8 ஆண்டு தான்.. ரூ.80 லட்சம் கோடி கடன் வாங்கிய மத்திய அரசு.. சந்திரசேகரராவ் மகன் கேடி ராமாராவ் பகீர்
ஐதராபாத்: சுதந்திரத்திற்குப் பிறகு கடந்த 67 ஆண்டுகளில் நாடு பல பிரதமர்களை சந்தித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் மத்திய அரசு ரூ.55.87 கோடி கடன் வாங்கி இருந்தது. ஆனால் 2014ல் ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவின் மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் ரூ.80 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது.'' என தெலங்கானா முதல்வர் சந்திரசேகரின் ராவ் மகன் கேடி ராமராவ் புள்ளிவிபரங்களோடு விமர்சனம் செய்துள்ளார்.
தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அக்கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ் உள்ளார். புதிய மாநிலமாக தெலங்கானா உதயமானபோது சந்திரசேகரராவ் கட்சிக்கும், பாஜகவுக்கு இடையே சுமூகமான உறவு இருந்தது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினருக்கும், பாஜகவுக்கும் இடையே நல்ல உறவு இல்லை. இருகட்சிகள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

பாஜக-டிஆர்எஸ் மோதல்
மத்திய அரசு தெலங்கானாவுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது இல்லை. இந்த விஷயத்தில் பாகுபாடு காட்டுகிறது என தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசி வருகிறார். அதோடு தெலங்கானா வரும் பிரதமர் மோடியை அவர் சந்திக்காமல் தவிர்த்து வருகிறார்.

சந்திரசேகரராவ் மகன் விமர்சனம்
மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அரசியலில் கால்பதிக்கும் வகையில் சந்திரசேகரராவ் பாரத் ராஷ்ட்ர சமிதி எனும் புதிய கட்சியை துவக்கி உள்ளார். இந்நிலையில் கட்சியின் சந்திரசேகரராவின் மகனும், கட்சியின் செயல் தலைவரும், அமைச்சருமான கேடி ராமராவ் தற்போது மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது:

கடனில் தள்ளிய பாஜக
மத்திய அரசு பொதுமக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மக்களை மத்திய அரசு வதைத்து வருகிறது. 2021ம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 61.6 சதவீதம் என்ற அளவில் மத்திய அரசின் கடன் உயர்ந்துள்ளது. இதன்மூலம் நாட்டை கடனில் பாஜக அரசு தள்ளியுள்ளது.

ரூ.80 லட்சம் கோடி கடன்
சுதந்திரத்திற்குப் பிறகு கடந்த 67 ஆண்டுகளில் நாடு பல பிரதமர்களை சந்தித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் மத்திய அரசு ரூ.55.87 கோடி கடன் வாங்கி இருந்தது. ஆனால் 2014ல் ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவின் மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் ரூ.80 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது. 2014-15ல் மத்திய அரசின் வட்டி செலுத்தும் தொகை என்பது மொத்த வருவாயில் 36.1 சதவீதமாக இருந்தது .இது 2021ல் 43.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நிதி ஒதுக்கீடு இல்லை
மாநிலத்தின் ஒவ்வொரு கிராமத்திற்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்க மிஷன் பாகிராதா திட்டத்துக்க ரூ.19 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய நிதி ஆயோக் பரிந்துரை செய்தது. ஆனால் மத்திய அரசு தற்போது வரை நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கைத்தறி பொருட்களுக்கு ஐந்து சதவீத ஜிஎஸ்டியை விதிக்கப்பட்டது. தற்போது அது 12 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டு கைத்தறி துறையை முடக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. மேலும் கூடுதல் கடன் வழங்குவதாக கூறி விவசாய பம்ப் செட்டுகளுக்கு மீட்டர்களை அமைக்க வற்புறுத்தி மிரட்டல் செய்கிறது'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications