அரிசி பருப்பை விடுங்க.. குவார்ட்டருக்கு கூடுதல் ரேட்.. சாலையில் படுத்து போதையில் ரகளை செய்த பெண்
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் பகுதியில் குடிபோதையில் இருந்த பெண் நடுரோட்டில் படுத்துக் கொண்டு ரகளை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை அருகே அத்தாணி செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் நேற்று இரவு 7 மணி அளவில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சாலையின் நடுவே படுத்துக் கொண்டு ஏதோ முணகிக் கொண்டிருந்தார்.
இதை அவ்வழியே சாலையில் சென்றவர்கள் பார்த்துவிட்டு ஏதோ வாகனம் மோதி அடிப்பட்டதால் அந்த பெண் ஏதோ முணுமுணுக்கிறார்கள் என நினைத்தனர். இதையடுத்து அந்த பெண்ணை காப்பாற்றலாம் என நினைத்து அந்த பெண்ணின் அருகே சென்றனர்.

மது போதை
அப்போது அந்த பெண் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் போதை தலைக்கேறியதால்தான் சாலையில் படுத்துக் கொண்டு ரகளை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கிறாரே என அந்த பெண்ணை சில பெண்களின் உதவியுடன் வாகன ஓட்டிகள் தூக்கிக் கொண்டு ஓரமாக போட்டனர்.

சாலையில் படுத்த பெண்
ஆனாலும் அந்த பெண் மீண்டும் மீண்டும் சாலையில் வந்து படுத்துக் கொண்டே இருந்தார். அத்துடன் அந்தியூர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அரசாங்கம் நிர்ணயித்த தொகையை காட்டிலும் மதுபாட்டில் கூடுதல் விலைக்கு விற்பதாக குற்றம்சாட்டி கொண்டிருந்தார். கூடுதல் என்றால் ஒரு ரூபாய் , 2 ரூபாய் இல்லை, ரூ 10, ரூ 15 என கூடுதலாக விற்கிறார்கள்.

கூடுதல் விலை
திடீரென இப்படி விற்பதால் கூடுதலாக என்னிடம் ரூ 10 இல்லாததால் மற்றவர்களிடம் ரூ 10 கேட்டு மிகவும் கஷ்டப்பட்டு மதுவை குடித்தேன். இதையெல்லாம் அரசாங்கம் கேட்டுக் கொள்ள மாட்டார்களா, நியாயமான விலைக்கு விற்றால்தான் எங்களை போன்றோர் சிரமமின்றி குடிக்க முடியும் என சாலையில் படுத்துக் கொண்டே "என் தங்கச்சியை நாய் கச்சிச்சிப்பா" என ஜனகராஜ் போல் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார்.

இரவு நேரம்
இரவு நேரம் என்பதாலும் அவ்வழியாக நள்ளிரவில் வேகமாக வாகனம் வந்தால் அசம்பாவிதம் ஏற்படும் என்பதாலும் அப்பகுதியில் வந்தவர்கள் போலீஸாருக்கு புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் அந்தியூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணை நட்ட நடு சாலையிலிருந்து அப்புறப்படுத்தி, அவருக்கு உணவு வாங்கிக் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் தவிட்டுப்பாளையம் பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விலைவாசி உயர்வு
விலைவாசி, பெட்ரோல் டீசல் விலை, கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் ஏழை எளிய மக்கள் அவதிப்படுகிறார்கள். நிறைய குழந்தைகள் வறுமையில் உள்ளார்கள். அதற்காக குரல் கொடுக்காமல் டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு விற்கிறார்கள் என அந்த போதை பெண் குரல் கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications