For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் பாஜகவில் சேர்ந்ததில் என்ன தவறு? - கேட்கிறார் தமிழிசை

Google Oneindia Tamil News

டெல்லி: லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் சார்லஸ் பாஜகவில் இணைந்த தகவலை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதி செய்துள்ளார்.

லாட்டரி அதிபராக ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தவர் மார்ட்டின். 2003ல் தமிழகத்தில் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கர்நாடகாவிலும் இவரது சாம்ராஜ்யம் பரவியது. சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் இவருக்கு ஆதிக்கம் உண்டு

Lottery Martin's son joins in BJP

2 தமிழ் திரைப்படங்களை மார்ட்டின் தயாரித்துள்ளார். அவற்றில் ஒன்று கருணாநிதி வசனத்தில் தயாரான இளைஞன் படம். 2010ல், கோவையில் நடந்த தமிழ் மாநாட்டிலும் மார்ட்டின் பங்கேற்றுள்ளார். திமுக ஆட்சிக் காலத்தில் அக்கட்சிக்கு ஆதரவாக இருந்து வந்த மார்ட்டின், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அதிமுகவுடன் நெருங்கத் தொடங்கினார்.

2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், நிலமோசடி வழக்கில், மார்ட்டின் கைது செய்யப்பட்டார். அதிமுக ஆட்சியில் மார்ட்டின் மீது வழக்குகள் தொடுக்கப் பட்டது. மார்ட்டின் மீது நில அபகரிப்பு, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை உள்பட அடுத்தடுத்து 14 வழக்குகளை போலீசார் தொடர்ந்தனர்.

இந்த 4 வழக்குகளில் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு, இவர் மீது போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தை பாய்ச்சி மீண்டும் கைது செய்தனர். இந்த நிலையில், மார்ட்டினை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதனைத் தொடர்ந்து தன் மீது போடப்பட்ட 13 வழக்குகளில் ஜாமீன் பெற்ற மார்ட்டின், கடைசியாக, கொடுமுடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக பதிவான வழக்கில், கொடுமுடி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் பெற்றார். இந்த ஜாமீன் உத்தரவை மார்ட்டினின் வழக்கறிஞர்கள் கோவை மத்திய சிறையில் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, 7 மாதங்களுக்கு பிறகு கோவை சிறையில் இருந்து மார்டின் விடுதலை செய்யப்பட்டார்.

மார்ட்டின் 7 ஆயிரம் கோடி மதிப்புள்ள சட்டவிரோத லாட்டரி தொழிலின் சூத்திரதாரி என்று கூறப்படுவதுண்டு. இவருக்கு 2 ஆயிரம் கோடி மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் கூறுகையில், எனது கணவர் சட்டத்துக்கு உட்பட்டுதான் லாட்டரி தொழில் செய்து வந்தார். கர்நாடகாவில் நடந்த சட்டவிரோத லாட்டரி தொழிலில் அவருக்கு தொடர்பில்லை என்று கூறினார்.

இதற்கிடையே, லீமா ரோஸ் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியில் சேர்ந்தார். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பாஜகவில் சேர மார்ட்டின் முயற்சி செய்தார். ஆனால், அவரை சேர்க்கக் கூடாது என தமிழக பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்த சூழ்நிலையில் மார்ட்டினின் மகன் சார்லஸ் பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்து விட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக பிரபல தமிழ் வார இதழ் ஒன்றில் புகைப்படமும் வெளியானது.

ஆனால் இந்த விவகாரத்தில் பாஜக தலைவர்கள் பெரும்பாலானோருக்கே தெளிவான தகவல்கள் தெரியவில்லை. அவர்களும் ஊடகங்கள் வாயிலாகவே இந்த தகவலைப் பெற்றதாகத் தெரிகிறது.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தி நியூஸ் மினிட்டிற்கு அளித்துள்ள பேட்டியில், சார்லஸ் மார்ட்டின் பாஜகவில் சேர்ந்ததை உறுதி படுத்தியுள்ளார். மேலும், ‘சார்லஸ் மீது வழக்குகள் எதுவும் இல்லை. அதோடு அவர் பாஜகவில் இணைந்து சமுதாயப் பணி செய்ய விரும்புகிறார். எனவே, அவரை கட்சியில் சேர்த்ததில் என்ன தவறு?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால், சார்லஸ் எப்போது பாஜகவில் இணைந்தார் என்பதில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது. சிலர் அவர் மூன்று மாதங்களுக்கு முன்னரே பாஜகவில் இணைந்து விட்டதாகக் கூறுகின்றனர். வேறு சிலரோ அவர் ஆறு மாதங்களுக்கு முன்னரே பாஜகவில் சேர்ந்து விட்டார் என்கின்றனர்.

ஆனால், இது தொடர்பாக சார்லஸின் பேஸ்புக் பக்கத்தில் தகவல்கள் இல்லை.

எது எப்படியோ சார்லஸ் மார்ட்டின் பாஜகவில் இணைந்து விட்டார் என்பது மட்டும் தற்போது உறுதியாகியுள்ளது.

English summary
Speaking to The News Minute, Tamil Nadu BJP chief Tamilisai Soundarajan confirmed his membership, but said that there are no cases against Charles. She said: “He is a youngster who may want to contribute to society. There is no problem in his joining.”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X