• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி: இஸ்ரேல் மாடல் பற்றி தெரியுமா?

By BBC News தமிழ்
|
கொரோனா தடுப்பூசி
Reuters
கொரோனா தடுப்பூசி

பாரத் பயோடெக் நிறுவனத்தின் 'கோவேக்சின்' தடுப்பூசியை, 12 வயதுக்குக் கீழ் உள்ள சிறார்களுக்கு அவசரகாலப் பயன்பாட்டுக்காக இந்தியா பரிந்துரை செய்துள்ளது. இதற்கு இன்னும் இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் அலுவலகம் ஒப்புதல் வழங்கவில்லை.

இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் ஃபைசர், ஜான்சன் & ஜான்சன், மாடா்னா, சீனாவின் சீனோஃபாா்ம் தடுப்பூசிகளை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த அனுமதியளித்துள்ள உலக சுகாதார அமைப்பு, இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவேக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கவில்லை.

இந்நிலையில் 2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய அரசின் வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த விவகாரத்தில் உலகின் பிற நாடுகளில் உள்ள நிலை என்ன?

இஸ்ரேலில் சிறார்களுக்கு தடுப்பூசி

இஸ்ரேலில், 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் மற்றும் சிறார்களுக்கு, கோவிட் -19 தடுப்பூசியின் ஒரு டோஸ் போடப்பட்டுள்ளது. சிலர் ஏற்கெனவே பூஸ்டர் டோஸையும் பெற்றுள்ளனர். இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

2021 ஆகஸ்ட் மாத பிற்பகுதியில், கோவிட் -19 க்கு எதிரான முதல் தடுப்பூசிக்காக, தாலியா ஷ்மூவேல் தனது ஐந்து வயது மகனை, இஸ்ரேலில் ஜெருசலேமில் உள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அந்த சிறுவன் இதயக் குறைபாட்டுடன் பிறந்தவர். கூடவே பக்கவிளைவு காரணமாக மூச்சுக்குழாயும் குறுகலாகியுள்ளது. இது அவருக்கு நோய் ஆபத்தை அதிகமாக்குகிறது."அவன் எப்போதெல்லாம் நோய்வாய்ப்படுகிறானோ, அது பெரும்பாலும் நிமோனியாவாக மாறிவிடும் என்றும் அவன் நோய்வாய்ப்படுவது அதிகம்," என்றும் ஷ்மூவேல் கூறுகிறார்.

மூன்று குழந்தைகளின் தாயான ஷ்மூவேல், இளம் வயது காரணமாக, தன் மகனுக்கு தடுப்பூசி போட இஸ்ரேலின் சுகாதார அமைச்சகத்தின் சிறப்பு அங்கீகாரத்தை பெறவேண்டியிருந்தது.

அவர் உற்சாகமாக உணர்ந்தார். அது சரியான தேர்வு என்று நம்பினார். "நானும் என் கணவரும் ஆராய்ச்சி ஆய்வாளர்கள். நாங்கள் வெளிவரும் ஒவ்வொரு தரவையும் பார்க்கிறோம்; நாங்கள் எல்லாவற்றையும் கண்காணிக்கிறோம்," என்று அவர் கூறுகிறார். "நாங்கள் பல்வேறு ஆதாரங்களை சரிபார்க்கிறோம். எண்களை பார்க்கும்போது ஆம், [தடுப்பூசிக்கு] பக்க விளைவுகளின் சாத்தியக்கூறுகள் உள்ளன. இருப்பினும், கோவிட் -19 இன் பக்க விளைவுகள் என் மகனுக்கு மேலும் ஆபத்தானவை,"என்கிறார் அவர்.

கொரோனா தடுப்பூசி
Reuters
கொரோனா தடுப்பூசி

உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கோவிட் -19 தடுப்பூசிகளை வழங்கத் தொடங்கியுள்ளதால், எதிர்காலம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்ற ஒரு பார்வையை இஸ்ரேல் அளிக்கிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அந்த நாடு அதன் வயது வந்தோரின் பெரும்பகுதிக்கு தடுப்பூசி போட்டது. பள்ளிக்கூடங்களில் தொற்று நிகழ்வுகள் ஏற்பட்டபிறகு ஜூன் மாதத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட பரிந்துரைத்தது.

