தங்கத்தில் கலப்படம்.. சீனாவின் ரீனியம் எழுப்பிய பூகம்பம்.. இந்திய தர நிர்ணய ஆணையம் கடும் எச்சரிக்கை
சென்னை:தங்கத்தில் கலப்படம் செய்யப்படுவதாகவும், சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ரீனியம் என்ற வேதிப்பொருளை கலப்பதாக கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் தீவிரமாக தகவல் பரவி வருகிறது. தங்கத்தில் கலப்படம் செய்வதற்கான இத்தகைய பொருட்களை தயாரிப்பவர்கள், வினியோகிப்பவர்கள் அல்லது பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தர நிர்ணய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது..
தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. பலரும் நகைகள் வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் நகை விஷயத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. தங்கத்தின் தரத்திற்கு உத்தரவாதம் என்றால் , இந்தியாவின் பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை தான். ஆனால் ஹால்மார்க் முத்திரை மற்றும் சுத்திகரிப்பு முறைகளில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆய்வு
குறிப்பாக போலி என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி தங்கத்தில் சீனாவின் 'ரீனியம்' பவுடர் பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஹந்தி பத்திரிக்கை ஒன்று வெளியிட்ட செய்திகளின் படி, ராஜஸ்தானில் உள்ள நகைக்கடைகளோடு இணைந்து ஒரு முயற்சியை மேற்கொண்டது. தங்க நகைகளில் நடைபெறும் புதிய வகை கலப்படத்தை அம்பலப்படுத்துவதற்காக இந்த சோதனை நடந்துள்ளது
ரீனியம் என்ற உலோகப்பொடி
இதன்படி ரீனியம் என்ற உலோகப்பொடியை வாங்கி அதைக்கொண்டு தங்க நகைகள் உருவாக்கப்பட்டன. சுமார் 7 கிராம் தங்கத்துடன் 1 கிராம் ரீனியம் பொடியை கலந்து ஒரு சவரன் எடையில் நகைகள் தயாரிக்கப்பட்டன. இந்த நகையில் உண்மையான தங்கத்தின் அளவு சுமார் 81.73% (ஏறத்தாழ 20 காரட்) மட்டுமே இருந்தது.
இவ்வாறு கலப்படம் செய்யப்பட்ட நகையை ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள ஹால்மார்க் மையங்களில் சோதனைக்கு உட்படுத்தினார்கள்.
அச்சு அசல் தங்கம்
நகைக்கடைகளில் உள்ள வழக்கமான பரிசோதனை இயந்திரங்களில் (XRF machines) சோதித்தபோதும், அந்த இயந்திரங்களால் ரீனியம் கலப்படத்தைக் கண்டறிய முடியவில்லை. மாறாக, அந்த நகைக்கு 22 காரட் (916) ஹால்மார்க் சான்றிதழும் கிடைத்திருக்கிறது. ரீனியம் பொடி கலந்த தங்கத்தை வாங்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கு பவுனுக்கு ரூ.15,000 வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், ரீனியம் பொடியில் தங்கத்தை உருக்குவதையும், மீண்டும் தங்கமாக வடிவமைத்த பிறகு அது அச்சு அசல் மாறாமல் தங்கமாக இருந்துள்ளது.
இந்த செய்தி வெளியானதால், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேநேரம் இவ்வாறு தங்கத்தில் கலப்படம் செய்ய முடியாது என நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர். எனினும் தங்கத்தில் எத்தகைய கலப்படமும் செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தர நிர்ணய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியத் தர நிர்ணய ஆணையம் தகவல்
இது தொடர்பாக அகில இந்திய ரத்தினம், நகை உள்நாட்டு கவுன்சில் தலைவர் ராஜேஷ் ரோக்டே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- "தங்கத்தில் கலப்படம் செய்யப்படுவதாக வெளியான தகவல் இந்தியத் தர நிர்ணய ஆணையத்தின் (பி.ஐ.எஸ்.) கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கடும் நடவடிக்கை
தங்கத்தில் கலப்படம் செய்வதற்கான இத்தகைய பொருட்களை தயாரிப்பவர்கள், வினியோகிப்பவர்கள் அல்லது பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தர நிர்ணய ஆணையம் எங்களுக்கு உறுதியளித்துள்ளது. தங்கத்துடன் கலப்பதற்கான இத்தகைய பொடி அல்லது பொருள் ஏதேனும் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
புகார் இல்லை
ரீனியத்தை தங்கத்துடன் கலக்கும்போது, தங்கத்தின் தூய்மை அதற்கு விகிதாசாரமாக அதிகரிக்காமல் அதன் எடை மட்டும் அதிகரிக்கக்கூடும் என்ற முறைசாரா தகவல்களை சில தரப்புகளிலிருந்து பெற்று வருகிறோம். இருப்பினும், நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் இது தொடர்பான முறையான புகார் எங்களுக்கு வரவில்லை" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




Click it and Unblock the Notifications
