பெருமாளே..அழகிய சிலையை கடத்திய பழனிச்சாமி..மாறுவேடத்தில் கைப்பற்றிய சிலை தடுப்பு பிரிவு போலீசார்
ஈரோடு: கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 33 கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சலோக பெருமாள் சிலையை திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
புராதனமான கோயில்களில் இருந்து சிலைகள் கடத்தப்பட்டு வெளி மாநாடுகளுக்கு ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மாநிலம் முழுவதும் தங்களுடைய சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி திருச்சி சிலை கடத்தல் பிரிவு போலீஸார் தங்களுக்குக் கிடைக்கும் ரகசிய தகவல்களை அடிப்படையாக வைத்து, கண்காணித்து தொடர்ந்து கடத்தல் சிலைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விற்பனைக்காக கோவை கொண்டுவரப்பட்ட நடராஜர் உலோகச் சிலையை கைப்பற்றிய திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நேற்று கர்நாடகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட வெங்கடாஜலபதி சிலையை பறிமுதல் செய்துள்ளனர்.
சாமி சிலை கடத்திய தீனதயாளனை முதல்முறையாக கைது செய்தேன்! என் மீதே புகாரா? பொன் மாணிக்கவேல் ஆவேசம்

பெருமாள் சிலை
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நாகர்கால பாளையம் பகுதியில் வசித்து வரும் பழனிச்சாமி என்பவரது வீட்டில் 600 ஆண்டுகள் தொன்மையான பெருமாள் சிலை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்துள்ளது. அதனடிப்படையில் உதவி ஆய்வாளர்கள் ராஜேஷ் பாண்டியராஜன் சிறப்பு உதவி ஆய்வாளர் நாகேந்திரன் தலைமை காவலர் பரமசிவம் சிவபாலன் மகாராஜன் காவலர் ராஜேஷ் ஆகியோர் தனிப்படை அடங்கிய குழு பழனிசாமி வசிக்கும் பகுதியில் சோதனை நடைபெற்றது.

மாறு வேடத்தில் சிலை மீட்பு
பழனிச்சாமியிடம் பெருமாள் சிலை இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிப்படையினர் சிலையை வாங்குவது போல மாறுவேடத்தில் சென்று பழனிச்சாமி 33 கோடி ரூபாய்க்கு விலை நிர்ணயித்த நிலையில் மாறுவேடத்தில் சென்ற அதிகாரிகள் 15 கோடி ரூபாய்க்கு விலையை இறுதி செய்துள்ளனர். அதன்படி கடந்த 7ஆம் தேதி மாலை 4 மணி அளவில் சிலையை வாங்குவதற்காக மாறுவேடத்தில் சென்ற தனிப்படையினர் பழனிச்சாமிடம் சிலையை கேட்ட போது அவர் மறைத்து வைத்திருந்த 22.800கிலோ எடையுள்ள, 58செமீ உயரமும், 31செமீ அகலமும் உள்ள சிலையை எடுத்து காண்பித்துள்ளார்.

சிலை பறிமுகல்
சிலையை பறிமுதல் செய்த அதிகாரிகள் அது யாருக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருச்சி சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி பாலமுருகன், பழனிச்சாமி என்பவர் இந்த சிலையை விற்க முயன்றதும் தெரிய வந்தது. அதேபோல் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள ஒரு கோவிலில் இருந்து அந்த கோவிலில் சேர்ந்த அர்ச்சகர் மூலம் இந்த சிலை விற்பனை செய்வதற்கு சென்றதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிலை குறித்து விசாரணை
அதன் அடிப்படையில் முதல் கட்டமாக இந்த சிலையின் உண்மைத்தன்மை குறித்து கண்டறிய கர்நாடக மாநிலத்திற்கு அனுப்பி வைத்து அந்த கோவிலுக்கு சொந்தமானது தானா என்பது குறித்து விசாரணை நடத்திய பிறகு பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெறும். உரிய ஆவணங்கள் இல்லாமல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் கைது செய்யப்படுவார் என்று தெரிவித்தார்.