For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யு.யு.லலித்: 74 நாட்களுக்கு இவர்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி - யார் இவர்?

By BBC News தமிழ்
|
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
BBC
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி யு.யு.லலித், சனிக்கிழமை காலையில் முறைப்படி தமது பதவிப்பிரமாணத்தை எடுத்துக் கொள்ளவிருக்கிறார். அவருக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மூ தமது மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இவர் 74 நாட்கள் மட்டுமே இருப்பார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி. ரமணா வெள்ளிக்கிழமையுடன் ஓய்வு பெற்றார். இதையொட்டி உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் அவருக்கு வெள்ளிக்கிழமை மாலையில் பிரியாவிடை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பேசிய நீதிபதி யு.யு. லலித்,"சட்டத்தை தெளிவானதாக்குவதே உச்ச நீதிமன்றத்தின் தலையாய பணி. அதை இயன்ற வழியில் சாத்தியமாக்க வேண்டுமானால், அதற்கு பெரிய அமர்வுகள் எப்போதும் இயங்கக் கூடியதாக இருக்க வேண்டும். அதன் மூலம் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு பெற முடியும்," என்று கூறினார்.

"எனவே, எப்போதும் ஓர் அரசியலமைப்பு அமர்வு ஆண்டு முழுவதும் செயல்படுவதற்கு நாம் கடினமாக முயற்சி செய்வோம்," என்று அவர் தெரிவித்தார்.

வழக்குகளின் பட்டியலை முடிந்தவரை எளிமையாக்குவதாகவும் அவசரமான விஷயங்களைக் குறிப்பிடுவதற்கு ஒரு துல்லிய நிர்வாக முறையை நிறுவ முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

3 விஷயங்களுக்கு முன்னுரிமை

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
BBC
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

தமது 74 நாட்கள் பதவிக்காலத்தில் மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தப்போவதாக யு.யு. லலித் தெரிவித்தார்.

முதலாவதாக வழக்குகளை பட்டியலிடுதல். அந்த பட்டியலை முடிந்தவரை எளிமையாகவும், வெளிப்படையாகவும் செய்வோம் என்று உறுதியளிக்கிறேன்.

இரண்டாவதாக, அவசர விஷயங்களைக் குறிப்பிடும் நடவடிக்கை. இதை நாங்கள் பரிசீலிப்போம். விரைவில் இது தொடர்பாக தெளிவான நிலையை விரைவில் பெறுவீர்கள். அந்தந்த நீதிமன்றங்களுக்கு முன்பாக எந்த அவசர விஷயங்களையும் சுதந்திரமாக குறிப்பிடக்கூடிய முறையை வழங்குவோம்.

மூன்றாவதாக, அரசியலமைப்பு அமர்வு மற்றும் மூன்று நீதிபதிகள் அமர்வு தொடர்பான வழக்குகள். ஏனெனில் உச்ச நீதிமன்றத்தின் தலையாய வேலை என்பது, சட்டத்தை தெளிவாக ஆக்குவதுதான் என்று நான் நம்புகிறேன். இதனால் மக்கள் சட்டத்தின் தனித்துவமான நிலைகளைப் பற்றி அறிந்து கொள்வார்கள். ஆம், ஆண்டு முழுவதும் ஒரே அரசியலமைப்பு பெஞ்ச் செயல்பட நாங்கள் பாடுபடுவோம்" என்று நீதிபதி லலித் கூறினார்.

தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற என்.வி. ரமணாவின் சாதனைகளைப் பற்றி விவாதித்த அவர், பதவியில் ரமணா இருந்த காலத்தில் உயர் நீதிமன்றங்களுக்கு 250 நீதிபதிகளை நியமித்த நடவடிக்கை மிக முக்கியமானது என்று குறிப்பிட்டார்."உச்ச நீதிமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகள் அனேகமாக நீதிபதி ரமணாவால் நியமிக்கப்பட்டவர்களாக இருக்கும் நிலை எதிர்காலத்தில் வரலாம்," என்று நீதிபதி யு.யு. லலித் தெரிவித்தார்.

Banner
BBC
Banner

யார் இந்த யு.யு. லலித்?

யு.யு. லலித்
BBC
யு.யு. லலித்

நீதிபதி உதய் உமேஷ் லலித் 1957ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் பிறந்தார். இவரது தந்தை யு.ஆர். லலித், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகவும், உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் இருந்தார்.

