இதுதான் நிஜ இந்தியா! வன்முறையால் முஸ்லிம் இல்ல திருமணத்தில் சிக்கல் - முன்னின்று நடத்திய இந்துக்கள்
கொல்கத்தா: வன்முறைக்கு மத்தியிலும் இஸ்லாமிய பெண்ணின் திருமணத்தை அமைதியாக இந்து மக்கள் முன்னின்று நடத்தி வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நபிகள் நாயகம் மீது பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறாக பேசியதை கண்டித்து நாடு முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹவுரா பகுதியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இஸ்லாமிய பெண்ணுக்கு திருமணம்
இந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த இட்டெனெசா முல்லிக் என்ற இஸ்லாமிய பெண் தனது மகளுக்கு ஞாயிறு அன்று திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார். கணவன் இன்றி 3 மகள்களை வளர்த்து வந்த இட்டெனெசாவின் மகள் பகிஜாவுக்கு திருமணம் ஞாயிறு அன்று நடைபெற இருந்தது. வெள்ளிக்கிழமை போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையால் தொடர்ந்து பதற்றம் நிலவியது.

உதவ வந்த இந்துக்கள்
இதன் காரணமாக திருமணத்தை வேறு நாளுக்கு தள்ளி வைக்க முடிவெடுத்தார் இட்டெனெசா முல்லிக். இதுகுறித்த தகவல் அறிந்த அண்டை வீடுகளில் வசித்து வந்த இந்து மக்கள், திருமணத்தை தள்ளி வைக்க வேண்டாம் என இட்டெனெசா முல்லிக்கிடம் தெரிவித்து இருக்கின்றனர். அதன்படியே மணமகனை தொடர்ந்து உறவினர்கள், விருந்தாளிகளை வரவேற்பது, திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் இந்து மக்களே செய்து இருக்கின்றனர்.

திருமணத்தை நடத்திய இந்துக்கள்
இதுகுறித்து இட்டெனெசா முல்லிக் தெரிவிக்கையில், "3 மகள்கள் ஒரு மகனுடன் சிறிய வசித்து வருகிறேன். வன்முறை காரணமாக 144 தடை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. தேசிய நெடுஞ்சாலையும் மறிக்கப்பட்டது. இதனால் திருமணத்தை தள்ளி வைப்பதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. என்ன செய்வதென்றே தெரியாமல் நான் இருந்த சூழலில்தான் திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் தாங்கள் பார்த்துக்கொள்வதாக அண்டை வீடுகளில் வசித்து வந்த இந்து மக்கள் என்னிடம் தெரிவித்தனர்." என்றார் நெகிழ்ச்சியுடன்.

ஒன்றாக வளர்ந்தோம்
தபாஸ் கொடாலி, லகிகண்டா கயல், உத்தம் தொலுய் ஆகியோர் பகிஜா திருமணத்துக்கான அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்து இருக்கிறார்கள். இதுகுறித்து தபாஸ் கொடாலி தெரிவிக்கையில், "நாங்கள் இதே கிராமத்தில் ஒன்றாக வளர்ந்தோம். எல்லா பிரச்சனைகளின்போதும் ஒருவருக்கு ஒருவர் ஒருதுணையாக இருப்போம். பகிஜாவின் தாய் திருமணத்தை நடத்த முடியுமா என்று வருந்தியபோது அவருக்கு உதவ முன்வந்தோம்." என்றார்.

எங்களின் கடமை
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் இந்த 3 பேரும் காவல் நிலையம் சென்று திருமணத்துக்காக சிறப்பு அனுமதியை பெற்று வந்து இருக்கின்றனர். "இட்டெனெசா முல்லிக் 8 ஆண்டுகளுக்கு முன் கணவனை இழந்தார். அவரும் அவரது குழந்தைகளும் எங்களது அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொள்வார்கள். அவருக்கு இந்த நேரத்தில் உதவி செய்வது எங்களின் கடமை." என்கிறார் அண்டை வீட்டில் வசித்த லகிகண்டா கயல்.

அண்டைவீட்டாருக்கு கடமைப்பட்டுள்ளேன்
எனது மகளின் திருமணத்தில் பங்கேற்க 300 பேருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். ஆனால் வன்முறை மற்றும் 144 தடை காரணமாக பாதி பேர் வரவில்லை. சுமார் 150 பேருக்கும் அதிகமானவர்கள் இதில் கலந்துகொண்டனர். அவர்களை எனது அண்டை வீடுகளில் வசித்த இந்துக்கள் அன்போடு வரவேற்று உணவு மற்றும் இதர தேவைகளை செய்துகொடுத்தனர். எனது மகள் தனது கணவர் இல்லம் செல்வதற்காக கார் ஒன்றையும் வாடகைக்கு அவர்கள் எடுத்துத் தந்தனர். அவர்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டு உள்ளேன்." என்கிறார் இட்டெனெசா.

மணமகன் நெகிழ்ச்சி
பகிஜாவை திருமணம் செய்துகொண்ட மணமகன் ஷேக் மொக்கபிர், தன்னை மணமகள் வீட்டில் வரவேற்க இந்துக்கள் குழுமி இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தார். அவருக்கு அவர்கள் உற்சாகமான வரவேற்பை அளித்து இருக்கின்றனர். "முழு திருமண நிகழ்வும் அழகாக நடந்து முடிந்ததற்கு அண்டை வீட்டில் வசித்து வந்த இந்துக்களே காரணம்." என மகிழ்கிறார் மணமகன் ஷேக்.












Click it and Unblock the Notifications