ஜி20 மாநாட்டுக்கு இந்தியா தலைமையேற்பு.. ஏன் முக்கியம்? என பத்திரிகை சந்திப்பு நடத்திய பிரதமர் மோடி!
டெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து ஜி20 மாநாடு, ஜி20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை உள்பட பல்வேறு விஷயங்கள் பற்றி பேசியதோடு எம்பிக்கள் முறையாக விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என அவர் அட்வைஸ் வழங்கினார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது.
மொத்தம் 17 அமர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளள் செய்யப்பட்ட நிலையில் காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியது.
பரபர சூழல்.. நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் துவங்கியது.. ராஜ்யசபா தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்பு

பிரதமர் மோடி பத்திரிகையாளர் சந்திப்பு
இந்நிலையில் தான் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஜி20 மாநாட்டில் இந்தியா தலைமையேற்பது பற்றியும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பற்றியும், எதிர்க்கட்சிகள் அனைவரும் விவாதங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் கூறினார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:

ஜி20 தலைமை ஏன் முக்கியம்?
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாள் இன்று கூட உள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு முன்பு நாங்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் சந்தித்தோம். அதன்பிறகு தற்போது ஜி20 மாநாட்டுக்கு இந்தியா தலைமையேற்ற பிறகு தற்போது நாடாளுமன்றம் கூட உள்ளது.
உலகளாவிய சமூகத்தில் இந்தியா முக்கிய இடத்ததை பிடித்த விதம், இந்தியா மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில் ஜி20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை ஏற்கிறது. ஜி20 மாநாடு என்பது இந்தியாவின் திறமைன உலகுக்கு காட்ட கிடைத்த நல்ல வாய்ப்பாக அமையும். மேலும் ஜனநாயகத்தின் தாயாக, பன்முகத்தன்மையுடன் இந்தியா இருப்பதை உலகறிய செய்ய முடியும்.

முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு
இதனால் இந்த அமர்வில் உலகளாவிய சூழ்நிலைக்கு ஏற்ப நாட்டை வளர்ச்சியின் பாதையில் புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதற்கும், நாட்டை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை மனதில் வைத்து முக்கிய முடிவுகள் எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு அனைத்து கட்சிகளும் விவாதங்கள் மூலம் மதிப்பளிக்கும் என நம்புகிறேன். அனைத்து கட்சி தலைவர்களும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள், முதல் முறையாக தேர்வாகி உள்ள எம்பிக்களின் ஒளிமயமான எதிர்காலத்துக்காகவும், ஜனநாயகத்தை எதிர்கால சந்ததியை தயார்படுத்தும் வகையில் அவர்களை விவாதங்களில் பங்கேற்க அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும். மேலும் அனைத்து கட்சி எம்பிக்கள் விவாதங்களில் அதிகமாக கலந்து கொள்ள வேண்டும்.

வலியை புரிந்து கொள்ளுங்கள்
நாடாளுமன்றத்தில் ஏற்படும் குழப்பமான நிலையால் விவாதங்கள் தடைப்படுகின்றன என இளம் எம்பிக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கற்றல் மற்றும் புரிதல் இன்மை ஏற்படுவதாக அவர்கள் கூறியதோடு நாடாளுமன்றம் முறையாக நடைபெற வேண்டும் என விரும்புகின்றனர். இதுமட்டுமின்றி சபை நடவடிக்கைகள் முடக்கப்பட்டு ஒத்திவைக்கப்படுவதன் மூலம் பிரச்சனைகள் பற்றி வாய்ப்பு கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுவதாக எதிர்க்கட்சி எம்பிக்களும் கூறுகின்றனர். இதனால் எம்பிக்களின் வலியை எதிர்க்கட்சி தலைவர்களும், அனைத்து கட்சியினரும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஜெகதீப் தன்கருக்கு வாழ்த்து
ராஜ்யசபா தலைவராக இன்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு வாழ்த்துகள். பழங்குடி வகுப்பை சேர்ந்த திரெளபதி முர்மு ஜனாதிபதியாக உள்ள நிலையில் ஒரு விவசாயியின் மகனாக ஜெகதீப் தன்கர் ராஜ்யசபாவை வழிநடத்த உள்ளார். அவர் எம்பிக்களுக்கு உத்வேகம் அளித்து ஊக்கம் செய்வார் என நம்புகிறேன்'' என பிரதமர் மோடி கூறினார்.