குஜராத் தேர்தல்.. இன்னும் 16தான் பாக்கி.. 3ம் கட்ட வேட்பாளர்களை அறிவித்த பாஜக!
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் வரும் 1ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆளும் பாஜக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.
ஏற்கெனவே முதல் கட்டமாக 83 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 77 கட்டமாகவும் வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில் தற்போது மூன்றாம் கட்டாமாக 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிலிருந்து வந்தவர்களுக்கு பாஜக தொடர்ந்து 'சீட்' வழங்கி வருவதால் உட்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.

தேர்தல்
குஜராத் மாநிலத்தில் 182 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற இருக்கிறது. முதல் கட்டம் வரும் 1ம் தேதியும், இரண்டாம் கட்டம் வரும் 5ம் தேதியும் நடைபெறும். இந்நிலையில் ஏற்கெனவே 160 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை ஆளும் பாஜக அறிவித்திருந்த நிலையில் தற்போது 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற பின்னர் அங்கிருந்து பாஜகவுக்கு அணி மாறிய எம்எல்ஏக்களுக்கும், முக்கிய புள்ளிகளுக்கும் பாஜக இம்முறை தேர்தலில் வாய்ப்பளித்துள்ளது. அதேபோல கட்சியின் சொந்த எம்எல்ஏக்களை கழற்றிவிட்டுள்ளது. இதனால் கட்சியினுள் பலரும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

வேட்பாளர்கள்
நிலைமை இவ்வாறு இருக்க தற்போது மூன்றாம் கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக. தோராஜி, கம்பாலியா, குடியானா, பாவ்நகர் கிழக்கு, தெடியாபாடா மற்றும் சோரியாசி ஆகிய தொகுதிகளில் இந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாநிலத்தில் கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பில் இருக்கும் பாஜகவுக்கு இந்த தேர்தல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சொந்த மாநிலம் குஜராத் என்பதாலும், குஜராத் 'மாடலை' வைத்து தேசிய அளவில் கட்சியை வளர்க்கவும் பாஜகவுக்கு இம்மாநிலம் கைகொடுத்துள்ளது என்பதாலும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் பாஜக இருக்கிறது.

இரண்டு சமூகங்கள்
ஏற்கெனவே கடந்த வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் 'சிட்டிங்' எம்எல்ஏக்கள் 38 பேர் கழற்றிவிடப்பட்டிருப்பது தெரிய வந்தது. "பொதுவாக தேர்தலில் பாஜக 20% வேட்பாளர்களை மாற்றி அறிவிக்கும். அதேதான் இந்த தேர்தலிலும் நடந்துள்ளது" என கட்சியின் மாநில தலைவர் சி.ஆர்.பாட்டில் இதற்கு விளக்கமளித்துள்ளார்.. மேலும், இந்த தேர்தலில் இளைஞர்கள் அதிகமானோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தற்போது அறிவிக்கப்பட்டுள் 6 வேட்பாளர்கள் அல்லாது, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 160 வேட்பாளர்களில் 'படிதார்' சமூகத்தை சேர்ந்தவர்கள் 40 பேரையும், OBC பிரிவினை சேர்ந்தவர்கள் 49 பேரையும் கட்சி அறிவித்தது. இதன் மூலம் மாநிலத்தில் இரு சமூகத்தின் வாக்குகளையும் திரட்டிட பாஜக திட்டமிட்டுள்ளது.

இரண்டு துறவிகள்
இது தவிர காங்கிரஸிலிருந்து வந்த ஹர்திக் படேல், கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடஜாவையும் கட்சி களமிறக்கியுள்ளது. அதேபோல இரண்டு துறவிகள், இரண்டு மருத்துவர்கள், பிஎச்டி பட்டம் பெற்றவர்கள் இருவர், 14 பெண்கள், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் 12 பேர், பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 24 பேர், 40 வயதுக்கு உட்பட்டவர்களில் 10 பேர் என சுற்றி சுற்றி வெற்றியை உறுதி செய்யும் வேட்பாளர்களையே பாஜக களமிறக்கியுள்ளதாக கட்சி தலைமை கூறியுள்ளது. கடந்த 2017 தேர்தலில் காங்கிரஸ் 77 இடங்களை கைப்பற்றி பாஜகவுக்கு சவாலை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஆம் ஆத்மி களத்தில் இறங்கியுள்ளது. குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கென வலுவான தலைமை இல்லாததால் அக்கட்சியின் வாக்குகளை ஆம் ஆத்மி பிரிக்கும் என கணிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications