ஜார்க்கண்ட் தேர்தல்: பாஜக, ஜேஎம்எம் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி! கட்சிகளிடையே களேபரம்!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் பாஜக மற்றும் காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் கட்சிகளிடையே கடும் இழுபறி ஏற்பட்டுள்ளதால் குழப்பம் தொடருகிறது. இரு கூட்டணிகளிலும் கட்சிகள் அதிகமான தொகுதிகளில் போட்டியிட முட்டி மோதுவதால் இந்த குழப்பம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 81 தொகுதிகளுக்கும் நவம்பர் 13, நவம்பர் 20 என இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கு கால அவகாசம் தராமல் அவசரமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்கிறது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா. நவம்பர் 25-ந் தேதிக்கு பின்னர்தான் தேர்தல் நடத்த வேண்டும் என தாங்கள் கோரியதை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளது ஜேஎம்எம்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணியில் ஆர்ஜேடியும் இணைந்துள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸுடனான கூட்டணியில் 43 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த முறை கூடுதல் இடங்கள் தங்களுக்கு வேண்டும் என அடம் பிடிக்கிறது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா. 2019-ல் 31 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் தற்போது 33 இடங்களைக் கேட்கிறது. அதேபோல லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடியும் கடந்த தேர்தலில் 7 இடங்களில் போட்டியிட்ட நிலையில் தற்போது 10 தொகுதிகளைக் கேட்கிறது. இதனால் ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இந்த முறை ஜேடியூ, எல்ஜேபி, ஹிந்துஸ்தான் ஆவாமி மோர்ச்சா மற்றும் ஏஜேஎஸ்யூ-பி ஆகிய கட்சிகள் தங்களுக்கும் கவுரமான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கோருகின்றன. ஆனால் பாஜகவோ 55 முதல் 56 தொகுதிகளில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது. இதனால் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிருப்தியில் இருக்கின்றன.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்க இருப்பதால் இரு கூட்டணிகளுமே அடுத்த சில நாட்களில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் மும்முரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.












Click it and Unblock the Notifications