For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது! - விவசாய அமைச்சர்

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது என மத்திய விவசாய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் கூறியுள்ளார்.

தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால், விவசாயிகள் பெரும் துயரத்தில் உள்ளனர்.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாலும், பயிர்கள் கருகி பெரும் கடன் சுமை ஏற்பட்டுள்ளதாலும் தற்கொலை செய்து வருகின்றனர்.

No waive of farmer loans, says union govt

இதன் காரணமாக கூட்டுறவு வங்கிகள், நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத சூழல் உள்ளது. ஆனால் வங்கிகளோ கடன்களை திருப்பி வசூலிப்பதில் பெரும் கெடுபிடி காட்டி வருகின்றன.

இந்த விவசாய கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தால், கொஞ்சம்
நிம்மதிப்பெருமூச்சு விடலாம் என்ற நிலையில் விவசாயிகள் உள்ளனர். எனவே இதற்காக தொடர்ந்து விவசாயிகள் குரல் கொடுத்து வருகின்றனர். அரசியல் கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன.

கூட்டுறவு வங்கிகளில் அனைத்து விவசாயிகளும் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் எழுப்பி வருகின்றனர்.

உபியில்...

உத்தரபிரதேச மாநிலத்தில் ரூ.36 ஆயிரத்து 359 கோடி விவசாயக் கடன்கள் அம்மாநில அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக விவசாயிகளின் பயிர்க் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்ற குரல் வலுக்க ஆரம்பித்துள்ளது.

இதை வலியுறுத்திதான் கடந்த 29 நாட்களாக டெல்லியில் ஜந்தர்மந்தர் பகுதியில், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில் விவசாயிகள் பல்வேறு வகையிலான அறப்போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் விவசாய கடன் களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். பாஜக தவிர்த்த அனைத்துக் கட்சிகளும் இந்தப் போராட்டங்களை ஆதரித்து வருகின்றன. ஆனால் இன்று வரை பிரதமர் மோடி இதனைக் கண்டு கொள்ளவே இல்லை.

பாராளுமன்றத்தில்..

விவசாயிகள் பிரச்சினை பாராளுமன்றத்திலும் நேற்று எதிரொலித்தது.

விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவது பற்றி ராஜ்யசபையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.

அந்த கேள்விக்கு மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி சந்தோஷ் குமார் கங்குவார் எழுத்து மூலம் அளித்த பதிலில், "விவசாயிகளின் பயிர்க்கடன் களை தள்ளுபடி செய்யும் எந்த திட்டமும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை. இருந்தாலும், விவசாயிகளின் கடன் சுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் பெரிய அளவில் எடுக்கப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரையிலான பயிர்க்கடன் கள் 7 சதவீதம் என்ற குறைந்த அளவிலான வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. இந்தக் கடன்கள் விவசாயம், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் வட்டி மானிய திட்டத்தின்கீழ் வழங்கப்படுகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் தங்களுடைய குறுகிய கால பயிர்க்கடன்களை உரிய காலகட்டத்தில் திருப்பி செலுத்துகிற விவசாயிகளுக்கு, கூடுதலாக 3 சதவீதம் வட்டி மானியம் தரப்படுகிறது. இதனால் அவர்களுக்கு ஆண்டுக்கு 4 சதவீதம் என்ற குறைந்த வட்டி விகிதம்தான் வசூலிக்கப்படுகிறது.

இவை தவிர்த்து, இயற்கை பேரிடர்களால் விவசாயிகள் இன்னல் அடைகிறபோது, அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். குறிப்பாக, தற்போதைய பயிர்க்கடன்களை மாற்றி அமைப்பதுடன், புதிய கடன்களையும் வழங்க வேண்டும் என்று வங்கிகள் அறிவுறுத்தப்படுகின்றன.

தேசிய பேரழிவு மேலாண்மை கட்டமைப்பின் விதிமுறைக்கு ஏற்ப வங்கிகள் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான குறைந்தபட்ச பயிர் இழப்பு அளவும் 33 சதவீதம் என்ற அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது," என்றார்.

விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பு, விவசாயிகளை அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது.

English summary
The Union govt announced that there is no plan to waive the loans given to farmers from various financial institutions and banks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X