மோதி பார்த்துடலாம்.. இறங்கி அடிக்க ரெடியான எடப்பாடி.. ஈரோடு கிழக்கில் அதிமுக போட்டி.. 4 காரணங்கள்!
ஈரோடு: மோதி பார்த்திடலாம்.. நடக்குறது நடக்கட்டும்.. என்று துணிச்சலாக ஒரு முடிவை எடுத்து இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக வேட்பளாரை களமிறக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27-ம் தேதி நடைப்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்கும் என்று இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கே அதிமுக கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸின் யுவராஜா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இங்கே தமிழ் மாநில காங்கிரசுக்கு பதிலாக அதிமுகவே போட்டியிடும் என்ற முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். எடப்பாடியின் இந்த முடிவு ஈரோடு கிழக்கு தேர்தலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரிஸ்க்தான்
எடப்பாடியின் இந்த முடிவு மிகப்பெரிய ரிஸ்க். எடப்பாடி தரப்பு அதிமுக வேட்பாளர் இங்கே இறங்குவார். அவர் ஒருவேளை தோல்வி அடைந்தால், அது எடப்பாடியின் தோல்வியாக கருதப்படும். அதிமுக உட்கட்சி மோதல் நிலவும் நேரத்தில் எடப்பாடியே தோல்வி அடைந்துவிட்டதாக கருதப்படும். இதனால் ஓபிஎஸ் பக்கம் ஆட்கள் செல்ல வசதியான சூழ்நிலை ஏற்படும். ஆனால் இதை எல்லாம் மீறி எடப்பாடி இந்த தேர்தலில் அதிமுகவே போட்டியிடலாம் என்ற முடிவை எடப்பாடி எடுத்து இருக்கிறார். மோதி பார்த்துவிடலாம் என்ற நிலைப்பாட்டை எடப்பாடி எடுத்துள்ளார். எடப்பாடியின் இந்த முடிவிற்கு பின் 4 முக்கிய காரணங்கள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

தமிழ் மாநில காங்கிரஸ் - தோல்வி
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் யுவராஜாதான் இங்கு போட்டியிட்டு இருக்க வேண்டும். அவர் கடந்த தேர்தலில் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வி அடைந்தார். இதனால் அவருக்கே வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கும். ஆனால் இது போன்ற இடைத்தேர்தல்களில் பிரதான எதிர்க்கட்சி போட்டியிடாமல்.. கூட்டணி கட்சி போட்டியிட்டால் ஆளும் கட்சி கூட்டணிக்கு வெற்றியை வாரிக்கொடுத்தது போல ஆகிவிடும். இங்கே தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டால் அது காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்துவிடும். கொஞ்சம் கூட டஃப் கொடுக்காமல் ஆளும் கூட்டணி வெல்ல காரணமாக அமைந்து விடும். இதை எடப்பாடி விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.

சின்னம் சிக்கல்
இரண்டாவது தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக யுவராஜ் போட்டியிட்டாலும் அவர் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும். அப்படி போட்டியிட்டாலும் இரட்டை இலை சின்னத்திற்கு கண்டிப்பாக சிக்கல்வரும். ஓபிஎஸ் - இபிஎஸ் மோதலால் தேர்தலுக்கு முன் சின்னம் முடங்கும் வாய்ப்புகளும் இருக்கின்றன. தமிழ் மாநில காங்கிரஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டாலும் சின்னம் முடங்கும், எடப்பாடி தரப்பு அதிமுக வேட்பாளர் சின்னம் முடங்கும் அபாயம் உள்ளது. அப்படி இருக்க தமிழ் மாநில காங்கிரசுக்கு இடம் கொடுக்க நாமே வேட்பாளரை களமிறக்கலாம் என்று எடப்பாடி முடிவு செய்து இருக்கலாம்.

வென்றால் - நிலைமை மாறும்
இந்த தேர்தலில் வென்றால் அப்படியே நிலைமை மாறும். அதிமுக மட்டும் எல்லா பவரையும் இறக்கி, ஆளும் கூட்டணிக்கு எதிராக பிரச்சாரம் செய்து.. ஒருவேளை அதிசயமாக ஆளும் கட்சி பவரை எதிர்த்து வென்று விட்டால்.. அது எடப்பாடிக்கு பெரிய பிளஸ் ஆகும். பாருங்க ஆளும் கூட்டணியை எதிர்த்து வென்றுவிட்டோம். நான்தான் அதிமுகவின் உண்மையான தலைவன். இடைத்தேர்தலில் வென்றுவிட்டோம் பாருங்கள் என்று எடப்பாடி கூற வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் அதிமுகவின் ஒற்றை தலைமையை, தொண்டர்கள் ஆதரவை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. இதை மனதில் வைத்தே எடப்பாடி இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்புள்ளது.

பாஜக போட்டி - கொங்கு பதிலடி
இன்னொரு பக்கம் பாஜக கொங்கை தங்கள் கோட்டை என்று கூறி வருகிறது. இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன.அதிமுகவில் என்ன நடக்கும், கட்சி யாருக்கு செல்லும் என்று தெரியாத நிலையில், பாஜக இங்கு தனித்து போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கொங்கு மண்டலத்தை பாஜக தனது கோட்டை என்று கூறி வருகிறது. அதிமுக எடப்பாடி - பாஜக இடையிலும் நல்ல உறவு இல்லை. இருவருக்கும் இடையில் நிறைய கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இதனால் இந்த தொகுதியில் பாஜக தனித்து போட்டியிட்டு தனது பலத்தை சோதிக்க பார்க்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஜக இங்கே வெற்றிபெறவில்லை என்றாலும் லோக்சபா தேர்தலுக்கு நல்ல முன்னோட்டமாக இருக்கும்.

பாஜக பாடம்
இந்த இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தாலும் கூட நல்ல வாக்கு சதவிகிதத்தை எடுத்தாலே அது பாஜகவிற்கு பெரிய பலமாக இருக்கும். தமிழ்நாட்டில் தங்களின் வாக்கு சதவிகிதம் 10க்கும் மேல் உள்ளது என்று பாஜக கூறி வருகிறது. இந்த இடைத்தேர்தலில் மட்டும் 10% வாக்குகளுக்கு அருகில் பெற்றுவிட்டால் போதும் லோக்சபா தேர்தலில் அதை வைத்தே பாஜக அதிக இடங்களை அதிமுகவிடம் கேட்க முடியும். முக்கியமாக கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களையும் பெற முடியும். கூட்டணி பேச்சுவார்த்தையில் பாஜகவிற்கு இது கூடுதல் பவரை கொடுக்கும். தோல்வி அடைந்தாலும் கூட பாஜகவிற்கு ஒரு வித நம்பிக்கையை இது கொடுக்கும். அதனால் பாஜக சார்பாக இங்கே மாநில பொதுச்செயலாளர் ஏபி முருகானந்தம் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அல்லது மாநில பாஜக வேளாண் செயலாளர் ஜிகே நாகராஜன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில் பாஜகவிற்கு பாடம் எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications