For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா Vs பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை: 'இது சாதாரண ஆட்டமல்ல' - இரு நாடுகளிலும் உணர்ச்சிப் பெருக்கு

By BBC News தமிழ்
|
கோலி ரோஹித்
Getty Images
கோலி ரோஹித்

அக்டோபர் 24 ஞாயிற்றுக்கிழமை துபாயில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு, "எங்களுக்கு இது மற்ற போட்டிகளைப் போன்றதே.", என்று விராட் கோலி பதிலளித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து கேப்டன் விராட் கோலி கூறிய இந்த கருத்தை 'விதிவிலக்காக' எடுத்துக் கொள்ளலாம்.

சுமார் 28 மாதங்களுக்குப் பிறகு, இரு நாடுகளின் அணிகளும் நேருக்கு நேர் சந்திக்கும். மேலும் அவர்களுக்கு இடையேயான 'மோதல்' குறித்து எல்லை முழுவதும் கடுமையான விவாதம் நடைபெறுகிறது.

பிசிபி தலைவர் ரமீஸ் ராஜாவும் இது 'சாதாரண போட்டி' அல்ல என்றும், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றால், 'நாட்டின் மன உறுதியும் உயரும்' எனவும் கூறியுள்ளார்.

இந்தியாவிலும் இந்த போட்டி பற்றிய எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், 'பல அரசியல் கட்சிகள் 'இந்த போட்டியை ரத்து செய்ய' கோருகின்றன.

ரமீஸ் ராஜா கூறியது என்ன?

தனது அணிக்கும் தனது நாட்டிற்கும் இது ஒரு சிறப்பு வாய்ந்த போட்டி என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா கருதுகிறார்.

இது தொடர்பாக, ரமீஸ் ராஜா ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார், அதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிட்டது.

இதில், பாகிஸ்தான் அணிக்கு ஆதரவளிக்குமாறு ரமீஸ் ராஜா ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரமீஸ் ராஜா கூறுகையில், "போட்டி நடைபெறுவது உங்களுக்கு ஏற்கனவே தெரியும். நீங்கள் பாகிஸ்தான் அணிக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என்று நான் ரசிகர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன், ஏனெனில் இது மிகவும் முக்கியமான போட்டி. ஒரு வகையில், இந்த போட்டியில் நாம் வெற்றி பெற்றால்; இன்ஷா அல்லாஹ் வெற்றி பெற்றால் - ஒரு முழு சமூகத்திற்கும் ஒரு நல்ல செய்தியாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டி ஒருநாள் உலகக் கோப்பையில் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ம் நாளன்று நடைபெற்றது. அந்த போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை மோசமாக வீழ்த்தியது.

இப்போது அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டி பற்றிய விவாதம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது, இது கிரிக்கெட் வீரர்கள், நிர்வாகிகள், அதிகாரிகள், விளையாட்டு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மட்டும் சம்பந்தப்படவில்லை. அரசியலில் உள்ள பெரும் தலைவர்களும் போட்டி குறித்த கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

போட்டியில் விளையாட வேண்டாம் என்ற கோரிக்கை

இந்தியாவில் பாகிஸ்தானுடனான கசப்பான உறவு மற்றும் ஜம்மு -காஷ்மீரில் சமீபக்காலமாக சந்தேகிக்கப்படும் தீவிரவாத சம்பவங்களை மேற்கோள் காட்டி, இந்த போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை விடுக்கும் நபர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

பாபர் ஆசம்
Getty Images
பாபர் ஆசம்

எதிர்க்கட்சித் தலைவர்களுடன், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் பல தலைவர்களும் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகள் விளையாடக்கூடாது என்று கூறிவருகின்றனர்.

இவ்வாறு நடப்பது இது முதல் முறை அல்ல. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் நீண்ட காலமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது.

ஆனால், எந்த ஐசிசி போட்டியிலும் இந்த இரண்டு அணிகளும் மோதும்போது, எல்லை முழுவதும் நிலவரம் உச்சத்தை எட்டிவிடுகிறது. வேறு எந்த விளையாட்டிலும் இது நடக்காது.

'அதிகரிக்கும் டிக்கெட்டின் தேவை'

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்த டி20 போட்டி வடிவத்தில் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக இந்திய கேப்டன் விராட் கோலி அறிவித்துள்ளார். விராட் கோப்பையை வெல்ல விரும்புகிறார். இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டும்.

பல நாட்களாக போட்டியின் மீதான எதிர்பார்ப்புக்கு மாறாக, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியைப் பற்றி 'ஒருபோதும் வித்தியாசமாக உணரவில்லை' என்று கோலி கூறுகிறார்.

செய்தி முகமையான பிடிஐயின் செய்திப்படி, கோலி, "உண்மையைச் சொல்வதானால், நான் எப்போதும் அப்படி உணர்ந்ததில்லை", என்று தெரிவித்துள்ளார்.

கோலி
Getty Images
கோலி

"கிரிக்கெட்டில் மற்ற போட்டிகளைப் போலவே நான் எப்போதும் இதை கருதுகிறேன்," என்று அவர் கூறினார்.

மேலும், 'இது ரசிகர்களுக்கு சாதாரண போட்டி அல்ல' என்பதை அறிந்திருப்பதாக இந்திய கேப்டன் கோலி கூறியுள்ளார். அத்தகைய நபர்களில் அவரது நண்பர்களும் அடங்குவர்.

"இந்த போட்டி குறித்து பெரும் பரபரப்பு உள்ளது என்று எனக்கு தெரியும், டிக்கெட்டுகளுக்கான தேவை மிகவும் அதிகமாக உள்ளது. மேலும், டிக்கெட் விலைகள் இப்போது மிக அதிகமாக உள்ளது. என் நண்பர்களும் டிக்கெட் கேட்கின்றனர், நான் 'இல்லை' என்று பதிலளிக்கிறேன். ", என்று கோலி கூறியுள்ளார்.

எந்த அணி பலம் வாய்ந்தது?

பாகிஸ்தானின் கேப்டன் பாபர் அசாமும் போட்டிக்கு முன்னதாக 'மைண்ட் கேமி'ல் ஈடுபட்டுள்ளார். பிசிபி தலைவரைப் போலவே, அவரது அணியின் வெற்றியில் தீவிரமாக இருக்கிறார்.

பாகிஸ்தானின் ஊடகங்களும் ரசிகர்களும் பாபர் ஆசாமுடன் இந்திய கேப்டன் விராட் கோலியை ஒப்பிடுகின்றனர்.

ரசிகர்கள்
Reuters
ரசிகர்கள்

தரவரிசை மற்றும் பதிவுகளில், இந்தியா சிறந்த நிலையில் உள்ளது. டி20 தரவரிசையில், இந்தியா இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

பதிவுகளின் அடிப்படையில், டி20 போட்டிகளில் இந்தியா எட்டு போட்டிகளில் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

செளரவ்-ஜெய் ஷாவுடனான சந்திப்பு குறித்து ரமீஸ் ராஜா

ஆனால், இந்த போட்டி முனையில், பாகிஸ்தானின் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பின்தங்கியிருக்க விரும்பவில்லை.

இந்திய அணிக்கு அழுத்தம் கொடுப்பதன் காரணம் இதுவா? கிரிக்கெட் மற்றும் அரசியல் வல்லுநர்கள் இதை மறுக்கவில்லை.

ரமீஸ் ராஜா வெளியிட்டுள்ள கருத்தில், பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி மற்றும் வாரிய செயலாளர் ஜெய் ஷா உடனான சந்திப்பையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரமீஸ் ராஜா, "நான் செளரவ் கங்குலியை சந்தித்தேனோ? என்ற கேள்வி நிலவி வருகின்றது. நிச்சயமாக சந்தித்தேன். நான் ஜெய் ஷாவையும் சந்தித்தேன்."

"பாருங்கள், நாங்கள் ஒரு கிரிக்கெட் பந்தத்தை நிறுவ வேண்டும். அரசியலில் இருந்து கிரிக்கெட் எவ்வளவு விலகி இருக்கிறதோ அவ்வளவு நன்மை என்று நான் எப்போதும் நினைக்கிறேன்.", என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

ரமீஸ் ராஜா கிரிக்கெட்டை 'அரசியலில் இருந்து விலக்கி வைப்பது' பற்றி பேசிக்கொண்டிருக்கலாம். ஆனால் அதைச் செய்வது எளிதல்ல. வல்லுநர்கள் ரமீஸ் ராஜாவின் கருத்து கூறிய நேரத்திலிருந்து இதையே யூகிக்கின்றனர்.

