நான் பேசிக்கிறேன்.. “2 மேட்டர்.. ஆஃப் பண்ணிடலாம்”.. விடாப்பிடி எடப்பாடி.. விட்டுக் கொடுக்காத வாசன்!?
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக யார் களமிறங்கப்போவது என்ற பேச்சு தான் அரசியல் அரங்கில் அனலைக் கிளப்பி வருகிறது. இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதுமே திமுக, அதிமுக என இரு பெரும் கட்சிகளும் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என ஆலோசனையில் ஈடுபடத் தொடங்கிவிட்டன. அதிமுக எடப்பாடி அணி - ஜிகே வாசன் இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட, மறுபுறம் பாஜக தலைவர் அண்ணாமலை உடனே தேர்தல் பணிக்குழு அமைத்து பரபரப்பைக் கிளப்பினார்.
இந்நிலையில் தான் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசனுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேசிக்கொண்டது பற்றிய தகவல்கள் உலவி வருகின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்னணி கட்சிகள் தயாராகி வரும் நிலையில், அமமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஆலோசனை நடத்தி முடிவெடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விறுவிறு தேர்தல் களம்
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா காலமானதை அடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையம், காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. இதையடுத்து அந்த தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட அனைத்துக் கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. கூட்டணிக் கட்சிகள் உடனான பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்திருப்பதால் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

சிம்பிளாக முடித்த திமுக
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2021ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி அத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காரணத்தால், தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில் ஈரோடு தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கீடு செய்வது என முடிவெடுத்துள்ளது திமுக. இதன் மூலம் திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு சிம்பிளாக முடிந்துள்ளது.

எதிரே பெரிய யுத்தம்
அதேசமயம், பிரதான எதிர் தரப்பான அதிமுக கூட்டணியில் இன்னும் எந்தக் கட்சிக்கு சீட் என்பது உறுதியாகாத நிலை இருந்து வருகிறது. அதிமுக எடப்பாடி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, பாஜக ஆகியவை தனித்துப் போட்டியிடுவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தமாகா தலைவர் ஜி.கே.வாசனுடன், எடப்பாடி பழனிசாமி அணியினர் நேற்று ஆலோசனை நடத்தினர். இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பாக தமாகாவின் யுவராஜ் போட்டியிட்டார்.

கூட்டணி தர்மம்
எனவே, கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் தமாகா போட்டியிட ஆதரவு தரவேண்டும் என்று ஜி.கே.வாசன், சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கோரியுள்ளார். இந்நிலையில் தான், நேற்று தமாகா அலுவலகத்தில் ஈபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா, பெஞ்சமின் ஆகியோர் ஜி.கே.வாசனை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் போது, கூட்டணி தர்மப்படி, தமாகாவுக்கு சீட் தர வேண்டும் என்று வாசன் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

ஈபிஎஸ் தரப்பு முடிவு
ஆனால், பேச்சுவார்த்தைக்குச் சென்ற குழுவினர், இந்த முறை நாங்கள் போட்டியிடுகிறோம். அதிமுகவில் நிலவும் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த தேர்தல் எங்களுக்கு அவசியம், நாடாளுமன்றத் தேர்தல் வரை பிரச்சனையை இழுக்கக்கூடாது என நினைக்கிறோம். மேலும், ஆளுங்கட்சியை எதிர்த்து உங்களால் செலவு செய்து ஜெயிப்பது சவாலான காரியம், இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டால் கூட்டணிக்குத்தான் நல்லது. திமுகவுக்கு டஃப் ஃபைட் கொடுக்க வேண்டுமானால் அதிமுக நிற்பதே சரியாக இருக்கும் எனப் பேசியதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 பேரிடமும் பேசுகிறேன்
ஆனால், ஜிகே வாசன் இந்தப் பேச்சுக்கு பிடிகொடுக்கவில்லையாம். தமாகா போட்டியிட பாஜக ஆதரவு அளிக்கும். நான் டெல்லியிலேயே பேசுகிறேன். அதிமுக வேட்பாளரை நிறுத்தினால், பாஜகவும் தனித்துப் போட்டியிடக்கூடும், ஓபிஎஸ் அணியும் போட்டியிடும், எப்படியும் இரட்டை இலை சின்னம் உங்களுக்கு கிடைக்காமல் போகும். நாங்கள் நின்றால் ஓபிஎஸ்ஸிடம் நானே பேசுகிறேன். கூட்டணி தர்மப்படி இந்த முடிவுக்கு ஓபிஎஸ்ஸும் ஒப்புக்கொள்வார். சிக்கல் இல்லாமல் கொண்டு போகலாம் என வாசன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

முடிவு கிட்டவில்லை
எடப்பாடியிடம் கலந்து பேசிவிட்டு நாளை சொல்கிறோம் எனக் கூறிவிட்டு அதிமுக நிர்வாகிகள் அங்கிருந்து கிளம்பியுள்ளனர். இதனால், இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை எனத் தெரிகிறது. வரும் நாட்களில் மீண்டும் ஜிகே வாசனை அதிமுக தலைவர்கள் சந்தித்துப் பேசுவார்கள் எனத் தெரிகிறது. தனது அணியின் பலத்தை நிரூபிக்கும் முனைப்பில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, கூட்டணிக் கட்சிக்கு தொகுதியை விட்டுக் கொடுப்பாரா அல்லது தனித்து வேட்பாளரை இறக்கத் தயாராவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

இரட்டை இலை? தாமரை?
ஒருவேளை, தமாகா போட்டியிட எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவு அளித்தாலும், அக்கட்சி எந்த சின்னத்தில் நிற்கும் என்பதும் பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது. தாமரை சின்னத்தில் களமிறக்க பாஜக திட்டமிடும் என்றும் கூறப்படுகிறது. அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்வாரா? இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டுமென்றால் ஈபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் கையெழுத்துப் போட வேண்டும், அதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என பல கேள்விகள் முளைக்கின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் இந்தக் கேள்விகளுக்கு பதில் கிடைக்கக்கூடும். பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications