
ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க மறுத்த 5 மருத்துவமனைகளுக்கு ரூ. 600 கோடி அபராதம்!
டெல்லி: ஏழைகளுக்கு கட்டணமின்றி சிகிச்சை அளிக்க மறுத்ததாக குற்றச்சாட்டில் சிக்கிய 5 தனியார் மருத்துவமனைகளுக்கு டெல்லி அரசு ரூபாய் 600 கோடி அபராதம் விதித்துள்ளது.
மானிய விலையில் ஒதுக்கீடு செய்யப்படும் இடத்தில் கட்டப்படும் மருத்துவமனைகளில் 10 சதவீத நோயாளிகளுக்கு கட்டணமின்றி சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற சட்ட விதிமுறை அமலில் உள்ளது.

ஆனால் அனைத்து மருத்துவமனைகளும் இந்த விதிமுறைகளை சரிவர பின்பற்றுவதில்லை. சிகிச்சைக்காக வரும் ஏழை நோயாளிகளை அவர்கள் திருப்பி அனுப்பி விடுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக புகாரில் சிக்கிய ஐந்து தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ. 600 கோடி அபராதம் விதித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான நோட்டீஸை எதிர்த்து சம்மந்தப்பட்ட மருத்துவமனைகள் தொடர்ந்த வழக்கில், அரசின் உத்தரவு செல்லும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த அபராதத் தொகையானது சுகாதாரத்துறைக்கு பயன்படுத்தப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.