நீதிபதி யு.யு. லலித் மும்பை அரசு சட்டக்கல்லூரியில் சட்டம் படித்து, 1983ஆம் ஆண்டு ஜூன் மாதம் வழக்குரைஞராகப் பதிவு செய்தார். குற்றவியல் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற இவர், 1983 முதல் 1985 வரை பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். அதைத்தொடர்ந்து, 1986 முதல் 1992 வரை அப்போதைய இந்திய அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜியின் வழக்குரைஞர் குழுவில் பணியாற்றினார்.ஒரு வழக்குரைஞராக, நீதிபதி லலித் பல முக்கிய பிரமுகர்கள் சார்பாக ஆஜரானார். 1994ஆம் ஆண்டில், பாபர் மசூதி இடிப்பைத் தடுக்கத் தவறியதற்காக நீதிமன்ற அவமதிப்புக் குற்றம்சாட்டப்பட்ட பாஜக தலைவரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான கல்யாண் சிங்குக்காக இவர் ஆஜரானார். முன்னதாக, சர்ச்சைக்குரிய இடத்தில் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் உறுதியளிக்கும் பிரமாணப் பத்திரத்தை கல்யாண் சிங் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். 1998ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் சல்மான் கான் வன உயிரினங்களை வேட்டையாடிய வழக்கில் அவருக்காக யு.யு. லலித் வாதிட்டார், அப்போது நடிகர் இரண்டு கரும்புலிகளை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டார். மேலும், அவர் ஷொராபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி போலி என்கவுன்டர் வழக்கில் கொலைக் குற்றம்சாட்டப்பட்ட பாஜக தலைவரும், அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவுக்காக ஆஜரானார்.யு.யு. லலித் 2004ஆம் ஆண்டு ஏப்ரலில் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக அங்கீகரிக்கப்பட்டார். காடுகள், வாகன மாசுபாடு, யமுனை நதியின் மாசுபாடு தொடர்பான பல முக்கிய விஷயங்களில் நீதிமன்றத்திற்கு உதவும் வழக்கறிஞர் ஆக இவரது சேவையை உச்ச நீதிமன்றம் பயன்படுத்திக் கொண்டது.

2011ல் 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராக யு.யு. லலித் நியமிக்கப்பட்டார். அவர் இரண்டு முறை உச்ச நீதிமன்றத்தின் சட்ட சேவைகள் குழுவின் (SCLSC) உறுப்பினராகவும் பணியாற்றினார்.2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி இவரது சட்டப்புலமை காரணமாக நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன் மூலம் கீழமை நீதிமன்றத்திலோ உயர் நீதிமன்றத்திலோ நீதிபதியாக பணியாற்றாமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஆறாவது நீதிபதி ஆக விளங்குகிறார் யு.யு. லலித்.

2021ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (NALSA) செயல் தலைவராக லலித் நியமிக்கப்பட்டார்.

இவரது பதவிக் காலத்தில் நீதிபதி லலித் பல முக்கிய வழக்குகளை விசாரிக்காமலேயே விலகினார். 2014ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி, தூக்கு தண்டனை கைதியான யாகூப் மேமனின் மறுஆய்வு மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து அவர் தன்னை விலக்கிக் கொண்டார். காரணம், வழக்கறிஞராக இருந்தபோதே, அவர், 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேமனை குற்றவாளி என அறிவித்த வழக்கில் அவருக்காக ஆஜராகியிருந்தார். 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி, நீதிபதி லலித் 2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து தன்னைத் தானே விலக்கிக் கொண்டார். காரணம் அந்த வழக்கிலும் அவர் குற்றம்சாட்டப்பட்ட சிலருக்காக ஆஜராகி வாதாடினார்.

அயோத்தி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கல்யாண் சிங் சார்பாக கடந்த காலத்தில் அவர் ஆஜராகியிருந்ததால், அயோத்தி உரிமை சர்ச்சை தொடர்பான வழக்கு இவரது அமர்வுக்கு வந்தபோது, அதில் இருந்து 2019ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி யு.யு. லலித் விலகினார். இந்தப் பின்னணியுடன் நீதிபதி லலித், ஆகஸ்ட் 27, 2022 அன்று இந்தியாவின் 49வது தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார். இரண்டரை மாதங்களுக்கு தலைமை நீதிபதியாக இவர் பணியாற்றுவார். உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருந்து தலைமை நீதிபதியாக உயர்கிறார் யு.யு. லலித். இவருக்கு முன்பாக இதேபோல வழக்குரைஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகி தலைமை நீதிபதியாக உயர்ந்தவர் எஸ்.எம் சிக்ரி ஆவார்.

யு.யு.லலித்துக்கு அமிதா லலித் என்ற மனைவியும், ஷ்ரீயாஷ் லலித், ஹர்ஷத் லலித் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.

Banner
BBC
Banner

https://www.youtube.com/watch?v=j0CsGxCCFFY

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Justice U U Lalit Sworn 49th CJI Will Have 74 day Tenure and who is he
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X