இப்போது அந்த வயதினருக்கான பூஸ்டர் ஷாட் ஆக மூன்றாவது டோஸை ஏற்கனவே வழங்கி வருகிறது. ஜூலை மாதம் முதல் இஸ்ரேல், 5-11 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு "விதிவிலக்கான சூழ்நிலைகளில்" தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. இதில் கடுமையான நாள்பட்ட நுரையீரல் நோய்கள் மற்றும் இதய செயலிழப்பு ஆகியவை அடங்கும்.

ஆனால் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி குழந்தைகளுக்கு பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டாலும், குழந்தைகள் விஷயத்தில் முடிவை எடுப்பது சிக்கலானதாக இருக்கும். குழந்தைகள் கோவிட் -19 ஆல் குறைவாகவே பாதிக்கப்படுவதால், தடுப்பூசியின் சிறிய எண்ணிக்கையிலான பக்கவிளைவுகள் கூட தடுப்பூசியை நியாயப்படுத்துவதை கடினமாக்கும்.

நிபுணர் கருத்து என்ன?

"தடுப்பூசி வேலை செய்கிறது" என்கிறார் சுவிட்சர்லாந்தில் உள்ள பாசெல் பல்கலைக்கழக குழந்தைகள் மருத்துவமனையின், குழந்தை தொற்று நோய்களுக்கான நிபுணர் நிக்கோல் ரிட்ஸ். "ஆனால் 12 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு நாங்கள் செய்ததைப் போலவே, வயது குறையும்போது நாம் மேலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வாழ்வின் முதல் ஆண்டில் நாம் பல தடுப்பூசிகளைப்போடுவது போலவே, இதுவும் முதலாண்டில் போடப்படும் தடுப்பூசியாக இருக்கக்கூடும். வயது குறையக்குறைய இது பாதுகாப்பான தடுப்பூசிதான் என்பதைக் காட்டும் அதிக அளவு தரவு உங்களுக்குத் தேவை. அது( தரவைச் சேகரிப்பது) மிகவும் கடினமாக இருக்கும் ஏனென்றால் ஒரு ஐந்து வயது குழந்தையால் தெளிவாக எதையும் சொல்லமுடியாது. 'என் இதயத்தில் ஒரு விசித்திரமான உணர்வு இருக்கிறது, இன்று நான் மகிழ்ச்சியாக உணரவில்லை' என்று உங்களிடஃம் ஒரு 16 வயது இளைஞன் சொல்வது போல 5 வயதுக்குழந்தை சொல்லாது," என்கிறார் அவர்.

கொரோனா தடுப்பூசி
Reuters
கொரோனா தடுப்பூசி

குழந்தைகளுக்கான தடுப்பூசி அறிமுகத்தை இஸ்ரேல் பெரிய பிரச்னைகள் ஏதும் இல்லாமல் செயல்படுத்தியது. இன்றுவரை 12 முதல் 15 வயதுடையவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு இஸ்ரேல் தடுப்பூசி போட்டுள்ளது.

மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் ஆங்காங்கே வீதிகளில் இறங்கி ஆர்பாட்டம் செய்தனர். இருப்பினும், பெரும்பாலான இஸ்ரேலிய பெற்றோர்கள் தங்கள் ஓரளவு வயதான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது:

2021 அக்டோபர் இறுதிக்குள் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 53.7%, மற்றும் 16 முதல் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 84%, முதல் டோஸை பெறுவார்கள் என்று சுகாதார அமைச்சகத்தின் கோவிட் -19 டாஷ்போர்டு தெரிவிக்கிறது.

துணை நோய் இல்லாதவர்கள் உட்பட இளைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுவது பற்றி எப்படி உணர்கிறார்கள் என்று பெற்றோர்களிடம் கேட்டபோது, பலர் தங்கள் உற்சாகத்தைக் காட்டினர். தங்கள் குழந்தைகள் கோவிட்டால் பாதிக்கப்படக்கூடும் என்ற பயம், பொதுமுடக்கங்கள் பற்றிய கவலை, அவ்வப்போது செய்யவேண்டியுள்ள தனிமைப்படுத்தல் , வீட்டுப் பள்ளி, தங்கள் குழந்தைகள் பள்ளியில் பின்தங்குவது பற்றிய கவலை அல்லது தொலைதூர கற்பித்தலில் கற்றஇயலாமை, கவனம் செலுத்த இயலாமை அல்லது ஜூம் அழைப்பு செய்ய ஸ்க்ரீன் இல்லாமை ஆகியன இந்த உற்சாகத்திற்கு அவர்கள் கூறும் காரணங்கள்.

