வாட்ஸ்ஆப் சாட்களை பார்க்க விடாத காதலியை கொன்று சூட்கேஸில் உடலை வைத்து வீசிய காதலன்
புனே: மகாராஷ்டிராவில் வாட்ஸ் ஆப்பில் உள்ள உரையாடல்களை அதாவது சாட்களை படிக்க அனுமதிக்காத காதலியை வாலிபர் கொலை செய்துள்ளார்.
மாகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் கராடி என்ற இடத்தில் கடந்த மாதம் 29ம் தேதி 21 வயது பெண்ணின் சடலம் சூட்கேஸில் அடைத்து கிடப்பதை ஏர்வாடா போலீசார் கண்டுபிடித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணின் புகைப்படத்தை வாட்ஸ்ஆப் மூலம் பலருக்கும் அனுப்பி வைத்தனர். அப்போது அந்த புகைப்படத்தை பார்த்த அவர் வேலை பார்த்த கடையின் முதலாளி இது குறித்து போலீசாரை தொடர்பு கொண்டார். அவரின் உதவியால் கொலையாளி கைது செய்யப்பட்டார்.
பிணமாகக் கிடந்தவர் லாத்தூர் நகரைச் சேர்ந்த அனுராதா கண்பத் குல்கர்னி(21). அவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் ஜீவன் சூர்யவன்ஷி(23) என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன், மனைவியாக அதாவது லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வந்தனர்.
அனுராதா ஒரு கடையில் வேலை பார்க்க, பிரசாந்த் ஆட்டோ டிரைவராக இருந்துள்ளார். அனுராதாவின் பெற்றோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். அவருக்கு ஒரு சகோதரி மட்டும் உள்ளார். அனுராதா வாட்ஸ் ஆப்பில் எப்பொழுது பார்த்தாலும் சாட் செய்வாராம். அவர் செல்போனுக்கு பாஸ்வேர்ட் வைத்து அதை பிரசாந்திடம் கூறவில்லை.
அனுராதா வாட்ஸ்ஆப்பில் அப்படி என்ன சாட் செய்கிறார் அதை ஏன் தன்னை பார்க்க விட மறுக்கிறார் என்று நினைத்த பிரசாந்திற்கு ஆத்திரம் வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அனுராதாவுக்கு வேறு யாருடனோ தொடர்பு உள்ளதோ என்று சந்தேகித்த பிரசாந்த் அவரை கொலை செய்து உடலை பெட்டியில் வைத்து ஒரு இடத்தில் வீசிவிட்டார்.
போலீசார் வெளியிட்ட அனுராதாவின் புகைப்படத்தை வாட்ஸ் ஆப்பில் பார்த்த அவரது முதலாளி தான் அனைத்து விவரங்களையும் தெரிவித்து, அவருக்கு பிரசாந்த் என்ற காதலர் உண்டு என்ற தகவலையும் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் பிரசாந்தை குஜராத் மாநிலம் வதோதராவில் கைது செய்தனர்.