For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உத்தரப் பிரதேசம்: 'நாய்கூட சாப்பிடாத ரொட்டிகள்' - தட்டை கையில் ஏந்தியபடி கதறி அழுத உ.பி காவலர்

By BBC News தமிழ்
|

இன்று (12.08.2022) தமிழ்நாடு, இலங்கையில் வெளியாகும் நாளிதழ்கள், இணையதளங்களில் இடம்பெற்ற செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

உத்தர பிரதேச மாநிலம் ஃபிரோஸாபாத் பகுதியில் உள்ள காவலர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி தலைமைக் காவலர் ஒருவர் கதறி அழுத காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளதாக 'தினமணி' செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில், கண்களில் கண்ணீருடன், கையில் உணவுத் தட்டுடன், உத்தரப் பிரதேச மாநில தலைமைக் காவலர் மனோஜ் குமார் பொதுமக்கள் முன்னிலையில் தனது துயரத்தை வெளிப்படுத்தினார்.

பல முறை தரமற்ற உணவு குறித்து உயரதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தப் பயனும் இல்லை என்றும், வெந்ததும் வேகாத சப்பாத்தியும், அதனை தொட்டுக் கொள்ள ஆறாக ஓடும் தண்ணீர் போல பருப்பும் கொடுப்பதாக அவர் கண்ணீர்விட்டுக் கதறினார்.

https://twitter.com/IYC/status/1557392717629366272

"ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை வாங்குகிறார்கள். ஆனால், வேலை முடிந்த பிறகு இந்த ரொட்டிகளைத்தான் காவலர்கள் சாப்பிட வேண்டும். அவ்வளவு ஏன் ஒரு நாய் கூட இந்த ரொட்டிகளை சாப்பிடாது. எங்களால் இந்த உணவை சாப்பிட முடியவில்லை. எங்களது வயிற்றுக்குள் எதுவும் இல்லை என்றால் எப்படித்தான் நாங்கள் வேலை செய்வது? என்று கேட்ட கதறி அழுதார்.

தொடர்ந்து உணவு குறித்து புகார் சொல்லிக் கொண்டிருந்த மனோஜ் குமாரை, அங்கிருந்த சக காவலர்கள் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றனர்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல் முறையாக சர்வதேச பட்டம் விடும் விழா - மாமல்லபுரத்தில் நாளை தொடக்கம்

சர்வதேச பட்டம் விடும் விழா
Getty Images
சர்வதேச பட்டம் விடும் விழா

செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடர்ந்து, சர்வதேச பட்டம் விடும் திருவிழா, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை முதல் 3 நாட்கள் நடக்கிறது என்று 'இந்து தமிழ் திசை' செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச பட்டம் விடும் திருவிழா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இதுவரை நடைபெற்று வந்தது. தற்போது முதல்முறையாக தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக தமிழக சுற்றுலாத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்தில் முதல்முறையாக செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 13ம் தேதி சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடங்க உள்ளது.

இந்த பட்டம் விடும் திருவிழா ஆகஸ்ட் 15ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இதில் வெளிநாடுகளில் இருந்து 4 குழுக்கள், இந்தியாவில் இருந்து 6 குழுக்கள் என மொத்தம் 10 குழுக்கள் கலந்துகொள்கின்றன. மதியம் 12 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த விழாவில், பார்வையாளர்களுக்கென பிரத்யேகமாக மாலை 6 மணி முதல் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில், சிறுவர்களை இலவசமாக அனுமதிக்கவும் பெரியவர்களுக்கு ரூ.150 கட்டணம் வசூலிக்கவும் சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் அதிகமாக டிஜிட்டல் பணம் பயன்படுத்தும் நாடுகள் - இந்தியாவுக்கு எந்த இடம்?

டிஜிட்டல் பணம்
Getty Images
டிஜிட்டல் பணம்

இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 7.3 சதவீதம் பேர் டிஜிட்டல் பணம் வைத்திருப்பதாக 'தினந்தந்தி' செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு, கடந்த ஆண்டில் உலக அளவில் அதிகமாக டிஜிட்டல் பணம் பயன்படுத்துபவர்களை கொண்ட நாடுகளை தரவரிசைப்படுத்தி உள்ளது.

அதில், முதல் 20 இடங்களை பிடித்த நாடுகளை பட்டியலிட்டுள்ளது. முதலிடத்தில் யுக்ரைன் உள்ளது. அங்கு 12.7 சதவீதம் பேரிடம் டிஜிட்டல் பணம் உள்ளது. ரஷ்யா, வெனிசுலா, சிங்கப்பூர், கென்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

இந்தியாவில் அதன் மொத்த மக்கள் தொகையில் 7.3 சதவீதம் பேரிடம் கடந்த ஆண்டு டிஜிட்டல் பணம் இருந்தது. இந்த பட்டியலில் இந்தியா 7-வது இடத்தில் இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில், வளரும் நாடுகள் உள்பட உலகம் முழுவதும் டிஜிட்டல் பணத்தின் பயன்பாடு அதிகரித்து இருந்ததாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"இலங்கையில் உணவு பொருட்களின் விலைகள் மீண்டும் உயரும்"

இலங்கை - உணவு
BBC
இலங்கை - உணவு

இலங்கையில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமையால், உணவுப் ​பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாக 'தமிழ் மிரர்' செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

"அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டாலும் அதன் பலனை நுகர்வோர் அனுபவிக்கும் வகையில் பொறிமுறையொன்றை நுகர்வோர் அதிகார சபை ஏற்படுத்தவேண்டும்," என்று அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கேட்டுக்கொண்டுள்ளார்.

குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்படும் யோகட், ஐஸ்கிரீம், குளிரூட்டப்பட்ட பானங்கள் மற்றும் கோழி இறைச்சி உள்ளிட்ட இன்னும் பல உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கவேண்டிய நிலை​மை, இந்த மின் கட்டண அதிகரிப்பால் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=XCrXqhEkFw4

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
breads not even eaten by dogs uttar pradesh policeman cries with plate in hand
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X