கொடைக்கானல் அருகே திமுக கவுன்சிலர் வந்த ஜீப்.. அதிகாலையில் உள்ளே இருந்ததை பார்த்து அரண்ட வனத்துறை
திண்டுக்கல்: தமிழ்நாட்டின் சுவிட்சர்லாந்து என்று போற்றப்படும் கொடைக்கானல் அருகே உள்ள மன்னவனூர் கிராமத்தில் யானை தந்தம் கடத்தியதாக திமுக கவுன்சிலர் உள்பட 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். யானை தந்தம், ஜீப்பை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது..
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலம் ஆகும். மலைகளின் இளவரசி என்று போற்றப்படும் இந்த நகரத்தில் இருந்து 34 கிலோமீட்டர் தொலைவில் மேல்மலையில் உள்ள கிராமம் மன்னவனூர். இந்த மலைக்கிராமம் கடல் மட்டத்தில் இருந்து 5,413 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த கிராமத்தில் உள்ள ஏரி, ஆட்டுப்பண்ணை, ஜீப் சவாரி, பூங்கா உள்ளிட்டவற்றை பார்த்த பலர் இதனை தமிழ்நாட்டின் சுவிட்சர்லாந்து என்று போற்றுகிறார்கள். இந்த கிராமத்தில் ஒருவர் கடந்த ஓராண்டாக யானை தந்தம் வைத்திருப்பதாகவும், அதனை அவர் விற்பனை செய்ய முயற்சிப்பதாகவும் தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின கட்டுப்பாடு பிரிவினருக்கு ரகசியமாக தகவல் வந்தது.
இதைத்தொடர்ந்து திண்டுக்கல் வனப்பாதுகாப்பு பிரிவினர், மன்னவனூர் வனச்சரக ஊழியர்கள் ஆகியோருடன் இணைந்து வன உயிரின கட்டுப்பாடு பிரிவு அதிகாரிகள் மன்னவனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை மன்னவனூர் கைகாட்டி அருகே வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஜீப்பை நிறுத்தி சோதனையிட்டனர். அதன் இருக்கைக்கு அடியில் யானை தந்தம் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருப்பதை வனத்துறையினர் கண்டுபிடித்தார்கள்.. பின்னர் ஜீப்பில் வந்தவர்களை பிடித்து வனத்துறையினர் விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் மன்னவனூரை அடுத்த கீழானவயல் பகுதியை சேர்ந்த சந்திரசேகர், பட்டிவீரன்பட்டியை சேர்ந்த முருகேசன், பொன்வண்ணன் ஆகியோர் தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் மறைத்து வைத்திருந்த யானை தந்தத்தை கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர் வாங்க விரும்பினாராம். இதுபற்றி பட்டிவீரன்பட்டியை சேர்ந்த 2 பேர் தெரிவித்தார்களாம். அவர்களிடம் காண்பிப்பதற்காக பட்டிவீரன்பட்டிக்கு யானை தந்தத்தை அவர்கள் 3 பேரும் எடுத்துச்சென்றதாகவும் வனத்துறையினரிடம் கூறினார்கள், இதையடுத்து யானை தந்தம், ஜீப்பை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே சந்திரசேகர் உள்பட 3 பேரையும், மன்னவனூர் வனத்துறை அலுவலகத்துக்கு அதிகாரிகள் அழைத்துச்சென்று தீரிவமாக விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு சந்திரசேகர் உள்பட 3 பேர் மீதும் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன்படி வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தார்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தம் 9 கிலோ எடையும் 5 அடி உயரமும் உடையது. கடந்த ஓராண்டாக சந்திரசேகர், அந்த யானை தந்தத்தை வைத்திருக்கிறாராம். அவருக்கு அந்த தந்தம் எப்படி கிடைத்தது?, தந்தத்துக்காக யானை எதுவும் கொல்லப்பட்டதா? அல்லது உடல்நலம் பாதித்து இறந்த யானையின் தந்தத்தை சந்திரசேகர் வெட்டி எடுத்து வைத்திருந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பட்டிவீரன்பட்டியில் யாரிடம் அவர்கள் தந்தத்தை காண்பிக்க போய் கொண்டிருந்தார்கள்?, அவர்கள் மூலம் தந்தத்தை வாங்க விரும்பிய கேரள மாநிலத்தை சேர்ந்தவர் யார்? என்றும் வனத்துறையினர் விசாரிதது வருகிறார்கள். கைது செய்யப்பட்ட பொன்வண்ணன், பட்டிவீரன்பட்டி பேரூராட்சி 11-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஆவார். இதேபோல் முருகேசன், பட்டிவீரன்பட்டி பேரூராட்சி முன்னாள் துணை தலைவரின் மகன் ஆவார் . யானை தந்தத்தை கடத்திச் சென்ற 3 பேரும் கைது செய்யப்பட்ட சம்பவம் கொடைக்கானல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications