சவ்ரவ் தாஸ் - அசுதோஷ் ரங்காவிற்கு ஜெயில்.. அபிஜித் தீப்கேவை மட்டும் டெல்லி போலீஸ் விடுவித்தது ஏன்? பின்னணி
டெல்லி: ஓராண்டு அமைதிக்கு பங்கம் விளைவிக்ககூடாது என்று 'பாண்ட்' எழுதி கொடுத்தும் அதனை மீறி போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி கட்சிகளின் சவ்ரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்காவை மட்டும் போலீசார் திகார் சிறையில் அடைத்துள்ளனர். ஆனால் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கேவை 'பாண்ட்' மீறி போராடினாலும் அவர் நேற்று விடுவிக்கப்பட்டார். இது பலருக்கும் குழப்பம் ஏற்படுத்தி உள்ள நிலையில் அதன் பின்னணி பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக்கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 10ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த சென்றபோது கரப்பான்பூச்சி கட்சியின் 3 முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மும்பையில் இருந்து விமானத்தில் டெல்லிக்கு பயணித்த கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளர்களான சவ்ரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோரை போலீசார் விமானத்தில் வைத்தே கைது செய்தனர்.
அதன்பிறகு மறுநாள் அவர்கள் டெல்லி நிர்வாக எக்ஸிக்கியூட் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டனர். 3 பேருக்கும் தலா ரூ.50 ஆயிரம் பாண்ட் உடன் ஓராண்டு அமைதிக்கு பங்கம் விளைவிக்க கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.
ஆனால் அடுத்த நாளே டெல்லி ஜந்தர் மந்தரில் அனுமதியின்றி சென்று சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். நிர்வாக எக்ஸிக்கியூட் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்ப்படுத்திய போலீசார் 5 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடாது என்ற வாக்குறுதியை மீறியதால் திகார் சிறையில் இருவரும் உள்ளனர். இவர்களின் சிறைவாசம் இன்று முடிவுக்கு வர உள்ளது.
இதேபோல் தான் நேற்று முன்தினம் தடையை மீறி தேசியக்கொடி போராட்டத்தில் ஈடுபட முயன்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கேவை போலீசார் கைது செய்தனர். டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க்கில் தேசியக்கொடி போராட்டத்தை அபிஜித் தீப்கே அறிவித்து இருந்தார். போலீசார் அனுமதி வழங்கவில்லை. அதுமட்டுமின்றி போராட்டத்தில் பங்கேற்க கூடாது என்று அபிஜித் தீப்கேவிடம் போலீசார் அறிவுரை வழங்கி கையெழுத்து வாங்கினார்.
ஆனாலும் அபிஜித் தீப்கே நேற்று முன்தினம் தேசியக்கொடி போராட்டத்துக்கு புறப்பட்டார். அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து புறப்பட்டபோதே போலீசார் கைது செய்தனர். நேற்று நிர்வாக எக்ஸிக்கியூட்டிவ் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டார். சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா போல் இவரும் சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிய ட்விஸ்ட்டாக அவருக்கு ஜாமீன் கிடைத்தது.
இது பலருக்கும் கேள்வியை எழுப்பி உள்ளது.
இதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அபிஜித் தீப்கே, சவ்ரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா என 3 பேரும் தான் கடந்த 10ம் தேதி விமானத்தில் வைத்து கைது செய்யப்பட்டதோடு, ஓராண்டு அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடாது என்ற பிணையில் விடுவிக்கப்பட்டனர். பிறகு தடையை மீறி ஜந்தர் மந்தருக்கே சென்று போராட்டம் நடத்தியதால் சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆனால் முதலில் பிணை எழுதி கொடுத்த அபிஜித் தீப்கே தேசியக்கொடி போராட்டத்தின்போது தடை விதிக்கப்பட் கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க்கிற்கு செல்லவில்லை.அங்கு செல்லும் முன்பே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ததால் அபிஜித் தீப்கேவிற்கு ஜாமீன் கிடைத்தது. ஒருவேளை அபிஜித் தீப்கே தடை விதிக்கப்பட்ட சென்ட்ரல் பார்க்கிற்கு சென்று கைதாகி இருந்தால் ஜாமீன் கிடைத்து இருக்காது. சிறையில் அடைக்கப்பட்டு இருக்கலாம் என்று டெல்லி போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
