For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக டிரெண்டாகும் ஹேஷ்டேக் - அதிகாரத்தை மீறுகிறாரா ஆர்.என். ரவி?

By BBC News தமிழ்
|

தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பிய நடவடிக்கை, அரசியல் சர்ச்சையாக மாறி, மாநில அரசுக்கும் மாநில ஆளுநருக்கும் இடையிலான மோதலாக உருவெடுத்திருக்கிறது. இந்த விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரம் என்ன?

2021ஆம் ஆண்டு, செப்டம்பர் 13ஆம் தேதி தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி சட்டப்பேரவையில், தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவை (Undergraduate Medical Degree Courses Bill, 2021), சட்டப்பேரவை சபாநாயகரின் மறுபரிசீலனைக்காக திருப்பி அனுப்பியுள்ளார் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி.

இந்ச மசோதா நிறைவேற்றப்பட்ட சுமார் 5 மாதங்களுக்குப் பின் தமது நிலைப்பாட்டை ஆளுநர் தெரிவித்துள்ளார்.

"இந்த சட்ட முன்வடிவு மாநிலத்திலுள்ள குறிப்பாக கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது என ஆளுநர் கருதுகிறார்" என ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பியதற்கான காரணமாக அவரது மாளிகை பிப்ரவரி 3ஆம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, "உச்ச நீதிமன்றத்தில், கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி, வேலூர் அமைப்பு எதிர் இந்திய அரசு வழக்கில், சமூக நீதி நோக்கத்திலிருந்து விரிவாக ஆராய்ந்து, ஏழை, எளிய மாணவர்கள் மீதான பொருளாதார சுரண்டலைத் தடுக்கக் கூடியதென்றும், சமூக நீதியை முன்னெடுத்துச் செல்லவும், நீட் தேர்வின் தேவையை உறுதி செய்துள்ளது" எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனிதா தற்கொலைக்கு பிறகு தீவிரமான விவாதம்

2017ஆம் ஆண்டில், அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வின் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றதால், தன் மருத்துவ கனவு சாத்தியமாகவில்லை எனக்கூறி தற்கொலை செய்து கொண்டார்.

அப்போதிலிருந்து 5 ஆண்டுகளாக தமிழகத்தில் நீட் தேர்வு குறித்த விவாதம் பொதுவெளியில் தீவிரமாக காணப்படுகிறது.

ஏற்கெனவே, 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போது நடந்த அதிமுக ஆட்சியின்போது நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

அதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதையடுத்தே மருத்துவ படிப்பில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கி முந்தையை அதிமுக அரசு சட்டம் இயற்றியது.

ஏ.கே. ராஜன் குழு பரிந்துரை

இந்த நிலையில், புதிதாக ஆட்சிக்கு வந்த திமுக, முதலாவதாக நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலை குழுவை அமைத்தது.

இக்குழு வெளியிட்ட 165 பக்க ஆய்வறிக்கையில், நீட் தேர்வு தமிழக மாணவர்களிடையே ஏற்படுத்திய தாக்கம் குறித்து மட்டுமல்லாமல், இத்தேர்வு தொடர்ந்தால் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய போதிய மருத்துவர்கள் இல்லாமல், தமிழ்நாட்டின் பொது சுகாதார கட்டமைப்பே கேள்விக்குள்ளாகும் என தரவுகளுடன் எடுத்துரைத்தது.

மேலும், கிராமப்புற மற்றும் நகரங்களில் வசிக்கும் ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்வியை படிக்க முடியாத நிலை ஏற்படும் எனவும், நகர்ப்புறங்களில், ஏற்கெனவே கல்வி கற்ற தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள், ஆங்கில வழிக்கல்வி பயின்ற மாணவர்களுக்கு மட்டுமே நீட் தேர்வு உதவியுள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே, பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என அக்குழு பரிந்துரைத்திருந்தது.

இந்த அறிக்கையின் அடிப்படையில், தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவைத்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது திருப்பி அனுப்பியுள்ளார். இதையடுத்து, ஆளுநரின் இச்செயலுக்கு எதிராக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் ரவிக்கு கண்டனம்

"அண்ணாவின் 53-ஆவது நினைவுநாளில், "ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா?" என்று அண்ணா அன்றே காரணத்தோடு எழுப்பிய கேள்வியை எண்ணிப் பார்க்கிறேன்" என மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/mkstalin/status/1489239936012193796

மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என நாடாளுமன்றத்தில் இரு தினங்களாக திமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

சமூக வலைதளங்களிலும், 'GetOutGovernorRavi', 'GetOutRavi' ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகிவருகின்றன.

இப்போது மட்டுமல்ல, எதிர்கட்சியாக இருந்தபோதும், முந்தைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் செயல்பாடுகளையும் திமுக விமர்சித்துள்ளது.

மாநில அரசின் அதிகாரத்தை மீறி செயல்படுவதாக கூறி, முந்தைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்ய சென்ற இடங்களில் திமுக கறுப்புக் கொடி போராட்டம் நடத்தியது.

இப்போது ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசே வலியுறுத்தி வருகிறது. அதன் பிரதிபலிப்புதான், நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பிக்கள் எழுப்பும் "ஆளுநரை திரும்பப்பெறு" முழக்கம்.

அரசியலமைப்பில் ஆளுநருக்கு உள்ள அதிகாரம்

நீட் மசோதா குறித்து முடிவெடுப்பதில் ஆளுநரின் அதிகார எல்லை என்ன? அதை அவர் மீறினாரா? இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் ஒருபுறம் குற்றம்சாட்டி வந்தாலும், உண்மையில் அரசியலமைப்பின் 200ஆவது விதி என்ன சொல்கிறது? இதில் மூன்று தேர்வுகள் ஆளுநருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.

ஒரு மாநிலத்தின் சட்டப்பேரவையால் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டாலோ சட்டப்பேரவையைக் கொண்ட மாநிலம் என்றாலோ, மாநிலத்தின் சட்டமன்றத்தின் இரு அவைகளாலும் மசோதா நிறைவேற்றப்பட்டால், அது ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததாகவோ அல்லது அதற்கான ஒப்புதலை தடுத்து நிறுத்துவதாகவோ அல்லது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக மசோதா மீதான முடிவை ஒத்திவைத்திருப்பதாகவோ அறிவிக்கலாம். மற்றொரு தேர்வு, அந்த மசோதா பண மசோதாவாக இல்லாவிட்டால், அதில் குறிப்பிட்ட சில அம்சங்களை மறுபரிசீலனை செய்யக் கோரி ஆளுநர் திருப்பி அனுப்பலாம். குறிப்பாக மசோதாவில் திருத்தம் செய்தால் சரியாக இருக்கும் என ஆளுநர் அறிவுறுத்திய விஷயங்களை திருத்தம் செய்ய மாநில சட்டப்பேரவை கூடி மசோதாவில் திருத்தம் செய்தோ மீண்டும் திருத்தமின்றியோ நிறைவேறே்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பலாம். அப்படி அனுப்பப்படும் மசோதாவுக்கு ஆளுநர் மறுப்பு தெரிவிக்கக் கூடாது.

மற்றொரு தேர்வு: ஒருவேளை மசோதா சட்டமாக மாறினால், உயர் நீதிமன்றத்தின் அதிகாரங்களிலிருந்து பதவிக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், அது இருப்பதாகக் கருதி ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தவிர்த்து அதை குடியரசு தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பலாம்.

இந்த மூன்று அம்சங்களில் தனக்கான முதலாவது தேர்வை ஆளுநர் இப்போது பயன்படுத்தியிருக்கிறார்.

ஆளும் திமுக சுமத்தும் குற்றச்சாட்டு

ஆனால், ஆளுநர் இந்த விவகாரத்தில் அரசியலமைப்பை மீறியுள்ளார் என்கிறார் வழக்கறிஞரும் மாநிலங்களவை திமுக உறுப்பினருமான வில்சன்.

GetOutGovernorRavi tag trends against Tamilnadu Governor
BBC
GetOutGovernorRavi tag trends against Tamilnadu Governor

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இந்த விவகாரத்தில் அரசியலமைப்புக்கு எதிராகத்தான் ஆளுநர் நடந்திருக்கிறார். மசோதா குறித்து விவாதிக்க அவருக்கு அதிகாரமே இல்லை. மசோதாவின் அம்சங்கள் குறித்தெல்லாம் ஆளுநர் குறிப்பிட்டிருப்பது தவறு. இது, அரசியலமைப்புக்கு எதிரானது (constitutional impropriety). குடியரசு தலைவருக்கு மட்டுமே இது பொருந்தும்," என்றார்.

"மசோதா எந்த பட்டியலின் கீழ் வருகிறது (மாநில பட்டியல், மத்திய பட்டியல், பொதுப் பட்டியல்), ஏற்கெனவே இது தொடர்பாக உள்ள சட்டத்திற்கும், மசோதாவுக்கும் இடையே என்ன முரண்பாடுகள் இருக்கின்றன என்பதைத்தான் ஆளுநர் பார்க்க வேண்டும். ஆனால், அதைத்தாண்டி, அரசின் ஆய்வறிக்கை குறித்தெல்லாம் ஆளுநர் குறிப்பிட்டுள்ளது தவறு. ஆய்வறிக்கையை அவர் படித்தாரா என்பதும் தெரியவில்லை. மசோதாவை மதிப்பீடு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை," என்கிறார் வில்சன்.

