For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்களை குழப்பும் எக்சிட் போல்கள்: ஒன்றுக்கொன்று சம்மந்தம் இல்லை

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ஆளுக்கு ஒன்றாக சொல்லி மக்களை மண்டையை பிய்க்க வைத்துக் கொண்டுள்ளது எக்சிட் போல் கருத்துக் கணிப்புகள். நாடாளுமன்ற தேர்தலின் இறுதி கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்தது. இதையடுத்து வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல செய்தி சேனல்களும் வெளியிட்டுள்ளன.

இவர்கள் 289

இவர்கள் 289

என்.டபிள்யு.எஸ்.சி ஓட்டர் நிறுவன கருத்துக் கணிப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 289 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 101 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. தேசிய அளவில் பாஜக மட்டும் 249 இடங்களை கைப்பற்றும் என்றும், அதன் கூட்டணி கட்சிகள் 40 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி மட்டும் 78 இடங்களில் வெற்றி பெறும் என்றும், அதன் கூட்டணிக் கட்சிகள் 53 தொகுதிகளை கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது. மற்ற கட்சிகள் 153 இடங்களில் வெற்றி பெறும் என்றும் இதில் 5 தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரியவருகிறது.

300ஐ நெருங்கும் என்கிறார்கள்

300ஐ நெருங்கும் என்கிறார்கள்

பாஜக கூட்டணி 298 இடங்களும், காங்கிரஸ் கூட்டணி 93 இடங்களும், மற்றவர்கள் 152 இடங்களும் பெறுவார்கள் என்று ஆஜ்தக் டிவி வெளியிட்டுள்ளது. 315 இடங்களை பாஜக கூட்டணியும், 80 இடங்களை காங்கிரஸ் கூட்டணியும், 148 இடங்களை மற்றவர்களும் பெறுவார்கள் என்று இந்தியா நியூஸ் டிவி வெளியிட்டுள்ளது. பாஜக கூட்டணி 299, காங்கிரஸ் கூட்டணி 112, மற்றவர்கள் 132 இடங்களை பெறுவார்கள் என்று ஜீ நியூஸ் தெரிவித்துள்ளது. இந்தியா டிவி, பாஜக கூட்டணி 317 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 104 இடங்களையும், மற்றவர்கள் 122 இடங்களையும் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்திலும் குழப்பம்

தமிழகத்திலும் குழப்பம்

தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக 27 இடங்களை கைப்பற்றும் என்று சி ஓட்டர் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. திமுக 6 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி 5 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் பாஜக 2, தேமுதிக 1, பாமக 1, மதிமுக 1 தொகுதியிலும் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக தொகுதியில் திமுக

அதிக தொகுதியில் திமுக

ஹெட்லைன்ஸ் டுடே டிவி வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவில், தமிழகத்தில் அ.தி.மு.கவுக்கு 20 முதல் 24 தொகுதிகள் வரை கிடைக்கும் எனவும், தி.மு.கவுக்கு 10 முதல் 14 தொகுதிகள் வரை கிடைக்கும் எனவும், தே.ஜ., கூட்டணிக்கு 5 தொகுதிகளும், காங்கிரசுக்கு ஒரு தொகுதியும் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. சி-ஓட்டரை ஒப்பிட்டால் திமுகவுக்கு அதிக இடம் கிடைப்பது போல ஹெட்லைன்ஸ் டுடே கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

இங்க அதிமுகவுக்கு அதிகம்..

இங்க அதிமுகவுக்கு அதிகம்..

டைம்ஸ்நவ் டிவி வெளியிட்ட கருத்துக்கணிப்பில், தமிழகத்தில் அ.தி.மு.க.,வுக்கு 31 தொகுதிகளும், தி.மு.க.,வுக்கு 7 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. அதிமுக 24, திமுக 5, பாஜக கூட்டணி 4 இடங்களை பிடிக்கும் என்று தந்தி டிவி தெரிவித்துள்ளது.

முரண்பாடு:

முரண்பாடு:

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு நடந்த சட்டசபை பொதுத்தேர்தலில் 163 இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியை ருசித்தது பாஜக. வெறும் 21 தொகுதிகள்தான் காங்கிரசுக்கு கிடைத்தன. அந்த தேர்தல் நடந்து ஆறு மாதங்கள்தான் ஆகியுள்ளதால் ராஜஸ்தான் அரசு மீது மக்களுக்கு எதிர்ப்பலை இருக்க வாய்ப்பில்லை. ஆனால் எக்சிட் போலில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் காங்கிரஸ் 14ஐ கைப்பற்றும் என்கிறது டைம்ஸ் நவ். பாஜவுக்கு 10 தான் கிடைக்குமாம். பிற சேனல்களோ, பாஜக 22 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று கூறுகின்றன.

குஜராத் கோலாட்டம்

குஜராத் கோலாட்டம்

பிரதான ஒரு கட்சியின் பிரதமர் வேட்பாளராக தங்கள் மாநில முதல்வர் அறிவிக்கப்பட்டுள்ளார் என்றால் மக்கள் மொத்தமாக வாக்குகளை அள்ளி குவிக்கமாட்டார்களா? ஆனால் மோடி ஆளும் குஜராத்தில், சி-ஓட்டர் கணிப்புப்படி 22 தொகுதிகள்தான் பாஜகவுக்கு கிடைக்கும், நான்கு தொகுதிகள் காங்கிரசிடம் செல்லும் என்கிறது. ஆனால் ஹெட்லைன்ஸ் டுடே 25 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்கிறது.

லாலுவுக்கு முட்டை...

லாலுவுக்கு முட்டை...

பிகாரில் யாதவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு லாலு பிரசாத் செல்லப் பிள்ளையாக உள்ளார். ஆனால் அவர் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாது என்கிறது டைம்ஸ் நவ். கூட்டணியிலுள்ள காங்கிரஸ் வேண்டுமானால் 2 தொகுதியை வெல்லும் என்றும் அந்த டிவி கூறுகிறது. ஆனால் ஏபிபி நியூஸ் சேனலோ பிகாரில் காங்கிரஸ்-லாலு கூட்டணி 15 இடங்களை பிடிக்கும் என்கிறது.

கர்நாடக கலாட்டா

கர்நாடக கலாட்டா

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு வந்து ஓராண்டே ஆகியுள்ள நிலையில் பெரிய அதிருப்தியில்லாத நிலையிலும் 7 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் வெல்லும் என்கிறது டைம்ஸ் நவ். பாஜக 20 சீட்டை பிடிக்குமாம். ஆனால் சிஎன்என்-ஐபிஎன் அப்படியே இருமடங்கு சீட்டை காங்கிரசுக்கு கொடுத்துள்ளது. 14 தொகுதி காங்கிரசுக்கு என்றால் பாஜகவுக்கு 12தான் என்கிறது ஐபிஎன்.

இந்த அளவுக்கு முரண்பாடுடன் இருக்கும் கருத்துக் கணிப்புகளில் எதை நம்புவது என்பதே மக்கள் கேட்கும் கேள்வி.

English summary
Exit poll results which were released by various Tv channels, reveals that, they are giving contradictory statistics in terms of election results are concern.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X