தென் தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

டெல்லி: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்கக்கடலில் அண்மையில் உருவான ஓகி புயல் கடலில் இருந்தபடியே ருத்ரதாண்டவம் ஆடியது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்தது.
புயலால் தென் தமிழகத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடானது.

ஓகி புயல் பாதிப்பு
தென் மாவட்டங்களில் உள்ள அணைகள் ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பின. அப்போது கடலுக்கு சென்ற 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. அவர்களுக்கு என்ன ஆனதோ என பதபதப்பில் உள்ள குடும்பத்தினர்.

நாளை கனமழை பெய்யும்
புயலால் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் முக்கிய வாழ்வாதாரமான ரப்பர் மரங்கள் வேறோடு பிடுங்கி எறியப்பட்டன. இந்நிலையில் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

பரவலாக மழை
கன்னியாகுமரி கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழைபெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாகவே தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தேசிய பேரிடர் மேலாண்மை
இதனிடையே தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றும் நாளையும் தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.