"ஆளுநர் பெயரளவுக்கான நிர்வாகத் தலைவர். மக்களின் பிரச்னைகள் குறித்துத்தான் ஆளுநர் சிந்திக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் ஆட்சியமைக்கின்றனர், மசோதாவை நிறைவேற்றுகின்றனர். அதை ஆதரிக்காமல், மக்களுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதால்தான் அவரை திரும்பப் பெற வேண்டும் என்ற குரல் அதிகரித்திருக்கிறது" என்றார் வில்சன்.

பிபிசி தமிழிடம் பேசிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரணவ், இதே கருத்தை தெரிவித்துள்ளார்.

"இந்த மசோதா சட்ட ரீதியாக தவறானதா என்பது குறித்து நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். தவறானது என நீதிமன்றம் உத்தரவிட்டால், அரசு அதை அமல்படுத்த முடியாது. ஆனால், மாநில அரசின் முடிவு குறித்து கருத்து சொல்வதற்கோ, தீர்ப்பு சொல்வதற்கோ ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை" என்கிறார் பிரணவ்.

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்குக் குறித்து, ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ளது குறித்துப் பேசிய வில்சன், "உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு சட்டம் போன்று படிக்கக் கூடாது. அவை மாறிக்கொண்டே இருக்கும். அந்த குறிப்பிட்ட விஷயத்திற்கான தீர்ப்பாகத்தான் அதை எடுத்துக்கொள்ள வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக எந்த சட்டமும் கொண்டு வரக்கூடாது என்று எந்த உத்தரவும் போடவில்லை" என்றார்.

அரசுக்கு என்ன வாய்ப்புகள் உள்ளன?

பிரணவ் சச்தேவா
BBC
பிரணவ் சச்தேவா

இது குறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரணவ் சச்தேவா கூறுகையில், "மாநில அரசு மீண்டும் இது மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால், இம்முறை ஆளுநர் அதை கட்டாயம் குடியரசு தலைவருக்கு அனுப்பித்தான் ஆக வேண்டும். இரண்டாவது முறையும் அந்த மசோதாவை ஆளுநரால் நிராகரிக்க முடியாது. வழக்கமாக, மாநில அரசின் மசோதாக்களை ஆளுநர்கள் நிலுவையிலேயே வைத்திருப்பார்கள். அது தவறானது. ஆளுநர் மீண்டும் தாமதப்படுத்தினால் நீதிமன்றத்திற்கு செல்லலாம். ஆனால், இம்மாதிரியான வழக்குகளில் நீதிமன்றம் பெரும்பாலும் தலையிடாது," என்கிறார்.

உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே நீட் தேர்வை கட்டாயமாக்கியுள்ள சூழலில், இந்த மசோதாவின் சட்ட அங்கீகாரம் என்ன என்பது குறித்துப் பேசிய பிரணவ் சச்தேவா, "உச்ச நீதிமன்றம் நீட் தேர்வை கட்டாயமாக்கியுள்ளது. மத்திய அரசின் சட்டமும் உள்ளது. எனவே, சட்டபூர்வமாக, தமிழக அரசின் மசோதா எளிதில் இலக்காகக்கூடியதாக உள்ளது" என தெரிவித்தார்.

நீட் விவகாரம் மூலம் மீண்டும் அரசு - ஆளுநருக்கு இடையில் வேறுபாடுகள் எழுந்துள்ளன. இத்தகைய வேறுபாடுகள் எழுவது ஏன் என்பது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், "நெருக்கடி நிலைக்குப் பிறகான காலக்கட்டத்தில், மத்திய அரசு ஒரு அளவை மீறி மாநில அரசின் அதிகாரங்களில் கைவைக்கவில்லை. இப்போது, மாநிலத்தின் அதிகாரங்களில் மத்திய அரசு கைவைக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இதில்தான், ஆளுநர்களுக்கு இக்கட்டான சூழல் ஏற்படுகிறது," என்கிறார்.

நீட் ஆளுநர்
BBC
நீட் ஆளுநர்

"நீட் தேர்வு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் கொண்டு வர நினைத்த சட்டமாக இருந்தாலும், அதிலிருந்து விலக்கு பெற நினைக்கும் மாநிலங்களுக்கு விலக்கு அளித்திருப்பார்கள். ஆனால், இப்போதிருக்கும் அரசு அதைச் செய்வதில்லை. இந்த இக்கட்டான சூழலில், ஆளுநர் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டியுள்ளது. அந்த நிலைப்பாடு, மத்திய அரசுக்கு நெருக்கமான நிலைப்பாடாகத்தான் இருக்க முடியும். இதனால், ஆளுநர்-அரசுக்கிடையில் முரண்பாடுகள் அதிகரித்துள்ளன," என்றார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
GetOutGovernorRavi tag trends against Tamilnadu Governor
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X