ஈரோடு கிழக்கு.. பாஜகவுக்கு எடப்பாடி “முழுக்கு”.. மோடி, அண்ணாமலைக்கு ”ஷாக்” - ஓபிஎஸ்சுக்கு “செக்”
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் பணிமனையில் பாஜக தலைவர்களின் புகைப்படம், பாஜக கொடியை சேர்க்காமல் கூட்டணி பெயரையும் மாற்றியுள்ள நிலையில் 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு: விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது அதிமுகவின் வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசுவை எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்து உள்ள நிலையில் இன்று திறக்கப்பட்ட தேர்தல் பணிமனையில் பாஜக தலைவர்களின் புகைப்படம், பாஜக கொடி இடம்பெறாமல் கூட்டணி பெயரும் மாற்றப்பட்ட நிலையில் 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்தவர் திருமகன் ஈவேரா. காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனான இவர் கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இதனை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியை காலியானதாக அறிவித்தது தேர்தல் ஆணையம். இந்த நிலையில் வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஈவிகேஎஸ் இளங்கோவன்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி மட்டுமின்றி தமிழ்நாடு அரசியல் களமே சூடுபிடித்து உள்ளது. திமுக கூட்டணி சார்பில் அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. திருமகன் ஈவேராவின் தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனை அக்கட்சி வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது.

தாமதம் காட்டிய அதிமுக
அதேபோல் தேமுதிக வேட்பாளராக ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா, அமமுக வேட்பாளராக சிவபிரசாந்த் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். திமுக கூட்டணி கட்சிகளுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தது.

பாஜகவின் முடிவு
அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக கட்சியின் வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இது அல்லாமல் கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் பாஜகவின் முடிவுக்கு இரு தரப்பினரும் காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகின. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த தேர்தலில் போட்டியிடுவதாக கூறப்பட்டது.

வேட்பாளரை அறிவித்த எடப்பாடி
இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம், பாஜகவின் முடிவை கேட்ட பிறகு அதிமுக வேட்பாளரை அறிவிப்பதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி, ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுகவினர், அதிமுக மூத்த தலைவர்களை கூட்டி அவர்கள் முன்னிலையில் தங்கள் தரப்பு வேட்பாளரை அறிவித்தார்.

கே.எஸ்.தென்னரசு
அதன்படி சேலம் மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கே.எஸ்.தென்னரசு ஈரோடு கிழக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். 2 முறை அதிமுக எம்.எல்.ஏவாக இருந்துள்ள தென்னரசு அதிமுகவில் பல ஆண்டுகளாக அங்கம் வகித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி நகர்வு பாஜகவையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கூட்டணி பெயர் மாற்றம்
இந்த நிலையில் அடுத்த அதிர்ச்சியாக கூட்டணி பெயரை மாற்றி உள்ளது எடப்பாடி பழனிசாமி தரப்பு. இன்று திறக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பணிமனையில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு வைக்கப்படும் "தேசிய ஜனநாயக கூட்டணி" என்ற பெயருக்கு பதில், "தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி" என்ற பெயர் அச்சிடப்பட்டு உள்ளது.

மோடி படம், பாஜக கொடி இல்லை
அதேபோல் தலைவர்களின் படங்களின் வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை. அதேபோல் அண்ணாமலையின் முடிவே தங்கள் முடிவு என்று அறிவித்த ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் ஆகியோரின் படங்களும் அதில் இடம்பெறவில்லை.

2024 தேர்தல்
அதே நேரம் ஜிகே வாசன், பூவை ஜெகன்மூர்த்தி, கிருஷ்ணசாமி ஆகியோரின் படங்கள் இடம்பெற்று உள்ளன. இதன் மூலம் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு விலகி இருக்கும் நிலையில், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் இதே நிலை தொடருமா அல்லது அதிமுக - பாஜக இணைந்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்த நகர்வு என்ன என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications