For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருவள்ளுவர் சொன்னதை கேட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது.. மோடி அரசுக்கு ப.சிதம்பரம் நச் பதில்

நோய் என்ன என்பதையும்,, அதன் காரணம் என்ன என்பதையும் இந்த அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை என ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    திருவள்ளுவர் சொன்னதை கேட்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது...வீடியோ

    டெல்லி: இந்தியாவின் பொருளாதார மந்த நிலை மற்றும் மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கையில் ஏற்பட்ட தவறுகளை சுட்டிக் காட்டி, 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழுக்கு கட்டுரையாக எழுதியுள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.

    பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் மந்த நிலைக்கு போய்க்கொண்டு உள்ளது என்று பொருளாதார வல்லுநர்களும், எதிர்க்கட்சியினரும் எச்சரித்தபடி உள்ளனர்.

    அதேநேரம், மத்திய அரசும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும், அந்த விமர்சனங்களில் உண்மையில்லை என்று தொடர்ந்து கூறிவருகிறார்கள்.

    சத்தம் அதிகம்

    சத்தம் அதிகம்

    இந்த நிலையில், ப.சிதம்பரம் எழுதியுள்ள இக்கட்டுரை முக்கியத்துவம் பெறுகிறது. கட்டுரையில், ப.சிதம்பரம் கூறியுள்ளதாவது: நடவடிக்கைகளை விடவும், வார்த்தைகள்தான் அதிக சத்தம் கொண்டவை. எனவேதான், நிதி அமைச்சர் (ஜெட்லி), சத்தமாகவும், தெளிவாகவும் பேசியுள்ளார். அது அதிக தூரம் இல்லாத குஜராத்தை சென்றடையும் என்பதே அவர் நோக்கம்.

    தவறை ஒப்புக்கொண்ட அரசு

    தவறை ஒப்புக்கொண்ட அரசு

    "2,11,000 கோடி மூலதன நிதியை பொதுத்துறை வங்கிகளுக்கு அளிக்க உள்ளோம். பாரத்மாலா என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். மொத்தம் ரூ.5,35,000 கோடி செலவில், 34,800 கிலோமீட்டர் தூரம் சாலை அமைக்க உள்ளோம்" என்று நிதி அமைச்சர் கூறியுள்ளார். "இந்திய பொருளாதாரம் வலுவான அடித்தளம் கொண்டுள்ளது" என்றும் அவர் கூறியுள்ளார். இது செய்த தவறை ஒப்புக்கொள்வதை போல உள்ளது.

    பரிசோதனையில் தப்பு

    பரிசோதனையில் தப்பு

    பொருளாதாரம் நல்ல வலுவான அடித்தளம் கொண்டிருந்தாலோ, 7.5 சதவீதம் என்ற அளவில் வளர்ந்து கொண்டிருந்தாலோ, அதற்கு ஊக்கம் தேவைப்படாது. அரசின் ஊக்கம் என்பதே, நாட்டு பொருளாதாரத்தில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை இருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான். பரிசோதனை செய்வதிலேயே சில குழறுபடிகள் ஏற்பட்டுள்ளன.

    தடம்புரண்டு விட்டது

    தடம்புரண்டு விட்டது

    காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்பது, 2016 ஜனவரி-மார்ச் முதல் 9.1, 7.9, 7.5, 7.0, 6.1 மற்றும் 5.7 சதவீதம் என்ற அளவில்ல இருந்தது. எனவே பொருளாதாரம் 7.5 சதவீத வளர்ச்சி விகிதத்தில் இல்லை. பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அது தடம் புரண்டுவிட்டது. 2016 ஏப்ரல் முதல் பொருளாதார வளர்ச்சி குறைந்து கொண்டே உள்ளது. இதுதான் பரிசோதனையின் முதல் அடி. பொருளாதாரம் வீழ்ச்சியடைய காரணங்களை கண்டுபிடிப்பதில்தான் 2வது அடி விழுந்தது.

    திருவள்ளுவர் சொன்னார்

    திருவள்ளுவர் சொன்னார்

    "நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும், வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்றார் திருவள்ளுவர். நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் என்பது இதன் பொருள். ஆனால் நோய் என்ன என்பதையும்,, அதன் காரணம் என்ன என்பதையும் இந்த அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    வங்கிகளுக்கு ஊக்கம்

    வங்கிகளுக்கு ஊக்கம்

    அரசின் சில நடவடிக்கைகள் பொருளாதார வளர்ச்சியில் சிறு தாக்கம் ஏற்படுத்தும் என நினைக்கிறேன். வங்கிகள் மேம்பாட்டுக்கான நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். வராக்கடன்கள் காரணமாக வங்கிகளின் மூலதனம் குறைந்துவிட்டது. இப்போதுள்ள சூழ்நிலையில், தொழிலை தொடங்கவோ, விரிவுபடுத்தவோ முடியாது என்று தொழில்முனைவோர் எண்ணத் தொடங்கிவிட்டனர். வங்கிகள் சிறு மற்றும் குறு தொழில்களுக்குத்தான் அதிக கடனுதவி செய்ய வேண்டும். தற்போது வெறும் 10 சதவீதம் அளவுக்குதான் இந்த துறைக்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன. வங்கிகளுக்கு மூலதன உதவி செய்யப்பட்டுள்ளதால், சிறு தொழில்களுக்கு அதனால் சில பலன்கள் கிடைக்கலாம்.

    இது என்ன மோசடி

    இது என்ன மோசடி

    அரசின் மற்றொரு நடவடிக்கை சரியாகப்படவில்லை. அரசு பத்திரங்களை வெளியிடுமாம், அதை வங்கிகள் வாங்க வேண்டுமாம், ஈவுத் தொகையாக அரசு அதே வங்கிகளுக்கு நிதி உதவி அளிக்குமாம். இது பீட்டரிடம் கொள்ளையடித்து, பீட்டருக்கே பணத்தை கொடுப்பதாக கூறும் பழமொழியை போன்றது. 34,800 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்கும் திட்டத்தில், ஏற்கனவே 10000 கி.மீ தூர சாலைகள் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் உள்ளவைதான். மற்ற சாலைகள், பொருளாதார காரிடார், இணைப்பு சாலைகள், சாலை மேம்பாடு, எல்லை மற்றும் கடலோர சாலைகள் என்ற வட்டத்தின்கீழ் வருகின்றன. சாலை திட்டங்களை தொடங்கும் முன்பாக நிறைய பணிகளை முடிக்க வேண்டிவரும். சுற்றுச்சூழல் அனுமதி, நிலம் கையகப்படுத்துதல், சுங்க சாவடி அமைத்தல் போன்ற பல பணிகள் உள்ளன. எனவே இன்னும் 18 மாதங்களில் 34,800 கி.மீ தூர சாலைகளை அமைக்கவோ அவற்றை நிறைவு செய்யவோ முடியாது என்றே நினைக்கிறேன்.

    அரசு இதையெல்லாம் செய்திருக்கலாம்

    அரசு இதையெல்லாம் செய்திருக்கலாம்

    அரசு மேலும் பல விஷயங்களை செய்திருக்கலாம். பணமதிப்பிழப்பு போன்ற சாகசங்களில் இனிமேல் ஈடுபடமாட்டோம் என அறிவித்திருக்கலாம். ஜிஎஸ்டியை அவசர கதியில் அறிமுகம் செய்ததால் ஏற்பட்ட குழப்பங்களை தீர்க்க வெளியிலிருந்து நிபுணர் குழுவை அழைத்திருக்கலாம். வரி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகப்படியான அதிகாரங்களை ரத்து செய்வதாக அறிவித்திருக்கலாம். தொழிலதிபர்களை அச்சுறுத்தும் விசாரணை அமைப்புகளுக்கு கடிவாளம் போடுவோம் என கூறியிருக்கலாம். ஆனால் இவற்றில் எல்லாம் அரசுக்கு அக்கறையில்லை. அதற்கு பதிலாக வாக்குறுதி மழையை பொழிவதில் குறியாக உள்ளனர். இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

    நன்றி: ப.சிதம்பரம் & 'தி இந்தியன் எஸ்க்பிரஸ்'

    English summary
    Across the aisle, Ignore Thiruvalluvar at your peril, says P.Chidambaram in a article he wrote in The Indian Express.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X