நீங்க விளையாடி மானம் போகுது.. போதும்! வருகிறார் யுவராஜ் சிங்! அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்
டெல்லி: 'சிக்ஸர் கிங்' என்றபோது, யுவராஜ் சிங் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்க உள்ளதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
டீம் இந்தியாவின் பெரிய மேட்ச் வின்னர்களில் ஒருவர் யுவராஜ் சிங். சிக்ஸர் கிங் என்று செல்லப் பெயர் வைத்து அழைக்கும் அளவுக்கு அநாயாசமாக சிக்சர்களை விளாசியவர் யுவராஜ் சிங். 6 பந்துகளில் 6 சிக்சர்கள் விளாசி சாதித்தவர்.
2011 உலகக் கோப்பையின் ஹீரோவாக இருந்தவர் யுவராஜ் சிங்.

பிப்ரவரி
இந்த நிலையில்தான், தான், 2017ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய ஆட்டம் தொடர்பான வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ள யுவராஜ் சிங், பிப்ரவரி மாதம் களம் காண உள்ளதாக தெரிவித்துள்ளார். "உங்கள் தலைவிதியை கடவுள் தீர்மானிக்கிறார். பொதுமக்களின் கோரிக்கையின் பேரில், பிப்ரவரியில் மீண்டும் களமிறங்குவேன். இந்த உணர்வை விட எனக்கு எதுவும் முக்கியமானதாக இருக்காது. இதற்காக அனைவருக்கும் நன்றியுடன் இருப்பேன். " என்று கூறியுள்ளார்.

நம்பிக்கை நட்சத்திரம் யுவராஜ் சிங்
யுவராஜ் சிங் இந்தியாவுக்காக 40 டெஸ்ட், 304 ஒருநாள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 11000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார், இதில் 17 சதங்கள் மற்றும் 71 அரை சதங்கள் அடங்கும். யுவராஜ் முழு ஃபார்மில் இருந்தபோது, அவரை கட்டுப்படுத்துவது எதிரணியினருக்கு மிகவும் கடினமாக இருந்தது. 11000 ரன்களுக்கு மேல் அடித்ததைத் தவிர, அவர் தனது சுழல் பந்து மூலம், 148 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இரண்டு முறை 4 விக்கெட்டுகள் மற்றும் ஒரு முறை 5 விக்கெட்டுகள் அதில் அடங்கும்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு
யுவராஜ் சிங் 2000ம் ஆண்டில் நைரோபியில் ஐசிசி நாக் அவுட் போட்டியில் இந்தியாவிற்காக முதலில் களம் கண்டார். அடுத்த 17 ஆண்டுகள் இந்தியாவுக்காக விளையாடினார். 2017 30 ஜூன் அன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இந்தியாவிற்காக யுவராஜ் சிங் கடைசியாக விளையாடினார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக 2019ம் ஆண்டு அறிவித்தார்.

என்ன வீடியோ
நவம்பர் 2ம் தேதியான இன்று அவர் சமூக ஊடகங்களில் பதிவேற்றிய வீடியோ 2017 இல் கட்டாக்கில் இங்கிலாந்துக்கு எதிராக அவர் 150 ரன்கள் எடுத்தத வீடியோவாகும். அதில் யுவராஜ் சிங் 127 பந்துகளில் 21 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் இந்த ரன்னை எடுத்தார். இந்த இன்னிங்ஸின் போது, அவர் எம்.எஸ் தோனியுடன் 256 ரன்களின் பார்ட்னர்ஷிப் ஆட்டம் போட்டார். இந்த போட்டியில் தோனி 134 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டீம் இந்தியா
நடப்பு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமாக ஆடி வருகிறார்கள். இந்த நிலையில் யுவராஜ் சிங் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புக்கு, ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு வரவேற்பு தெரிவித்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதேநேரம் எந்த வகை கிரிக்கெட்டில் அவர் கால் பதிக்கப் போகிறார் என்பதை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications