திருட்டு பழி.. லாரியில் கட்டி ரோட்டில் இழுத்துச்செல்லப்பட்ட சிறுவர்கள்! மத்திய பிரதேசத்தில் கொடூரம்
போபால்: மத்தியப் பிரதேசத்தில் திருட்டு பழி சுமத்தப்பட்ட இரண்டு சிறார்கள் லாரியில் கட்டப்பட்டு சாலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுவர்கள் மீதும், அவர்களை கட்டி இழுத்து சென்றவர்கள் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் சிறார்கள் இவ்வாறு கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருட்டு
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரின் சோய்த்ரம் மண்டி பகுதியில் நேற்று (அக்.29) இந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது இந்த பகுதியில் லாரி ஒன்று நின்றிருக்கிறது. அதில் விளைப்பொருட்கள் இருந்துள்ளன. விளைப்பொருட்களை சந்தையில் விற்பனை செய்ய விவசாயி ஒருவர் அதனை இந்த பகுதிக்கு கொண்டு வந்திருக்கிறார். இந்நிலையில் லாரியில் ரூ.10,000 ரொக்கம் வைத்திருந்ததாகவும் அது காணவில்லையென்றும் கூறியுள்ளார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்றுகூடியுள்ளனர்.

சந்தேகம்
லாரி அருகே நின்றிருந்த இரண்டு சிறார்களை அவர்கள் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்துள்ளனர். ஆனால் இந்த குற்றத்தை சிறார்கள் மறுத்துள்ளனர். இதனை ஏற்காத அப்பகுதி மக்கள் சிறார்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இது கைகலப்பாக மாறியுள்ளது. சுற்றி இருந்தவர்கள் சேர்ந்து சிறார்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். ஆனால் அவர்கள் அப்போதும் குற்றத்தை மறுத்துள்ளனர். இதனையடுத்து அவர்களது கை மற்றும் கால்கள் கட்டப்பட்டன.

தாக்குதல்
மறுமுனையில் அந்த கயிற்றை லாரியுடன் இனைத்த அப்பகுதி மக்கள் குறிப்பிட்ட தூரம் வரை சிறார்களை ரோட்டில் இழுத்துச் சென்றுள்ளனர். இதனை யாரும் தடுக்கவில்லை சுற்றியிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. தகவலின் பேரில் காவலர்கள் வந்து விசாரித்ததில் விவசாயியான சுனில் வர்மா திருட்டு புகாரை கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறார்களை அவர் தனது புகாரில் குற்றம்சாட்டியுள்ளார்.

வழக்குப்பதிவு
உடனடியாக சிறார்களை மீட்ட காவல்துறையினர் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதே போல அவர்களை தாக்கியவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என ஏசிபி நிஹித் உபாத்யாய் கூறியுள்ளார். குற்றம் உறுதி செய்யப்படாமல் வெறும் யூகத்தின் அடிப்படையில் சிறுவர்கள் இருவரை சரமாரியாக தாக்கி லாரியில் கட்டி ரோட்டில் இழுத்துச் சென்றுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications