ஹிஜாப்பை மதரசாக்களில் மட்டும் அணியுங்களேன்.. பள்ளி கல்லூரிகளில் எதற்கு? சொல்வது ப்ரக்யா தாக்கூர்
போபால் : கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சைக்கு மத்தியில், மதரஸாக்கள் தவிர மற்ற கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்தால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று பாஜகவின் பிரபல தலைவரும் எம்பியுமான பிரக்யா சிங் தாக்கூர் கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த மாதம் இதுவரை சந்தித்திராத ஒரு புதிய பிரச்சனை உருவானது. அங்குள்ள அரசு கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்த போது வகுப்பில் அமர கூடாது என கல்லூரி நிர்வாகம் கூறியதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்வா மாணவ-மாணவியர்களை சிலர் காவி துண்டு அணிந்து கல்வி நிலையங்களுக்கு வரத் தொடங்கினர்.

மீண்டும் சர்ச்சை
உச்சகட்டமாக இஸ்லாமிய மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து காவி துண்டு அணிந்திருந்த இந்துத்துவ மாணவர்கள் சிலர் அவரை முற்றுகையிட்டு ஜெய் ஸ்ரீராம் என்று கூறினர். உடனே வெகுண்டெழுந்த அந்த மாணவி அல்லாஹு அக்பர் என முழக்கமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த நிலையில் உச்சகட்ட பரபரப்பாக கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள கல்லூரியில், மேலும் ஒரு சர்ச்சை வெடித்தது.

பிரக்யா சிங் தாக்கூர் பாஜக
இந்நிலையில் ஹிஜாப் விவகாரம் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், பாஜக மற்றும் இந்துத்வா அமைப்பினர் ஹிஜாப்புக்கு எதிராக பேசி வருகின்றனர். இந்த வரிசையில் பெண் சாமியாரான சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் கருத்து தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் போபால் நாடாளுமன்ற தொகுதியின் எம்பி ஆக இருப்பவர் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர். அடிக்கடி சர்ச்சை பேச்சுகள் மூலம் பிரபலமானவர் கொரோனா காலத்தில் இவர் தெரிவித்த கருத்துக்கள் இணையத்தில் வைரல் ஆனது.

ஹிஜாப் குறித்து கருத்து
இந்நிலையில், மதரஸாக்கள் தவிர மற்ற கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்தால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்துள்ளா. கேடா பதானி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நடந்த விழாவில் பேசிய அவர், "உங்களிடம் மதரஸாக்கள் உள்ளன. அங்கே (மத்ரஸாக்களில்) ஹிஜாப் அணிந்தாலும், கிஜாப் (முடி நிறம்) பூசினாலும் எங்களுக்கு ஒன்றும் இல்லை. நீங்கள் அங்கு தேவையான உடையை அணிந்து ஒழுக்கத்தை பின்பற்றுங்கள். ஆனால் பள்ளி, கல்லூரிகளின் அறிவையும் ஒழுக்கத்தையும் சிதைத்தால், நாட்டில் ஹிஜாப் அணிந்து கிஜாப் பயன்படுத்தினால் அதை பொறுத்துக்கொள்ள முடியாது," என்று அவர் கூறினார்.

சாமியார் உறுதி
மேலும் பாரம்பரிய இந்து கல்வி நிறுவனங்களான குருகுலத்தில் சீடர்கள் 'பகவா' (காவி) உடையை அணிவார்கள், ஆனால் அத்தகைய மாணவர்கள் மற்ற பள்ளிகளுக்குச் செல்லும்போது, அவர்கள் பள்ளி சீருடையை அணிந்து, கல்வி நிறுவனங்களின் ஒழுக்கத்தைப் பின்பற்றுகிறார்கள் என்றும், நரைத்த தலைமுடியை மறைக்க கிஜாப் பயன்படுத்தப்படுகிறது என்றும், ஹிஜாப் என்பது முகத்தை மறைப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது என்றும் தாக்கூர் கூறினார். மேலும் தீய கண்களால் பார்ப்பவர்களுக்கு எதிராக பர்தா பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் இந்துக்கள் பெண்களை வழிபடுவதால் அவர்களை தீய கண்களால் பார்க்க மாட்டார்கள் என்பது உறுதி என்றும் பிரக்யா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications