தேவருக்கு வெள்ளியில் ஏன்? வைரத்தில் போட்டிருக்கலாமே.. ஓபிஎஸ்-ஐ விளாசிய திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல்: தேவர் ஜெயந்தி விழாவில், ஓ பன்னீர் செல்வம் தேவருக்கு வெள்ளியில் ஏன் கவசம் வழங்க வேண்டும்?. கொள்ளையடித்த பணத்தில் வைரத்திலாவது கொடுத்து இருக்கலாம் என திண்டுக்கல் சீனிவாசன் ஓ பன்னீர் செல்வத்தை தாக்கி பேசியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குரு பூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
தேவர் குரு பூஜை விழாவில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

தேவர் தங்க கவசம்
கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, தேவர் சிலைக்கு தங்க கவசம் ஒன்றை அணிவித்து இருந்தார். இந்த தங்க கவசம் மதுரையில் உள்ள வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு தேவர் குருபூஜையின் போது எடுத்து அணிவிப்பது வழக்கமாக உள்ளது. அதிமுக பொருளாளர் மற்றும் தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள் இருவரும் கையெழுத்திட்டு பாதுகாப்புடன் பயன்படுத்தப்பட்டு வந்தது.

முத்துராமலிக்க தேவருக்கு வெள்ளிக்கவசம்
அதிமுக தற்போது இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருவதால் நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய் கோட்டாட்சியர் தங்க கவசத்தை பெற்று நினைவிட பொறுப்பாளர்களிடம் வழங்கினார். இதனிடையே, முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம், பசும்பொன் முத்துராமலிக்க தேவருக்கு வெள்ளிக்கவசமும் வெள்ளியிலான ருத்ராட்ச மாலையையும் வழங்கினார். இவற்றின் மொத்த எடை 10.44 கிலோ ஆகும்.

திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
நான் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று தெரிவித்த ஓபிஎஸ் இந்த வெள்ளிக்கவசம் அதிமுக சார்பிலேயே வழங்கப்படுகிறது என்று கூறியிருந்தார். இந்த நிலையில், திண்டுக்கல்லில் அதிமுக 51-ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஓபிஎஸ்சை கடுமையாக விமர்சித்தார். திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

எதற்காக வெள்ளியில் கொடுக்க வேண்டும்
ஜெயலலிதா கொடுத்த தெய்வீக கவசம் தேவர் திருமகனாருக்கு சாத்தப்பட வேண்டும் என்பதால் மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார். ஆனால் வெள்ளியில் கவசத்தை கொடுத்துவிட்டு ஓ பன்னீர் செல்வம் நான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் முறையில் வழங்குவதாக கூறியிருக்கிறார். ஜெயலலிதா கொடுத்த தங்கத்திற்கு ஈடாக என்ன இருக்கிறது. எதற்காக வெள்ளியில் கொடுக்க வேண்டும்.

தேவரை வளர்த்தது இஸ்லாமியர்கள்
கொள்ளையடித்த பணத்தில் வைரத்திலாவது கொடுத்து இருக்கலாம். சாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர் தேவர் திருமகனார். முத்துராமலிங்க தேவரை வளர்த்தது இஸ்லாமியர்கள். பால் கொடுத்து வளர்த்தது ஆதிதிராவிட மக்கள். எல்லா மதத்திற்கும் தேவர் திருமகனார் சொந்தக்காரர்" என்றார்.












Click it and Unblock the Notifications