ஜனாதிபதி, பிரதமருக்கே இல்லாத அதிகாரம்.. தேனி தவெக எம்எல்ஏ அட்ராசிட்டி.. அண்ணாமலை பரபரப்பு புகார்
மதுரை: தவெக ஆட்சியமைத்து 6 மாதங்களாகிறது. கிட்டத்தட்ட ஹனிமூன் பீரியட் முடிந்துவிட்டது. மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு, தவெக நிர்வாகிகளின் அட்ராசிட்டி ஆகியவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் ஜனாதிபதி, பிரதமரிடம் இல்லாத அதிகாரத்தை கையில் எடுத்து தேனி தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா அட்ராசிட்டி செய்ததாக அண்ணாமலை புகார் கூறியுள்ளார்.
மதுரையில் வீ த லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தேனியில் தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா, காவல்துறை செய்ய வேண்டிய வேலையை அவரே செய்கிறார். வாகன தணிக்கையை செய்வதற்கு ஜனாதிபதி, பிரதமருக்கு கூட அதிகாரம் இல்லை. ஒரு ரோட்டிற்கு வந்து வாகனத்தை நிறுத்தும் அதிகாரம் இருவருக்குமே இல்லை. காக்கி சட்டை அணிந்து சப் இன்ஸ்பெக்டருக்கு மேல் உள்ள காவல்துறையினருக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது.

காவல்துறையின் வேலையை தவெஎ எம்எல்ஏ
அவர்கள் மட்டுமே ஸ்பாட்டில் அபராதம் விதிக்க முடியும். எஸ்எஸ்ஐ கேள்வி கேட்கலாம். ஆனால் தமிழகத்தில் சில தவெக எம்எல்ஏக்களுக்கு சட்டம் என்ன, ஒழுங்கு என்ன, எம்எல்ஏவின் அதிகாரத்திற்கு என்ன செய்ய வேண்டும், கூடாது என்பதே தெரியவில்லை. தேனியின் எம்எல்ஏ ரோட்டிற்கு வந்து வாகனங்களை நிறுத்தி காவல்துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்குகிறார். அதை வேறு ரீல்ஸாக எடுத்து போடுகிறார்கள். காவல்துறையின் வேலையை ஏன் தவெக எம்எல்ஏ செய்ய வேண்டும்.
அதனால் தயவு செய்து முதலமைச்சர் தவெக எம்எல்ஏக்களை அழைத்து, என்ன வேலை செய்ய வேண்டும், கூடாது என்பதை பயிற்சி வகுப்பாக எடுக்க வேண்டும். சோத்துப்பாறை அணையை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சரியான முறையில் திறக்க வேண்டும். அந்தப் பகுதியின் தவெக இணைச்செயலாளர் ஷேக் அலி அவர் தலைமையில் ஒரு குழு திறந்து வைத்து, அதையும் ரீல்ஸாக போடுகிறார்கள். இதெல்லாம் மதுரையை சுற்றி நடந்த சம்பவங்கள்.
விலைவாசி உயர்வு பிரச்சனை
எதற்காக மக்களுக்கு இப்படி பிரச்சனையை ஏற்படுத்துகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். தமிழகம் மிக அதிகமாக விலைவாசி உயர்வை பார்க்கிறது. மத்திய அரசு தினமும் தங்கள் இணையதளத்தில் விலைவாசியை போடுகிறார்கள். கடந்த வருடம் தமிழகத்தில் இதே நாள் பொன்னி சன்ன ரக அரிசி கிலோ ரூ.57 ஆக இருந்தது, இப்போது 80 ஆக உயர்ந்துள்ளது. சர்க்கரை கடந்தாண்டு ரூ.45, இந்தாண்டு ரூ.61 ஆக உயர்ந்துள்ளது.
துவரம் பருப்பு கடந்தாண்டு ரூ.113, இப்போது 152 ஆக அதிகரித்துள்ளது. சின்ன வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் 35 முதல் 61 சதவீதம் உயர்ந்துள்ளது. முதலமைச்சரின் கவனம் அத்தியாவசிய பொருட்களின் விலையை நோக்கி இருக்க வேண்டும். விலையை கட்டுப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. முதலமைச்சரின் நிர்வாகக் கட்டுக்குள்ள உள்ளவற்றுக்கு நேரம் கொடுத்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications
