம் குறித்துச் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருக்கும் போதே திடீரென மாரடைப்பு காரணமாக மேடையில் சரிந்து விழுந்தார். உடனடியாக அருகே இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் மாணவர் சந்திப்பில் உரையாற்றும் போது, திடீரென அவருக்கு அதிகமாக வியர்க்கத் தொடங்கியுள்ளது. அப்போதே அவரது உடல்நிலையில் ஏதோ பிரச்சினை என்பது உணர முடிந்துள்ளது. அப்போது அங்கிருந்தவர்களை நோக்கி, "தயவு செய்து நீங்கள் அனைவரும் உங்கள் உடல்நிலையைப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறியிருக்கிறார்.
சரிந்து விழுந்து உயிரிழப்பு: அதற்குள் அதிகம் வியர்த்துக் கொட்ட ஆரம்பிக்கவே அவர் அப்படியே சரிந்தார். அங்கே என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்குள், அவர் அப்படியே மேடையில் சரிந்தார். இது குறித்து ஐஐடி கான்பூர் பேராசிரியர் ஒருவர் கூறுகையில், "ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவரது உடலில் அதிக கொழுப்பு இருப்பது கண்டறியப்பட்டது. உடல் எடையைக் குறைக்க அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டார். இருப்பினும், அதற்குள் இப்படியொரு சம்பவம் நடந்துவிட்டது" என்றார்.
இது குறித்து முன்னாள் ஐஐடி கான்பூர் இயக்குநர் அபய் கரண்டிகர் கூறுகையில், "இதை நம்பவே முடியவில்லை.. எனது நண்பர் பேராசிரியர் சமீர் காண்டேகரின் திடீரென உயிரிழப்பு செய்தி எங்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. அவர் எப்போதும் ஆற்றல் மற்றும் உற்சாகமாக இருப்பார். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம்" என்றார்.
பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் அவரது ஒரே மகன் பிரவா காண்டேகர் வந்த பிறகுதான் இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்றும் கரண்டிகர் கூறினார். மாணவர்களிடையே பேசும் போது உடல்நிலையைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு டீன் சமீர் காண்டேகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications