நாகர்கோவில் ரயில் பெட்டிக்கு அடியில் யாரந்த பெண்.. குஜராத் வரை நீளும் கன்னியாகுமரி தங்க மோதிர மர்மம்
கன்னியாகுமரி: ரயில் நிலையத்தில் ஆள் நடமாட்டம் இருக்கும். பயணிகள் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ரயில் பெட்டிக்குள் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 31 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கொல்லப்பட்ட பெண் யார் என்ற கேள்விக்கும் இன்னும் விடை கிடைக்கவில்லை.
தனிமையில் இருந்த பெட்டி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தின் 5-வது நடைமேடையில் நாகர்கோவில் - கோட்டயம் இடையே இயக்கப்படும் ரயிலின் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி, பராமரிப்பு பணிக்காக கடந்த 11-ம் தேதி தனியாக நிறுத்தப்பட்டிருந்தது. பயணிகள் பயன்பாட்டில் இல்லாத இந்தப் பெட்டிக்குள் பெண்ணின் உடல் கிடப்பது 18-ம் தேதி தெரியவந்தது.

உடலை மீட்ட ரயில்வே போலீசார், போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்தது.. அதில், அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. அவருக்கு 45 முதல் 50 வயதுக்குள் இருக்கலாம் என்றும், உடலில் பலத்த தாக்குதலுக்கான அடையாளங்கள் இருந்ததும் தெரியவந்தது.
ரயில் பெட்டிக்குள் அக்கிரமம்
இதையடுத்து போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.. அதில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.. அதாவது, கடந்த 14-ம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் அந்த பெண் 5-வது நடைமேடை பகுதியில் நின்றிருந்தார். அப்போது ரயில்வே ஸ்டேஷனில் சுற்றித்திரிந்த ஐயப்பன் அவரை வலுக்கட்டாயமாக ரயில் பெட்டிக்குள் இழுத்துச் சென்றுள்ளார்.
அங்கு பாலியல் வன்கொடுமை செய்ததுடன், காலால் மிதித்தும் கையால் குத்தியும் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அந்த பெண் உயிரிழந்துள்ளார். பிறகு சடலத்தை ரயில் சீட்டுக்கு அடியில் தள்ளி மறைத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிசிடிவி தந்த துப்பு
குற்றவாளியை கண்டுபிடிக்க ரயில்வே போலீசார் 3 தனிப்படைகளை அமைத்தனர். ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, கடந்த 14-ம் தேதி காலை 8 மணியளவில் வெள்ளை வேட்டி, சட்டை அணிந்த ஒருவர் சம்பந்தப்பட்ட ரயில் பெட்டியில் இருந்து வெளியேறுவது பதிவாகியிருந்தது.
அந்த நபர் சென்ற பாதையை கண்டறிய நுழைவாயில் அருகே இருந்த கேமராவையும் ஆய்வு செய்தனர். அங்கும் அதே நபரின் உருவம் பதிவாகியிருந்தது. இந்தக் காட்சிகளை குமரி மாவட்டத்தில் உள்ள மற்ற காவல் நிலையங்களுக்கு அனுப்பி விசாரித்தபோது, அவர் செண்பகராமன்புதூரை சேர்ந்த ஐயப்பன் என்பது தெரியவந்தது.
மலைப்பகுதியில் கைது
ஐயப்பன் மீது ஏற்கனவே ஆரல்வாய்மொழி போலீஸ் ஸ்டேஷனில் திருட்டு வழக்கு இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் செண்பகராமன்புதூர் பகுதிக்குச் சென்றனர்.
அங்குள்ள மலைப்பகுதியில் பதுங்கியிருந்த ஐயப்பனை பிடித்து விசாரித்தனர். பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை கைது செய்தனர். கொலை நடந்த தினத்தில், ஐயப்பன் அணிந்திருந்த டிரஸ்களை ஒரு புதருக்குள் வீசியிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அந்த டிரஸ்ஸையும் போலீசார் மீட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தான் மட்டுமே ஈடுபட்டதாக ஐயப்பன் சொன்னாலும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வடமாநில பெண்ணா?
கொல்லப்பட்ட பெண்ணின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கொலைக்கு முந்தைய நாளிலும் அவர் ரயில்வே ஸ்டேஷனில் சுற்றித்திரிந்துள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த பனியன், ஜீன்ஸ் பேன்ட் ஆகியவற்றை வைத்து இப்போது கண்டெடுக்கப்பட்ட உடல் அதே பெண்ணுடையதுதான் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
அந்த பெண்ணின் கையில் இருந்த தங்க மோதிரம் விசாரணையில் புதிய தடயத்தைக் கொடுத்துள்ளது. மோதிரத்தில் இருந்த ஹால்மார்க் முத்திரையை வைத்து ஆய்வு செய்தபோது, அது குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தயாரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இதனால் அந்த பெண் குஜராத் அல்லது ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரது சொந்த ஊர், குடும்பத்தினர் குறித்த விவரங்களை கண்டறியும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். மொத்தத்தில் இந்த சம்பவம் குமரியில் அதிர்வலையை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது...!!!




Click it and Unblock the Notifications