மிக அதிகமாக பரவக்கூடிய டெல்டா திரிபு எதிர்கால பொதுமுடக்கம் குறித்த அச்சத்தை தூண்டியுள்ளது.

கொரோனா தடுப்பூசி
Getty Images
கொரோனா தடுப்பூசி

தன் மொத்த மக்கள்தொகையில் 60% க்கு முழுமையாக தடுப்பூசி போட்ட வெற்றிகரமான பிரசாரத்தை மேற்கோள் காட்டி இஸ்ரேல், 2021 ஜூன் மாத நடுப்பகுதியில் உட்புற முககவச ஆணையை நீக்கியது.

கோவிட் -19 காரணமாக அதிக ஆபத்தில் இருக்கும் வயதானவர்களில், அந்த விகிதம் இன்னும் அதிகமாக உள்ளது. அதாவது 70 வயதுக்கு மேற்பட்ட இஸ்ரேலியர்களில் கிட்டத்தட்ட 90% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பத்து நாட்களுக்குப் பிறகு, டெல்டா திரிபு காட்டுத்தீ போலப்பரவியதால், உட்புற முககவச உத்தரவு மீண்டும் நடைமுறைக்கு வந்தது.

கோடைக்காலத்தின் பிற்பகுதியில், டெல்டா திரிபு இஸ்ரேலில் அதிகமாக காணப்பட்டது.

செப்டம்பர் 1 அன்று இஸ்ரேலில் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, கோவிட் -19 சோதனையில் பாசிட்டிவ் ஆகும் குழந்தைகளின் எண்ணிக்கை வியப்பூட்டும் வகையில் உயரத் தொடங்கியது. மாத இறுதிக்குள் இஸ்ரேலில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 54% க்கும் அதிகமானவர்கள், பூஜ்யம் முதல் 19 வயது வரையிலான குழந்தைகள் என்று இஸ்ரேலிய சுகாதார அமைச்சகத்தின் கோவிட் -19 டாஷ்போர்டு தெரிவித்துள்ளது. ஒரு நாள் பள்ளிக்குப் பிறகு சில குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக யூதர்களின் புத்தாண்டை ஜெப ஆலயத்திற்குள் நடத்த திட்டமிட்டிருந்த இஸ்ரேலியர்கள் திடீரென உள்ளூர் பூங்காக்களில் வெளிப்புற பிரார்த்தனை சேவைகளுக்கு ஏற்பாடு செய்தனர். மரங்களின் அடியில் அவர்கள் பாரம்பரிய ராமின் கொம்பு அல்லது ஷோஃபாரை ஊதியதை, பூங்காவில் ஜாகிங் செய்துகொண்டிருந்தவர்கள், நின்று கேட்டனர்.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது, பின்னர் கோவிட் -19 அதிகரிப்பு மற்றும் பின்னடைவுகள் என்ற சுழற்சியை உடைக்க குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது உதவக்கூடும் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

"நான் நம்புகிறேன் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக, சிறுவயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று நான் தொடர்ந்து கூறிவருகிறேன்,' என்கிறார் தொற்றுநோயியல் நிபுணர் மன்ஃப்ரெட் கிரீன். இஸ்ரேலில் ஹைஃபா பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரப் பள்ளியில் பேராசிரியராக இவர் இருக்கிறார். "இது மிகவும் பரவக்கூடிய நோய் என்று ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்குத் தெரியும். இப்போது டெல்டா திரிபுடன் அது மேலும் அதிகம் பரவுகிறது."என்று அவர் விளக்கினார்.

மக்கள்தொகையில் 60% முதல் 70% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால், தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று பொது சுகாதார அதிகாரிகள் கருதினர் என்று அவர் கூறுகிறார். அந்த சதவிகிதம் மிக அதிகமாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் இப்போது உணர்ந்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது மக்கள்தொகையில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களின் 'எண்ணிக்கையை குறைக்கும்'.

குழந்தைகள் பள்ளிகளில் கூடுவதால், அவர்கள் நோயை பரப்பலாம் என்று க்ரீன் மேலும் கூறுகிறார்.. நோய்த்தொற்று ஏற்பட்டால், அவர்கள் அறிகுறியற்றவர்களாக அல்லது லேசான அறிகுறிகளை மட்டுமே கொண்டவர்களாக இருக்கலாம்.ஆனால் எல்லா குழந்தைகளுமே இதனால் பாதிக்கப்படமாட்டார்கள் என்பது இதற்கு அர்த்தமல்ல.

