புர்கா அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் உ.பி கல்லூரியில் அதிர்ச்சி.. பெரும் பரபரப்பு!
முராதாபாத் : உத்தர பிரதேச மாநிலம் முராதாபாத்தில் உள்ள இந்துக் கல்லூரி மாணவிகள் சிலர் பர்தா அணிந்ததால் கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. நுழைவுவாயிலிலேயே பர்தாவை அகற்றுமாறு கூறப்பட்டதால் இஸ்லாமிய மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் வந்து சமாதானம் செய்தனர்.
கடந்த ஆண்டு கர்நாடகாவில் உள்ள கல்வி நிலையங்களில் ஹிஜாப் விவகாரத்தால் பெரும் போராட்டங்கள் வெடித்த நிலையில் தற்போது உத்தர பிரதேசத்தில் இந்தப் பிரச்சனை தலைதூக்கியுள்ளது.

இந்து கல்லூரி
உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் எம்.ஜே.பி ரோஹில்கண்ட் பல்கலைக்கழகம் உள்ளது. இதன் உறுப்புக் கல்லூரிகளில் ஒன்று முராதாபாத்தில் உள்ள இந்து கல்லூரி. இஸ்லாமியர்கள் அதிகமுள்ள முராதாபாத்தில் அமைந்த இந்தக் கல்லூரியில் பெரும்பாலான மாணவிகள் கல்லூரிக்கு வரும்போது பர்தா அணிந்து வருவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் இந்தக் கல்லூரியில் அனைவருக்கும் ஜனவரி 1 முதல் புதிதாக சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பர்தா அணிந்த மாணவிகளுக்கு அனுமதி இல்லை
இந்நிலையில் நேற்று முன்தினம் முஸ்லீம் மாணவிகள் சிலர் பர்தா அணிந்து கல்லூரிக்கு வந்தனர். அவர்களை கல்லூரி காவலர்கள் நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்தினர். பர்தா அணிந்து கல்லூரிக்கு வர அனுமதி இல்லை என நிர்வாகம் தெரிவித்து விட்டதாகவும், உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்றும் காவலர்கள் தெரிவித்தனர். இதனால், இஸ்லாமிய மாணவிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

வாக்குவாதம்
இதனால், அங்கு மாணவ, மாணவிகள் கூட்டம் கூடியது. பர்தா அணிந்த மாணவிகளை உள்ளே அனுமதிக்க வேண்டும் என வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து, கல்லூரி மாணவர் அமைப்பின் சமாஜ்வாதி கட்சி பிரிவு மாணவர்களும் அங்கு வந்து பர்தா அணிந்த மாணவிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். தொடர்ந்து கல்லூரி பேராசிரியர்கள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை
ஜனவரி 1 முதல் அனைவருக்கும் புதிய சீருடை விதிகள் வந்துள்ளது. எவரும் இனி கல்லூரி உள்ளே பர்தா அணிந்துவர அனுமதி இல்லை என்று பேராசிருயர்கள் தெரிவித்தனர். அதற்கு மாணவர்கள் தரப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், முராதாபாத் போலீசார் அங்கு வந்து சமாதானம் செய்தனர். மாணவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததை அடுத்து அங்கு கூச்சல் குழப்பம் முடிவுக்கு வந்தது.

கர்நாடகா ஹிஜாப் போராட்டம்
கடந்த ஆண்டு கர்நாடகாவில் இதேபோன்ற நிலைமை எழுந்தது. ஹிஜாப் அணிந்த மாணவிகள் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் வகுப்பிற்குள் அனுமதிக்கப்படாததால் பெரும் போராட்டம் வெடித்தது. இதையடுத்து இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றது. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வழக்கு
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், உச்ச நீதிமன்ற அமர்வில் ஹிஜாப் தடைக்கு ஆதரவாக ஒரு நீதிபதியும், ஹிஜாப் தடைக்கு எதிராக ஒரு நீதிபதியும் தீர்ப்பு வழங்கினர். இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில் ஹிஜாப் வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications