ஈரோடு மஞ்சள் விலை ஷாக்.. ரூ.15,000-ல் இருந்து ரூ.23,000-ஆக உயர்ந்தது எப்படி? என்ன காரணம்?
ஈரோடு: ஈரோட்டில் மஞ்சள் விலை திடீரென எகிறி, ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் ரூ.23,000-ஐத் தாண்டிவிட்டது.. கடந்த செப்டம்பர் மாதம் ரூ.15,000 முதல் ரூ.17,000 வரை விற்ற மஞ்சள், சில வாரங்களிலேயே இவ்வளவு விலை உயர்ந்தது எப்படி? இதற்குப் பின்னால் மஞ்சள் விளைச்சல் குறைந்ததும், சந்தைக்கு வரும் மஞ்சளின் அளவு குறைந்ததும் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன.. அதை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்!!
நம் தமிழகத்தில் மஞ்சள் அதிகமாக விளையும் மாவட்டங்களில் ஈரோடும் ஒன்று. ஆனால், இந்த வருடம் மழை குறைந்ததால் மஞ்சள் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. எல் நினோவால் வரும் மாதங்களில் பருவமழை எந்த அளவுக்குப் பாதிக்கப்படும் என்ற கவலையும் இருக்கிறது.

ஈரோட்டில் மஞ்சள் விலை
பவானிசாகர் அணையிலும் போதிய தண்ணீர் இல்லாததால், கீழ்பவானி மற்றும் காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்குத் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மஞ்சள் பயிரிடும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது, ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி செய்யப்படும் நிலத்தின் அளவு பாதியாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஈரோட்டில் மட்டுமல்ல.. வட மாநிலங்களிலும் இந்த பிரச்சனை உள்ளது.. குறிப்பாக மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதி, தெலங்கானாவின் நிஜாமாபாத் உள்ளிட்ட மஞ்சள் விளையும் பகுதிகளிலும் வறட்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் மஞ்சள் சாகுபடி செய்யப்படும் நிலத்தின் அளவு 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கிறார்கள். இந்த வருடம் சந்தைக்கு வரும் மஞ்சளின் அளவு குறைய இதுவும் ஒரு காரணமாகும்...
ஸ்டாக்கில் மஞ்சளும் இல்லை
அதேபோல வியாபாரிகளிடம் ஏற்கனவே இருந்த மஞ்சள் இருப்பும் குறைந்துவிட்டது. ஆனால், மஞ்சளை வாங்குவதற்கான தேவையும் அதிகமாக இருப்பதால் விலையும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.15,000 முதல் ரூ.17,000 வரை விற்பனையானது. ஆனால், அக்டோபர் 13-ம் தேதி ஈரோடு சொசைட்டியில் விரலி மஞ்சளின் அதிகபட்ச விலை ரூ.22,989-ஐ எட்டியது. மறுநாளே, அதாவது அக்டோபர் 14-ம் தேதி, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விரலி மஞ்சளின் அதிகபட்ச விலை ரூ.23,099-ஆக உயர்ந்தது. அங்கு ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் ரூ.15,336 முதல் ரூ.23,099 வரை விற்பனையானது. கிழங்கு மஞ்சள் ரூ.15,099 முதல் ரூ.19,626 வரை விலை போனது.
விலை எப்போது குறையும்
இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் மஞ்சளுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அடுத்த ஏப்ரல் மாதத்தில் ஒரு குவிண்டால் மஞ்சளின் விலை ரூ.25,000 வரை உயரலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. அதே நேரம், மஞ்சள் விலை உயர்ந்தாலும், விளைச்சல் குறைந்திருப்பதால் விவசாயிகளுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை இப்போதே உறுதியாக சொல்ல முடியாது.
ஏனென்றால், இனி மேல் மழை எப்படி பெய்கிறது, அடுத்த அறுவடையில் எவ்வளவு மஞ்சள் விளைகிறது என்பதைப் பொறுத்துதான் விலை மாறும்.. முக்கியமாக எல் நினோவால் வரப் போகும் மாதங்களில் பருவமழை கடுமையாக பாதிக்கப்படுமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!!



Click it and Unblock the Notifications