அமெரிக்காவில், டெல்டா திரிபு ஆதிக்கம் செலுத்திய, ஜூன் மாத இறுதியில் இருந்து 2021 ஆகஸ்ட் நடுப்பகுதி வரை, குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் மருத்துவமனை சேர்க்கை கிட்டத்தட்ட ஐந்து மடங்கு உயர்ந்தது என்றுஅமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலில் அக்டோபர் மாதம், தீவிரமாக பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள நோயாளிகளில், 0.2 முதல் 0.5% வரையிலானவர்கள், பூஜ்ஜியத்திலிருந்து 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள். தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலில் பூஜ்ஜியம் முதல் 19 வயது வரையிலான மொத்தம் 12 குழந்தைகள் கோவிட் -19 நோயால் இறந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகத்தின் கோவிட் -19 டாஷ்போர்டு தெரிவிக்கிறது.

கொரோனா தடுப்பூசி
Getty Images
கொரோனா தடுப்பூசி

குழந்தைகள் தொற்றுநோய்க்குப் பிறகு பெரும்பாலும் தலைவலி மற்றும் சோர்வு போன்ற சில நீடித்த அறிகுறிகளின் ஆபத்தில் உள்ளனர். இது "நீண்ட கோவிட்" என்று அழைக்கப்படுகிறது. இங்கிலாந்தில், ஐந்து முதல் 17 வயதுக்குட்பட்ட 258,790 குழந்தைகளின் சமீபத்திய ஆய்வில், கோவிட் -19 க்கு பாசிட்டிவ் ஆன 1,734 குழந்தைகளில் 2% முதல் 4% வரையிலானவர்கள் இத்தகைய நீண்டகால அறிகுறிகளை அனுபவித்ததாகக் கண்டறியப்பட்டது.

இஸ்ரேலில் செய்யப்பட்ட, இதேபோன்ற ஆய்வில், கோவிட் -19 இலிருந்து மீண்ட, மூன்று முதல் 18 வயதுக்குட்பட்ட 13,864 குழந்தைகளில் 11% பேருக்கு, தூக்கமின்மை மற்றும் கவனம் செலுத்தும் பிரச்சனைகள் உள்ளிட்ட நீண்டகால அறிகுறிகள் காணப்பட்டதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த விளைவுகளில் சில, நீண்டகால பொது முடக்கம் மற்றும் பள்ளி மூடல்கள் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வின் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

"இந்த காரணிகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு மற்றும் இன்னும் கூட இளம் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவது, மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது," என்று கிரீன் கூறுகிறார். 12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்ட இஸ்ரேலின் அனுபவத்திலிருந்து, நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்னவென்றால், "தடுப்பூசி நல்ல பாதுகாப்பைக்கொண்டுள்ளது. கூடவே கணிசமான எண்ணிக்கையில் கடும் பாதக விளைவுகளும் இல்லை" என்று அவர் மேலும் கூறுகிறார்.

இஸ்ரேலில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி பெற்ற 16 முதல் 24 வயதுக்குட்பட்ட 3,000 பேரில் ஒருவருக்கும், 6,000 ஆண்களில் ஒருவருக்கும், 'மயோகார்டிடிஸ்" எனப்படும் அரிய இதய தசை அழற்சி உருவானது.

இது "கிட்டத்தட்ட எப்போதும்" சிகிச்சை அளிக்கக்கூடிய ஒன்றுதான், ஆனாலும் மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டிவரலாம் என்று க்ரீன் கூறுகிறார். கோவிட் -19 நோய்த்தொற்றின் ஆபத்துகளின் பின்னணியில் அந்த பக்க விளைவையும் நாம் பார்க்க வேண்டியிருக்கும். 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களிடையே இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஆய்வில், கோவிட் -19 நோய்த்தொற்றுக்குப் பிறகான 'மயோகார்டிடிஸ் ஆபத்து', தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு ஏற்படுவதைக்காட்டிலும் "கணிசமாக அதிகம்" என்று கண்டறியப்பட்டது.

மற்ற இஸ்ரேலிய பொது சுகாதார அதிகாரிகள் அதிக எச்சரிக்கையை வெளிப்படுத்துகின்றனர்.

