பெண் பிறப்புறுப்பு சிதைப்பு மதச்சடங்கிற்கு மத்திய அரசு எதிர்ப்பு.. உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

டெல்லி: பெண்ணுறுப்பு சிதைவு நடைமுறையை நீக்கும் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றமும் ஆதரவு அளித்துள்ளது. மத்திய அரசும் இந்த நடைமுறைக்கு தடை தேவை என்று சுப்ரீம் கோர்ட்டில் கூறியுள்ளது.
சிறுமியாக உள்ளபோதே பெண் உறுப்பை சிதைக்கும் வழக்கம் சில சமூகங்களில் மதச் சடங்கு என்ற பெயரில் நடைமுறையில் உள்ளது. இது பெண் மீதான வன்முறையாக பார்க்கப்படுகிறது.
ஷியா பிரிவை சேர்ந்த சமூகத்தில் பெண் உறுப்பு சிதைவு நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இந்த நடைமுறையை அகற்ற வேண்டும் என்று வழக்கறிஞர் சுனிதா திகார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மத்திய அரசும் எதிர்ப்பு
இதில் மத்திய அரசின் கருத்தை சுப்ரீம் கோர்ட் கேட்டிருந்தது. மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் இந்த வழக்கில் ஆஜரானார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கனவில்கர் மற்றும் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இந்த விசாரணை நடைபெற்றது.

பெண் உறுப்பை தொட உரிமை இல்லை
நீதிபதி சந்திரசூட் கூறுகையில், ஒரு பெண்ணின் உடல் உறுப்பை தொடக்கூடிய உரிமையை இவர்களுக்கு ஏன் தர வேண்டும்? மத நடைமுறை என்ற பெயரில் பெண்ணின் உடலை தொட்டு வன்முறைக்கு உள்ளாக்குவதை அனுமதிக்க முடியாது என்றார். உறுப்பு சிதைவு என்பது மிகவும் சிறு வயதிலேயே நடைபெறுவதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, சிறார் பாலியல் குற்றங்கள் தடைச்சட்டத்தின் (போஸ்கோ) கீழும் இது தவறான செயல் என்று குறிப்பிட்டார்.

பிரமாண பத்திரம்
தற்போது உள்ள சட்டத்தின்படி உறுப்பு சிதைவு செய்வோருக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க முடியும் என்று அட்டார்னி ஜெனரல் கே கே வேணுகோபால் தனது வாதத்தில் குறிப்பிட்டார். இதையே மத்திய அரசு பிரமாணப் பத்திரமாகவும் தாக்கல் செய்துள்ளது.

பல நாடுகளில் தடை
இந்த விஷயத்தில், உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை தரவேண்டும் என்பது மத்திய அரசின் வாதம். அமெரிக்கா பிரிட்டன் ஆஸ்திரேலியா மற்றும் 27 ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வழக்கம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வழக்கறிஞர் தனது வாதத்தில் தெரிவித்தார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!