
ப்பா.. நம்ம நாட்ல இப்டி ஒரு ரோடா.. இப்டி இருந்தா டென்சனே இல்லாம நாம வண்டி ஓட்டலாமே!
ஐஸ்வால்: மிசோரம் தலைநகர் ஐஸ்வால் நகரத்தின் சாலையில் வாகனங்கள் செல்லும் காட்சி ஒன்று நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் வாய் பிளக்க வைத்துள்ளது.
ஒர்க் பிரம் ஹோம் முடிந்து ஏறக்குறைய எல்லோருமே மீண்டும் அலுவலகங்களுக்கு பணிக்குச் செல்ல ஆரம்பித்து விட்டனர். இதனால் மீண்டும் பரபரப்பான சாலைகளாகி விட்டது நம்மூர் சாலைகள். எங்கு பார்த்தாலும் வாகன இரைச்சல், நெருக்கடி, போக்குவரத்து விதிமீறல். 'ச்சே.. எப்போ தான் இந்த டிராபிக் சரியாகுமோ?' தினமும் நீங்கள் அலுவல் நிமித்தமாக பரபரப்பாக ஓடுபவர்களில் ஒருவர் என்றால், நிச்சயம் உங்கள் மனதில் இந்தக் கேள்வி எழாமல் இருக்காது.
வாகன நெருக்கடி ஒருபுறம் என்றால், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் செய்யும் அட்டகாசங்கள் மறுபுறம். இதனாலேயே அடிக்கடி போக்குவரத்து விதிகளை மதித்து, நாய்கள், மாடுகள் போன்ற விலங்குகள் சாலையைக் கடக்கும் வீடியோக்களை நாம் ஆச்சர்யத்துடன் கடந்து போகிறோம்.
குஜராத் தேர்தல்.. தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையாற்றிய பிரதமரின் தாய்.. நெகிழ்ந்த வாக்காளர்கள்
ஆனால், நிஜமாகவே ஒரு நகரத்தில் ஹாரன்களின் சத்தமே இல்லாமல், மக்கள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றி, ஒரு சீராக சாலையில் வாகனங்களில் செல்கிறார்கள் என்றால், நீங்கள் நம்புவீர்களா? 'போங்க சார் காமெடி பண்ணிக்கிட்டு..' என்பதுதானே உங்கள் பதிலாக இருக்கும். ஆனால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

மிசோரம் தலைநகர்
ஆம், அப்படி ஒரு அமைதியாக நகரம் இருக்கிறது. அதுவும் நம் நாட்டிலேயே இருக்கிறது. மிசோரம் மாநிலத்தின் தலைநகர் ஐஸ்வால்தான் அந்த அமைதியான நகரம். அங்குள்ள பரபரப்பான சாலை ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோதான் தற்போது இணையத்தில் ஆச்சர்யத்துடன் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இப்டி ஒரு ரோடா?
அந்த வீடியோவில், சாலையின் ஒரு ஓரத்தில் இருசக்கர வாகனத்தில் மக்கள் வரிசையாக நிதானமாக ஒருவர் பின் ஒருவராக அணிவகுத்து வருகின்றனர். அவர்களுக்கு அருகே சிறிய இடைவெளியில் அதேபோல் கார்கள் வரிசையாகச் செல்கின்றன. யாரும் போக்குவரத்து விதிமுறைகளை மீற வேண்டும் என முயலவில்லை. அமைதியாக வாகனங்கள் கடந்து செல்கின்றன.

சத்தமில்லாத சாலைகள்
இதில் இன்னுமொரு ஆச்சர்யம் என்னவென்றால், இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரின் தலையிலும் ஹெல்மெட் உள்ளது. அதேபோல், சாலையின் மற்றுமொரு ஓரத்தில் கார்கள் அழகாக வரிசையாக பார்க்கிங் செய்யப்பட்டுள்ளன. இதனால் சாலையின் ஓரத்தில் செல்கிறோம் என்ற பரபரப்பின்றி மக்களும் நிதானமாக ஒருபுறம் நடந்து செல்கின்றனர்.

6 மில்லியன்
மிசோரமைச் சேர்ந்த எலிசபெத் என்ற டிராவல் பிளாக்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். கடந்த மாத இறுதியில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை சுமார் ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர். 'எனது மாநிலத்தின் பெருமையைக் கூற வேண்டும் என இந்த வீடியோவை நான் பகிரவில்லை. இந்த வீடியோவைப் பார்த்து மற்றவர்களும் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் என் நோக்கம்' என அந்தப் பதிவில் எலிசபெத் கூறியுள்ளார்.

பாராட்டு
நம் நாட்டில் இப்படி ஒரு சாலையா என இந்த வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர். இப்படி ஒரு அமைதியான சாலையாக இருந்தால், நிச்சயம் பயணங்கள் அனைத்தும் இனிமையாகத்தான் இருக்கும் என கமெண்ட்களை வெளியிட்டுள்ளனர். கூடவே, சாலை விதிகளை சரியாகப் பயன்படுத்தும் மிசோரம் மக்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். ஒரு சில விநாடிகளே ஓடும் இந்த வீடியோவிற்கு இதுவரை சுமார் 3 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளன.