For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தி.மு.க. கூட்டணியை நெருங்குகிறாரா கமல்ஹாசன்?

By BBC News தமிழ்
|

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றிருப்பது தமிழ்நாட்டில் சில அரசியல் கூட்டணிகளை மாற்றியமைக்கக்கூடும். 2024ஆம் ஆண்டில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் கமல் இடம்பெறுவாரா?

மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனரும் தலைவருமான கமல்ஹாசன் தில்லியில் ராகுல் காந்தி மேற்கொண்டுவரும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்றார். தில்லி செங்கோட்டையில் நடந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பேசினார். அவரது பேச்சு தேசிய அளவில் கவனிக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, தமிழ்நாட்டில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இடம்பெறக்கூடும் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன.

நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யத்தை மதுரையில் நடந்த ஒரு விழாவில் துவக்கினார். 2019ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 37 இடங்களில் போட்டியிட்ட இந்தக் கட்சி, சுமார் 3.78 சதவீத வாக்குகளைப் பெற்றது. தொடர்ந்து 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 154 இடங்களில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம், எந்த இடத்திலும் வெற்றிபெறவில்லை. ஒட்டுமொத்தமாக 2.62 சதவீத வாக்குகளைப் பெற்றது.

இதற்குப் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இக்கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்கள் ஆங்காங்கே வெற்றிபெற்றாலும் குறிப்பிடத்தக்க வெற்றி எதையும் அக்கட்சியால் பெற முடியவில்லை. சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகே, அக்கட்சியிலிருந்து பலரும் வெளியேற ஆரம்பித்தனர். அக்கட்சியின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன், அங்கிருந்து விலகி தி.மு.கவில் இணைந்தார்.

இதற்குப் பிறகு சிறிது காலத்திற்கு, கட்சியில் சோர்வு ஏற்பட்டிருந்ததும், விக்ரம் படத்திற்குக் கிடைத்த பிரம்மாண்டமான வெற்றியும் அவர் அரசியலில் தொடர்வாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தன. ஆனால், சில மாதங்களுக்கு முன்பிருந்து, மீண்டும் கட்சியினரைச் சந்தித்து கூட்டங்களை நடத்த ஆரம்பித்தார் கமல். இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று பாரத் ஜோடோ யாத்திரையில் அவரும் கட்சியினர் சுமார் 300 பேரும் அந்த யாத்திரையில் பங்கேற்றதும் நாடாளுமன்றத் தேர்தல் வரும்வரை, மாதம் தோறும் நிகழ்ச்சிகளையோ கூட்டங்களையோ நடத்த அக்கட்சி முடிவுசெய்திருப்பதும் தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Is Kamalhasan getting closer to the DMK alliance

கட்சி ஆரம்பித்தபோது, இரு திராவிடக் கட்சிகளிடமிருந்தும் விலகியே தனது அரசியல் பாதையை வகுத்துக்கொண்டார் கமல். தேர்தல் சமயத்தில் தி.மு.க. மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார். ஆனால், தற்போது மக்கள் நீதி மய்யம் தொடர்ச்சியாக காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியுடன் நெருங்கி வருவதைப்போலத் தோன்றுகிறது. குறிப்பாக, தி.மு.கவுடன் நெருங்கி வருவதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது.

ஆறு பேர் விடுதலையில் ஆளுநரை விமர்சனம் செய்தது, உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளுக்கும் அவர் அமைச்சராகப் பதவியேற்றதற்கும் வாழ்த்துத் தெரிவித்தது என ஒரு சுமுகமான உறவையே பேணிவருகிறார் கமல்.

இந்த நிலையில்தான் கமல் தி.மு.க. கூட்டணியில் இணைவார் என்ற பேச்சுகள் அடிபட ஆரம்பித்துள்ளன. அந்தக் கூட்டணியில் கமல் இணையும்பட்சத்தில், சென்னையில் ஒரு தொகுதியோ, மாநிலங்களவையில் ஒரு தொகுதியோ அக்கட்சிக்கு ஒதுக்கப்படலாம். மாநிலம் தழுவிய அளவில் அவர் அந்தக் கூட்டணியின் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்படலாம்.

கமல்ஹாசனைப் பொறுத்தவரை, இது நல்ல அம்சம்தான் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன்.

"கமல் தமிழ்நாட்டு அரசியலை இப்போதுதான் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறார். ரஜினியைப் பொறுத்தவரை, மூன்று முறை சர்வே செய்து பார்த்தார். அதில் வாக்கு சதவீதம் 8ஐத் தாண்டவில்லை. மூன்றாவது முறை மட்டும் சற்று அதிகம் வந்தது. அதனால், அரசியலில் தேவையில்லாமல் சிக்கவேண்டாம் என முடிவெடுத்தார். ஆனால், கமல் அப்படியில்லை. அரசியலுக்கு வந்து, தோல்வியடைந்த பிறகும் தொடர்ந்து நீடித்து வருகிறார். இந்தத் தருணத்தில், அந்தக் கூட்டணியில் இணைவது என்பது அவருக்கு ஒரு வாய்ப்பு. இயல்பாகவே பா.ஜ.க. எதிர்ப்பு மனநிலையில் உள்ள அவர், இந்தக் கூட்டணியில் இடம் கிடைத்தால் நிச்சயம் எம்.பியாகிவிடுவார். அந்தக் கூட்டணியைப் பொறுத்தவரை, தில்லியில் பல மொழிகளில் பேசக்கூடிய ஒரு எம்பி கிடைப்பார்கள். ஆகவே இரு தரப்புக்குமே அது லாபமாக இருக்கும்" என்கிறார் குபேந்திரன்.

ஆனால், மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்தவர்கள் இந்தப் பேச்சுகளை புறம்தள்ளுகிறார்கள். "தேர்தலுக்கு இன்னும் வெகு நாட்கள் இருக்கின்றன. தற்போது நாட்டில் நிலவும் அடக்கு முறைக்கு எதிராக, அந்த யாத்திரையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. கமலும் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கில்தான் அவர் கலந்துகொண்டார். இந்த விவகாரம் என்பது முற்றிலும் கூட்டணிக்கு அப்பாற்பட்டது" என்கிறார் அக்கட்சியின் நிறுவனப் பொதுச் செயலாளரான அருணாச்சலம்.

காங்கிரஸ் கட்சியும் கமல் யாத்திரையில் பங்கேற்றதை அப்படிப் பார்க்க விரும்பவில்லை என்கிறது. "பாரத் ஜோடோவைப் பொறுத்தவரை கூட்டணிக்கான அதனை கூட்டணிக்கான முயற்சியாக பார்க்க முடியாது. இந்தப் பயணத்திற்கு எல்லாவற்றையும் தாண்டிய ஒரு நோக்கம் இருக்கிறது. ஒரு குறுகிய அரசியல் ஆதாயத்திற்குள் இந்தப் பயணத்தின் நோக்கத்தைச் சுருக்க முடியாது. யாத்திரைக்கு நிறையப் பேரை அழைத்திருக்கிறோம். காங்கிரசுடன் கடந்த காலத்தில் உடன்படாதவர்கள்கூட இந்த யாத்திரையின் முக்கிய அங்கமாக இருக்கிறார்கள். பன்முகத் தன்மையுடன் விளங்கிய தேசம், மிக மோசமான நிலைக்குச் சென்றுகொண்டிருப்பதைப் பார்க்கிறோம். ஆகவே, அன்பையும் சமத்துவத்தையும் ஏற்படுத்த ஒப்புக்கொள்ளும் அனைவரையும் இந்தப் பயணத்திற்காக அழைத்திருக்கிறோம். அப்படித்தான் கமல் இதில் கலந்துகொண்டார். இந்த யாத்திரை நெடுக மக்களின் குரலைத்தான் கேட்கிறோம். அரசியல் கூட்டல் கழித்தலுக்காக இது நடக்கிறதென்றால், மற்றவர்கள் ஏன் வருகிறார்கள்? ஆகவே இது தேர்தல் கூட்டணியை முன்வைத்து நடக்கும் யாத்திரையில்லை. பங்கேற்பவர்களும் அப்படிப் பங்கேற்கவில்லை" என்கிறார் கரூர் தொகுதியின் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினரும் இந்திய ஒற்றுமை பயணத்தில் தொடர்ந்து பங்கேற்பவருமான ஜோதிமணி.

ஆனால், கமல் இந்தக் கூட்டணிக்கு வருவது இரு தரப்புக்குமே நல்லது என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான து. ரவிக்குமார். "இது இரு தரப்புக்கும் நல்லதாக இருக்கும். தமிழ்நாட்டில் பா.ஜ.கவை எதிர்ப்பவர்கள் எல்லோரும் ஒன்றாக இணைவதுதான் சிறந்தது. அந்த வகையில் கமல் இந்தக் கூட்டணியில் இணைவது நல்ல முடிவாக இருக்கும். அவருடைய கட்சிக்கும் இது ஒரு சிறந்த முடிவாக இருக்கும்" என்கிறார் ரவிக்குமார்.

தற்போதைய யூகங்கள் உண்மையாகும் நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? "நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும்போது கமல் 70 வயதை எட்டியிருப்பார். அவருடைய எம்.பி. பதவிக் காலத்திற்குப் பிறகு கட்சி என்னவாக இருக்கும் என்பதை, இப்போதே சொல்வது கடினம்" என்கிறார் குபேந்திரன். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி எடுக்கும் நிலைப்பாடுகளும் அக்கட்சி வெல்லும் இடங்களும் ஓரளவுக்கு கட்சியின் எதிர்காலம் குறித்து சில குறிப்புகளைத் தரக்கூடும்.

கடந்த பொதுத் தேர்தலின்போது தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக ஆகியவை தனித்தனியாகப் போட்டியிட்டன. ஆனால், இந்த முறை கூட்டணிக் கணக்குகளில் பெரும் மாற்றம் ஏற்படலாம். இந்திய ஒற்றுமைப் பயணம் குறித்தும் அதில் ராகுல் காந்தியின் பேச்சு குறித்தும் சமீபத்தில்கூட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டு பேசிய நிலையில், தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் இப்போதைக்கு சிக்கல் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. தொடர்ந்து நீடிக்குமா என்பதைப் பார்க்க வேண்டும். அ.ம.மு.க. கடந்த முறையைப் போலவே தனித்துப் போட்டியிடப் போகிறதா என்பது குறித்தும் தெளிவில்லை. நாம் தமிழர் கட்சி முன்பைப் போலவே தனித்துப் போட்டியிடலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Is Kamalhasan getting closer to the DMK alliance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X