"12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது, மருத்துவ நெறிமுறை மற்றும் சமூகப் பிரச்சனைகள் தொடர்பான கடினமான கேள்விகளை எழுப்புகிறது" என்று டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் சுகாதாரக் கொள்கை நிபுணரும், இஸ்ரேலிய சுகாதார அமைச்சகத்தின் கோவிட் -19 ஆலோசனைக் குழு உறுப்பினருமான அதி நிவ்-யாகோடா ஒரு மின்னஞ்சலில் எழுதினார்.

" ஒரு புறம், ஐந்து முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது கோவிட் -19 நோயின் பரவலைச் சமாளிக்க மற்றும் கொரோனா தொற்றுநோயின் பரிமாணங்களைக் குறைக்கவும் மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் மறுபுறம் இயற்கையான கவலை, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சுகாதார விளைவுகளைப் பற்றியது. "என்று அவர் குறிப்பிட்டார்.

கொரோனா தடுப்பூசி
Getty Images
கொரோனா தடுப்பூசி

இதே கவலைகளை, பாசெல் பல்கலைக்கழக குழந்தைகள் மருத்துவமனையின் நிக்கோல் ரிட்ஸும் எழுப்புகிறார்.

" அவர்களை தற்காத்துக்கொள்ள இளைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவீர்களா அல்லது சமுதாயத்தைப் பாதுகாக்க அவர்களுக்கு தடுப்பூசி போடுவீர்களா?" என்று PITS (குழந்தை அழற்சி மல்டிசிஸ்டம் சிண்ட்ரோம்) பாதித்த 20 முதல் 30 குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு சிகிச்சையளித்த, குழந்தை தொற்று நோய் நிபுணரான ரிட்ஸ் வினவுகிறார். இது அரிதான மற்றும் கடுமையான நோயாகும். கோவிட் 19 இருக்கும் அல்லது இருந்த குழந்தைகளில் 0.5% க்கும் குறைவானவர்களில் இது ஏற்படுகிறது.

பெரும்பாலான குழந்தைகளில் இந்த நோய் தீங்கற்றதாக இருந்தாலும், அவர்களில் சிறிய பிரிவினரை இது கடுமையாக தாக்குகிறது. உடல் பருமன், நீரிழிவு அல்லது நுரையீரல் நோய்கள் போன்ற ஆபத்து காரணிகள் உள்ளவர்கள் தடுப்பூசி மூலம் நேரடியாக பயனடைவார்கள் என்று ரிட்ஸ் விளக்குகிறார். ஆனால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதன் ஒரே நன்மை அவர்களின் தாத்தா பாட்டியைப் பாதுகாப்பதுதான் என்றால், அந்த த்தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.

12 முதல் 17 வயதிற்குட்பட்ட இளம் பருவத்தினருக்கு கோவிட் -19 பாதுகாப்பு குறித்த சமீபத்திய சிடிசி அறிக்கையை ரிட்ஸ் சுட்டிக்காட்டுகிறார். இது ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி பெற்ற 8.9 மில்லியன் அமெரிக்க இளைஞர்களை ஆராய்ந்தது. தடுப்பூசி பாதகமான நிகழ்வு அறிக்கை அமைப்பு (Vaers) , தடுப்பூசி போடப்பட்டபிறகு 9,246 பாதகமான நிகழ்வுகள் அறிக்கைகளைப் பெற்றது.

அதாவது தடுப்பூசி போடப்பட்ட ஒவ்வொரு ஆயிரம் நோயாளிகளில் ஒருவர். இந்த பாதகமான நிகழ்வுகளில் 90% க்கும் அதிகமானவை தலைச்சுற்றல் மற்றும் தலைவலி போன்ற "தீவிரமற்ற" நிகழ்வுகள். மீதமுள்வை அல்லது 9.3%, மார்பு வலி, வாந்தி, காய்ச்சல் மற்றும் மயோகார்டிடிஸ் உள்ளிட்ட தீவிர பாதக நிகழ்வுகளாகும். மயோகார்டிடிஸ் காரணமான இறப்பு அறிக்கை எதையும் Vaers பெறவில்லை என்று சிடிசி அறிக்கை குறிப்பிடுகிறது.

இருப்பினும் டெல்டா திரிபின் பரவலானது, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் தங்கள் நிலைப்பாட்டை மாற்ற சில ஆராய்ச்சியாளர்களை தூண்டியுள்ளது.

"டெல்டா திரிபு அதிகரித்து வருவதைக்கருத்தில் கொண்டு, [மருத்துவ] பரிசோதனைகள் முடிந்து தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்று அறிவிக்கப்பட்டதும், 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு உடனே தடுப்பூசி போடுவது அவசியம்," என்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் மருத்துவர் மோனிகா காந்தி, ஒரு மின்னஞ்சல் மூலம் பிபிசியிடம் கூறினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அந்த வயதினருக்கு தடுப்பூசி போட வேண்டிய அவசியத்தை அவர் உணர்ந்திருக்கவில்லை. ஆனால் டெல்டா திரிபு சூழலை மாற்றிவிட்டது. "அதன் அதிக பரவும் தன்மையை பார்க்கும்போது , வீட்டிலுள்ளவர்கள் குறிப்பாக வயதானவர்களைப் பாதுகாக்க இளைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை நான் ஆதரிக்கிறேன்,"என்கிறார் அவர்.

கொரோனா தடுப்பூசி
Getty Images
கொரோனா தடுப்பூசி

க்ரீனும் இதை ஒப்புக்கொள்கிறார். "அவர்களுக்கு அதிகம் பலன் அளிக்காத, ஆனால் சமுதாயத்திற்கு மட்டும் உதவப் போகும் தடுப்பூசியை ஏன் குழந்தைகள் பெற வேண்டும் என்று சிலர் கேட்பார்கள் என்று எனக்குத் தெரியும். பதில் என்னவென்றால், குழந்தைகள் சமூகத்திற்கு வெளியே வாழும் இனங்கள் அல்ல. அவர்கள் சமுதாயத்தின் ஒரு பகுதி. பெற்றோர்கள் நோய்வாய்ப்பட்டால், அவர்களின் தாத்தா பாட்டி, அல்லது அவர்களின் அண்டை வீட்டார் நோய்வாய்ப்பாட்டாலும், அது அவர்களை பாதிக்கும். "என்று அவர் குறிப்பிட்டார்.

பெருவாரியான புள்ளிவிவரங்களின் மத்தியில் பெற்றோர் ஒரு உறுதியான முடிவை எடுப்பது கடினம். ஆயினும் இதனால் சிலர் நிம்மதியை உணர்கிறார்கள் மற்றும் நம்பிக்கையின் உணர்வும் மேலோங்கியுள்ளது.

"என்னால் முடிந்தால் எனது 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நொடியில் தடுப்பூசி போட்டுவிடுவேன்," என்று இஸ்ரேலிய நகரமான மொடினில் வசிக்கும் ஃப்ரீலான்ஸ் எழுத்தாளரும் ஆசிரியருமான கிலா ரோஸ் கூறுகிறார். அவருக்கு 18 வயது மற்றும் 15 வயது (இருவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது) 11 வயது மற்றும் கிட்டத்தட்ட ஏழு வயதான இரட்டையர்கள் என ஐந்து குழந்தைகள் உல்ளனர். டெல்டா திரிபு அதிகமாகப்பரவுவது, மீண்டும் மீண்டும் அமலாகும் பொது முடக்கம் மற்றும் தனிமைப்படுத்தல்களையும், தன் இளைய குழந்தைகளின் தடுப்பூசிகளை விரைவுபடுத்துவதற்கான காரணங்களாக, ரோஸ் மேற்கோள் காட்டுகிறார்.

பள்ளிக்கூடமூடல்களும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. "குழந்தைகள் உண்மையில் கஷ்டப்படுகிறார்கள்," என்று அவர் கூறுகிறார். "சில மாதங்கள் அல்லது ஒரு வருடம் இருக்கும் என்று நாம் நினைத்தபோது விஷயம் வேறு. ஆனால் இப்போது நாம் தொடர்ச்சியாக மூன்றாவது குழப்பமான பள்ளி ஆண்டுக்கு செல்கிறோம்."என்கிறார் அவர்.

தனது இளைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் எந்தத்தயக்கமும் இல்லை என்று கூறும் ரோஸ், தடுப்பூசியை, "தனிமைப்படுத்தல் தேவைஇல்லாத" அட்டை என்று கருதுகிறார். "நான் என் குழந்தைகளுடன் முதல் ஆளாக வரிசையில் இருப்பேன். ஒருவேளை நிலமையை மாற்ற இதுவே இறுதியாக தேவைப்படும் ஒன்றாக இருக்கலாம், " என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
In Israel, more than half of those over 12 years old and some younger children have had a single dose of Covid-19 vaccine – with a few already onto booster jabs. What can we learn from this?.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X