கமல்ஹாசனுக்கு கூட்டம் கூடும்.. ஆனால் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்.. செல்லூர் ராஜூ விமர்சனம்!
கமல்ஹாசனுக்கு வரும் கூட்டம் அவரை காண்பதற்கு மட்டுமே என்று செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
ஈரோடு: நடிகர் வடிவேலு போன்றோர் வாக்கு சேகரிக்க வரும்போது கூட்டம் கூடும். ஆனால் ஓட்டு கிடைக்காது என்றும், அதுபோலத்தான் கமல்ஹாசனுக்கும் கூட்டம் கூடும். ஆனால் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேசுகையில், சின்னம், கொடி , கட்சி எல்லாம் தாண்டியது தேசம். ஜனநாயகம் வழியாகவும் சர்வாதிகாரம் வந்தடைந்ததற்கு பல சான்றுகள் இருக்கிறது. இன்று இந்தியாவிலும் அது நடந்து கொண்டு இருக்கிறது. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் எனக்கும் உறவு இருக்கிறது. அவரும் பெரியார் பேரன். நானும் பெரியாரின் பேரன். பெரியார் காந்தியாரின் தம்பி.

கமல்ஹாசன் பேச்சு
இன்று விட்டு போன கடமையை செய்ய வந்திருக்கிறேன். நான் அரசியலுக்கு வந்தது லாபத்திற்காக இல்லை. இங்கே வந்திருப்பதும் ஆதாயத்திற்கும் லாபத்திற்கும் இல்லை. விஸ்வரூபம் படம் வெளியான போது என்னை தடுமாற வைத்து சிரித்தார் ஓர் அம்மையார். கருணாநிதி என்னை தொடர்பு கொண்டு ஏதாவது உதவி வேண்டுமா என கேட்டார். இது தேச பிரச்சினை அல்ல. நான் பார்த்துகொள்கின்றேன் என்றேன். இப்போது உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் நான் இருக்கின்றேன் என்றார் ஸ்டாலின் என்று பேசினார்.

கமலை பார்க்க வருகிறார்கள்
இது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், இந்த ஒரு தேர்தலால் மாற்றம் வரப் போகிறதா என்ன? ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக கமல்ஹாசன் பேசி இருக்கிறார். கமல்ஹாசனுக்கு கூட்டம் கூடியதாக சொல்கிறார்கள். கமல்ஹாசன் நடிகர் என்பதால் அவரை பார்ப்பதற்காக மக்கள் வருவார்கள். அதற்காக வாக்கு போட மாட்டார்கள்.

வாக்களிக்க மாட்டார்கள்
கடந்த முறை குஷ்பு கூட வாக்கு சேகரித்தார். மக்கள் வாக்கு செலுத்தினார்களா என்ன? இவ்வளவு ஏன் வடிவேலு கூட திமுகவுக்காக வாக்கு சேகரித்தார். அப்போதும் மக்கள் வாக்களிக்கவில்லை. நடிகர்கள் பிரச்சாரம் செய்ய வந்தால், கூட்டம் கூடும். ஆனால் வாக்களிக்க மாட்டார்கள். அதிலும் ஈரோடு மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். எதையும் ஆராய்ந்து செய்பவர்கள். அதனால் இடைத்தேர்தலில் நல்ல தீர்ப்பை மக்கள் அளிப்பார்கள் என்று தெரிவித்தார்.

மக்களின் வரவேற்பு
தொடர்ந்து, மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, ரேஷன் பொருட்கள் பிரச்சினை என மக்கள் அனைத்து பிரச்சினைகளையும் அறிந்து வைத்துள்ளார்கள். அதேபோல் அதிமுக தொண்டர்கள் எழுச்சியுடன் வாக்கு சேகரித்து வருகிறார்கள். மக்களின் வரவேற்பு சிறப்பாக இருக்கிறது. தென்னரசுக்கு வாக்களிப்போம் என்று அவர்களாகவே சொல்கிறார்கள் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications