For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காடுகளை அழிக்க இப்படியொரு சட்டத் திருத்தமா? - இந்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்?

By BBC News தமிழ்
|
காடு
Getty Images
காடு

இந்திய அரசின் வனப் பாதுகாப்புச் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமன்றி, அரசியல் கட்சிகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. காடு என்பது மரங்கள் மட்டுமல்ல. அனைத்து உயிரினங்களையும் சேர்த்துத்தான். காடுகளை அழிப்பதற்காகவே இப்படியொரு சட்டத் திருத்தத்தை பா.ஜ.க அரசு கொண்டு வருகிறது' என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள்.

சிறிய அளவிலான திருத்தங்களே செய்யப்பட்டுள்ளன என்கிறார் பாஜக பிரமுகர் ஒருவர்.

சுற்றுச்சூழலில் அக்கறை கொண்டவர்கள் இந்த சட்டம் பற்றி வெளியிடும் கவலைகள் என்ன? பாஜக தரப்பில் சொல்லப்படும் விளக்கம் என்ன?

இந்தியாவில் கடந்த 1980ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வனப் பாதுகாப்புச் சட்டத்தை திருத்துவதற்கான பணிகளில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது. இதற்கான முன்மொழிவுகள் அடங்கிய ஆவணத்தை கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி அரசு வெளியிட்டது.

அரசின் இந்த முடிவு தொடர்பாக 15 நாள்களுக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் எனக் கூறி அதற்காக [email protected] என்ற இமெயில் முகவரியையும் கொடுத்துள்ளனர்.

வனப் பாதுகாப்புச் சட்டம்; திருத்தம் ஏன்?

இதையடுத்து, இந்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து லட்சக்கணக்கான இமெயில்களை அனுப்பும் பணியில் பூவுலகின் நண்பர்கள்' என்ற சுற்றுச்சூழல் அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பாக, அந்த அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காடு என்கிற வரையறைக்குள் வருகின்ற பகுதிகள் அனைத்திலும் காடு சாராத திட்டங்கள் அதாவது நெடுஞ்சாலைகள் அமைப்பது, சுரங்கங்கள் அமைப்பது, அணைகள் கட்டுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது தேவைக்கு அதிகமாகவோ அல்லது தேவையில்லாமலோ காடு அழிக்கப்படுவதை தடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் வனப் பாதுகாப்புச் சட்டம். இச்சட்டத்தில் இந்திய அரசு சில திருத்தங்களை மேற்கொள்ள முயன்று வருகிறது.

சட்டத் திருத்தங்கள் அடங்கிய ஒரு மசோதாவை தயாரிப்பதற்கு முன்னர், இச்சட்டத்தில் மேற்கொள்ள நினைக்கும் 14 திருத்தங்கள் மற்றும் சட்ட விலக்குகள் குறித்த முழுமையல்லாத ஒரு ஆவணத்தை தற்போது வெளியிட்டு அதன்மீது கருத்துகளை கோரியுள்ளது. காடு மற்றும் காட்டு வளங்களை பாதிக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் இந்தத் திருத்த ஆவணத்தில் இடம் பெற்றிருந்தாலும்கூட அனைத்து தரப்பு மக்களும் சட்டம் இயற்றுதலில் பங்கெடுக்கும் அடிப்படை ஜனநாயக உரிமைகூட இந்த கருத்துக் கேட்பு அறிவிப்பில் இல்லை என்பதே இதை எதிர்ப்பதற்கான முதல் காரணமாக அமைந்துள்ளது' எனத் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த அறிவிப்பானது பொது விடுமுறை நாளான அக்டோபர் 2 சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான நடவடிக்கையாகும். இந்தியா முழுவதுமுள்ள காடு மற்றும் காடு சார்ந்து வாழும் மக்களிடையே பெரும் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஒரு சட்டத் திருத்தம் குறித்த ஆவணத்தின் மீது கருத்து தெரிவிக்க 2 மாதங்களாவது கால அவகாசம் வழங்க வேண்டும். எனவே இந்த ஆவணத்தை தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் மொழி பெயர்த்து கருத்து தெரிவிக்க போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளது.

அபாயங்கள் என்னென்ன?

இந்தச் சட்டத் திருத்தத்தில் சில முக்கியமான அம்சங்கள் உள்ளன. எந்தத் திட்டத்தையும் தேசிய முக்கியத்துவம்' அல்லது தேசப் பாதுகாப்பு தொடர்பானது' என அறிவித்துவிட்டால் அதற்கு வனத்துறையின் எந்த அனுமதியும் தேவையில்லை. அது மிகவும் அபாயகரமானது. காரணம், எட்டு வழிச்சாலை திட்டத்தை தேச நலன் சார்ந்தது' என அவர்கள் சொல்லலாம். நியூட்ரினோ திட்டம், அதானி துறைமுகம் போன்றவற்றையும் அவர்கள் கூறலாம். அடுத்ததாக, காடுகளுக்குள் பத்து கிலோமீட்டருக்குள் சாலைகள் அமைக்க வேண்டும் என்றால், அதற்கு வனத்துறையின் அனுமதியை பெற வேண்டும். அதனையும் புதிய திருத்தத்தின் மூலம் நிராகரிக்கின்றனர்" என்கிறார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன்.

பொறியாளர் சுந்தர்ராஜன்
SUNDAR RAJAN facebook
பொறியாளர் சுந்தர்ராஜன்

தொடர்ந்து பேசியவர், வனம் சம்பந்தப்பட்ட பகுதிகளை தனியார்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதி தேவையானதாக உள்ளது. அதனையும் இதன்மூலம் நீக்குகின்றனர். காட்டுக்குக்கீழ் உள்ள பெட்ரோல், எரிவாயு, நிலக்கரி போன்றவற்றை காட்டுக்கு வெளியே இருந்து துளை போட்டு எடுத்துக் கொள்ளலாம் என முன்மொழிவில் கூறப்பட்டுள்ளது.

காட்டைப் பற்றிய புரிதலே இல்லாமல் இந்தச் சட்டத்தைக் கொண்டு வருகின்றனர். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. கொரோனா போன்ற பேரிடர் வராமல் தடுப்பதற்கு காடுகளின் பரப்பளவை உறுதி செய்வது, வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்றவற்றைச் செய்யாமல் நேரெதிர் திசையில் அரசு பயணிக்கிறது" என்கிறார்.

சட்டத் திருத்தத்தில் மேற்கொள்ளப்படும் சிறிய திருத்தங்களால் எந்தவித பாதிப்பும் இல்லை என பா.ஜ.க கூறுகிறதே?" என்றோம். நான் கூறிய விஷயங்களில் எது காடுகளுக்கு எதிரானதாக இல்லை. காட்டுக்குக்கீழ் எண்ணெய் இருக்கிறது என்றால், காட்டுக்கு வெளியே துளையிட்டு எண்ணெய் எடுப்பதால் அந்தக் காடு என்னவாகும்? காடுகள் என்பது மரங்கள் மட்டுமல்ல. அனைத்து உயிரினங்களையும் சேர்த்துத்தான். முழுக்க முழுக்க காடுகளை அழிப்பதற்காகவே இப்படியொரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக, இந்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும்விதமாக, ஒரு லட்சம் இமெயில்களை அனுப்ப உள்ளோம். அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் விவாதித்து வருகிறோம்" என்கிறார்.

சீமானின் கேள்வி

காடுகளுக்குள் தொடர்வண்டி, சாலைகள், தொலைத்தொடர்பு உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்கனவே ஒப்புவிக்கப்பட்ட இடங்களாக இருப்பினும்,விரிவாக்கம் செய்யும்போது வனத்துறை அனுமதி பெறுவது கட்டாயமென்று இதுவரை நடைமுறையில் இருந்த விதியை மாற்றி, அனுமதி பெறத் தேவையில்லை என்று திருத்தியிருப்பதும், காடுகளில் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் எவ்வித கட்டுமான பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்ற விதியை தளர்த்திக் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதியளித்ததோடு, வன எல்லை என்பதில் இருந்து அவற்றை விடுவிக்கலாம் என்பதும் காடுகளின் பரப்பளவைக் குறைக்க உதவுமா.. அதிகரிக்க உதவுமா?" எனக் கேள்வியெழுப்புகிறார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

தொடர்ந்து பேசும் சீமான், காடுகளை ஒட்டியுள்ள பகுதியிலிருந்து சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தாது பூமிக்கடியில் பக்கவாட்டில் போடப்படும் ஆழ்துளை குழாய்கள் மூலம் வனத்தின் நடுவே இருக்கும் கனிம வளங்களை எடுப்பதற்கு ஒப்புதல் அளித்திருப்பதும், காடுகளில் ஆராய்ச்சி செய்வதற்காகவும், தகவல்களைச் சேகரிப்பதற்காகவும், அறிவியல் ஆய்வு மையங்களை அமைக்க அனுமதி அளித்திருப்பதும் காடுகளின் உயிரோட்டத்தைக் கெடுத்து, அங்குள்ள பல்லுயிர் பெருக்கத்தை முற்றாக அழிப்பதோடு உணவுச் சங்கிலியையும் பெருமளவில் பாதிக்கும்.

அதுமட்டுமின்றி, நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் அடர்ந்த காடுகளில் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு வனத்துறை அனுமதியைப் பெற வேண்டாம் என்ற சட்டத்திருத்தமானது, சுற்றுச்சூழலைப் பாதிக்கும் எந்த ஒரு சிக்கலான திட்டத்தையும் நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் எளிதாக வனத்துறை அனுமதி பெறாமலே முறைகேடாகச் செயல்படுத்தவும் வழியேற்படும்" என்கிறார்.

'அவசரநிலை பிரகடனத்தில் நல்ல காரியம்'

மத்திய அரசின் வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பிபிசி தமிழிடம் சில தகவல்களை விவரித்தார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன். இவர் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையில் இணைச் செயலராகப் பணியாற்றியவர். ஆங்கிலேயர் காலத்தில் இருந்து வனங்களை பாதுகாப்பதற்கான சட்டமாகவும் வனங்களின் சொந்தக்காரர்களான பழங்குடிகளைப் பாதுகாப்பதற்கான சட்டமாகவும் வனப் பாதுகாப்புச் சட்டம் இருந்ததில்லை. இதற்கு மிகச் சிறந்த உதாரணம், வனங்களைப் பற்றிய சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என ஆங்கில அரசு முடிவெடுத்தபோது, முதன்மை வனப் பாதுகாவலராக ஒரு போலீஸ் அதிகாரியைத்தான் நியமித்தனர். காரணம், போலீஸை பார்த்து பழங்குடியினர் அச்சப்படுவார்கள் என்பதுதான்" என்கிறார்.

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன்
BBC
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன்

தொடர்ந்து பேசுகையில், இந்தியாவின் தேசிய நீரோட்டத்துக்காக பல காரியங்களைச் செய்ய வேண்டும் எனக் கூறிக் கொண்டே விளிம்பு நிலை மனிதர்களை அழிப்பதற்கான செயல்களைத்தான் அரசுகள் செய்து வந்துள்ளன. இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் என்பது ஒரு தவறான முன்னுதாரணம். ஆனால், அதில் வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், வனப் பாதுகாப்பு தொடர்பான சட்டம் இயற்றும் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் இருந்ததை மாற்றி பொதுப் பட்டியலுக்கு இந்திரா காந்தி கொண்டு வந்தார். அதன்மூலம் வனங்கள் ஓரளவுக்குப் பாதுகாக்கப்பட்டன. இதன்மூலம் காப்புக் காடுகளில் யாராலும் கைவைக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன் ஒருபகுதியை வேறு காரணங்களாக பயன்படுத்த வேண்டும் என்றால் மத்திய அரசின் அமைச்சரவை அனுமதியளிக்க வேண்டும்" என்கிறார்.

மத்திய அரசின் அமைச்சரவை ஒப்புதல் மட்டுமல்லாமல், பழங்குடி மக்களின் கிராம சபைகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. தற்போது அரசு கொண்டு வரவுள்ள சட்டத் திருத்தம், முந்தைய சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும். அந்தக் காலகட்டத்தில் மாநில அரசுகளுக்கு பொறுப்புணர்வு இல்லை என்பதால் பொதுப் பட்டியலுக்கு வனத்துறை மாற்றப்பட்டது. ஆனால், இன்றைக்கு மாநில அரசுகளுக்கு இருக்கின்ற பொறுப்புணர்வு, இந்திய அரசுக்கு இல்லை. இதற்கு எத்தனையோ உதாரணங்களைக் கூற முடியும்.

பணக்காரர்கள் மிகச் சிலர் மட்டுமே மேலும் மேலும் பணக்காரர்களாக மாறி வருகின்றனர். அவர்களுக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மூலம், விளிம்புநிலையில் உள்ள மனிதர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மாநில அரசுகள் தவறு செய்தால் மைய அரசு அதனை சரிசெய்யும். அவர்களே தவறு செய்யும்போது என்ன செய்வது? புதிய சட்டத் திருத்தம் பழங்குடிகளின் வாழ்க்கையை மேலும் துயரம் நிறைந்ததாக மாற்றிவிடும்" என்கிறார் பாலச்சந்திரன்.

பா.ஜ.க சொல்வது என்ன?

வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தம் தொடர்பான அச்சங்கள் பற்றி என தமிழ்நாடு பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலத் தலைவர் சி.டி.நிர்மல்குமாரிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். புதிய சட்டத் திருத்தத்தில் சிறிய அளவிலான மாற்றங்களைத்தான் மத்திய அரசு செய்துள்ளது. அதாவது, ரயில்வே பாதுகாப்பு தொடர்பானவைகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ரயில்வே பாதுகாப்பு, தேசத்தின் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக தளர்வுகளை அளித்துள்ளனர்.

வனம் இல்லாத நிலங்களைப் பயன்படுத்துவதற்கு மாநில அரசுகள், மத்திய அரசிடம்தான் அனுமதி கேட்டு நின்றன. ஒரு சில பகுதிகளுக்கு சாலை அமைப்பதில்கூட பத்து வருடங்களுக்கு மேல் காத்திருக்கக்கூடிய நிலை எல்லாம் உள்ளது. வண்டலூர் அருகில் உள்ள மாம்பாக்கம் பகுதிகள் எல்லாம் சாலை அனுமதிக்காக பல வருடங்களாக காத்திருக்கின்றன. இதுபோன்றவற்றில் மாநில அரசுகளே தீர்மானித்துக் கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காடுகளைவிட்டு வெளியே உள்ள பகுதிகளுக்கு மட்டுமே ஆழ்துளையிடுவதற்கான அனுமதி கொடுக்கப்பட உள்ளது" என்கிறார்.

நிர்மல் குமார்
BBC
நிர்மல் குமார்

தொடர்ந்து பேசுகையில், 1922 ஆம் ஆண்டு இங்கிருந்த மரங்களை எடுத்துச் செல்வதற்காக ஆங்கிலேயர்கள் போட்ட சட்டம் அது. தற்போது அதில் சிறிய மாற்றங்களை செய்ய உள்ளனர். நமது நாட்டில் 22 சதவிகித காடுகள் உள்ளன. அதை 2030 ஆம் ஆண்டுக்குள் 33 முதல் 35 சதவிகிதமாக கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். காடுகளை அழித்து யாரும் முன்னேற முடியாது என்பதில் தெளிவான நிலைப்பாட்டில் இருக்கிறோம். காடுகளின் பரப்பளவையும் அதிகரிக்க வேண்டும், சில சிக்கல்களையும் களைய வேண்டும் என்ற நோக்கில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது" என்கிறார்.

'மாநில அரசுகளுக்கே கூடுதல் உரிமை'

2008 ஆம் ஆண்டு பசுமை வேட்டை' என்ற பெயரில் நியாம்கிரி மலை, ஜார்க்கண்ட் போன்ற பகுதிகளில் பழங்குடி மக்களை அப்புறப்படுத்தினார்கள். ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ஆதரவாக அன்றைக்கு அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் செயல்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதற்காக அமைக்கப்பட்ட முகாம்களில் நான்கைந்து வருடங்களாக பழங்குடிகள் அவதிப்பட்டனர். அதைப் போன்ற எந்த விஷயத்தையும் அரசு செய்யவில்லை. புதிய சட்டத் திருத்தத்தின் மூலம் மாநில அரசுகளுக்குக் கூடுதல் உரிமையை கொடுக்க உள்ளனர். மத்திய அரசிடம் இவர்கள் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், காடுகளுக்கு வெளியே பிரச்னையில்லாத ஆழ்துளையிடும் தொழில்நுட்பங்களுக்கு அனுமதி அளிக்க உள்ளனர்" என்கிறார், நிர்மல் குமார்.

கார்ப்பரேட்டுகளின் நலனுக்காகத்தான் இப்படியொரு திருத்தம் கொண்டு வருவதாகக் கூறுகிறார்களே?" என்றோம். இந்தத் திருத்தத்தின் மூலம் எந்த கார்ப்பரேட்டுகளுக்கும் அனுமதி கொடுக்கப் போவதில்லை. மாநில அரசையும் தாண்டித்தான் செயல்பாட்டுக்குள் வரும். ஊட்டி, கொடைக்கானலில் ஏராளமான விடுதிகள் உள்ளன. எத்தனை பூட்டுகள் போட்டாலும் இவை முளைத்துக் கொண்டே உள்ளன.

இதில் 250 சதுர மீட்டரில் கட்டடம் கட்டுவதற்கு ஒருமுறை மட்டும் அனுமதி கொடுக்கின்றனர். அதன்பிறகு அனுமதி கிடையாது. பூர்வகுடிகளாக இருப்பவர்கள் வீடு கட்டுவதற்கும் இதே அனுமதிதான். இது பல வருடங்களாக உள்ள கோரிக்கைதான். 1922 ஆம் ஆண்டு போட்ட சட்டத்தை 1980 ஆம் ஆண்டு திருத்தம் செய்தனர். இப்போதுதான் தேவைகளுக்கு ஏற்ப மாறுதல்களை செய்கின்றனர். சிறிய திருத்தங்களை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்" என்கிறார்.

திருத்தத்துக்கான முன்மொழிவு ஆங்கிலத்தில் உள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதே?" என்றோம். சட்ட நிபுணர்களால் இந்தத் திருத்தத்தைப் படித்துப் பார்க்க முடியும். இதனை அனைத்து மொழிகளிலும் மொழியாக்கம் செய்து பழங்குடி மக்களிடம் கொண்டு போய் சேர்க்கப் போகிறார்களா? ஆர்வம் உள்ளவர்கள் இதனை அவர்களிடம் கொண்டு சென்று விளக்கலாம். புதிய திருத்தத்தில் சிறிய மாறுதல்களோடு மாநில அரசுகளுக்குக் கூடுதல் உரிமையையும் அளித்துள்ளனர். இந்திய அரசு கொண்டு வரும் அனைத்தையும் எதிர்க்க வேண்டும் என்ற மனநிலையில் சிலர் செயல்படுகிறார்கள்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
The Ministry of Environment, Forests and Climate Change is in the process of amending the Forest Conservation Act introduced in India in 1980. A document containing proposals for this has been published.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X