மற்ற விளையாட்டுகளை விட இரு நாடுகளிலும் கிரிக்கெட் மிகவும் பிரபலமாக உள்ளது. இதன் மூலம் பல நேரங்களில் உணர்ச்சிகளின் அலை அதிகரித்து வருகிறது.

கோப்பு
Getty Images
கோப்பு

நிபுணர்களின் கருத்துப்படி, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் கிரிக்கெட்டையும் அரசியலையும் தனித்தனியாக வைத்திருக்கும் முயற்சிகள் பெரும்பாலும் வெற்றிபெறாததற்கு இதுவே காரணம்.

பாகிஸ்தானில் நாட்டின் நிலைமை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கானின் கையில் உள்ளது. அதே நேரத்தில், தற்போதைய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவின் தந்தை அமித் ஷா உள்துறை அமைச்சராக உள்ளார். ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்து அவரிடமும் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

சுப்பிரமணியன் சுவாமியின் கேள்வி

திங்கள்கிழமையன்று பிசிபியின் ட்விட்டர் கணக்கில் ரமீஸ் ராஜாவின் அறிக்கை வெளியிடப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஒரு ட்வீட் செய்தார்.

அதில், அவர் கேள்வி அம்புகளை வீசினார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார்.

சுப்பிரமணியன் சுவாமி, "பயங்கரவாதத்தை விற்கும் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிக்கு என்ன அவசரம்? பிசிசிஐயின் ஜெய் ஷாவுக்கு அவரது தந்தை உள்துறை அமைச்சராக என்ன சொல்கிறார் என்று தெரியுமா? துபாயில் தாதாக்கள் கிரிக்கெட் பந்தயம் மூலம் பணம் சம்பாதிப்பது முக்கியம். இந்த கிரிக்கெட்டை ரத்து செய்து நாட்டின் மதிப்பை காப்பாற்றுங்கள்." என்று பதிவிட்டுள்ளார்.

இந்தக் கோரிக்கையை எழுப்பியது சுப்பிரமணியன் சுவாமி மட்டுமல்ல.

சுப்பிரமணியன் சுவாமி
BBC
சுப்பிரமணியன் சுவாமி

தொழிலதிபரும் எழுத்தாளருமான சுஹைல் சேத்தும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சுஹைல் சேத், "எல்லை தாண்டி காஷ்மீரில் அப்பாவி இந்தியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் போது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு போட்டியை அவசியம் நடந்தவேண்டுமா? அல்லது பாகிஸ்தானின் எந்த ஆப்-களை நாம் தடை செய்யலாம் என்று பார்ப்போமா?. அல்லது கிரிக்கெட் என்று வரும்போது, நாட்டை விட வணிகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறதா?

பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டியின் சரியான தன்மை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. நரேந்திர மோதி அரசின் அமைச்சர் கிரிராஜ் சிங் மற்றும் பீகாரின் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத் ஆகியோர் எழுப்பியுள்ளனர்.

சமீபத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்பட்டு பீகார் மக்கள் மீது குறிவைக்கப்பட்டது. பீகாரைச் சேர்ந்த இந்த இரண்டு தலைவர்களும் இந்த காரணத்திற்காக போட்டி குறித்து கேள்விகளை எழுப்புகின்றனர் என்று நம்பப்படுகிறது.

மறுபுறம், ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி மற்றும் ஆம் ஆத்மி கட்சியும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட வேண்டாம் என்று கோரியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் பி.வி.ஸ்ரீனிவாஸ் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் மூலமாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை குறி வைத்து பதிவிட்டுள்ளார்.

அவர், "இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பாஜக தலைவர்கள் சிலர் எதிர்க்கின்றனர். இந்த நிலையில், முன்னாள் பாஜக தலைவரும் தற்போதைய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா, இந்த போட்டி நடத்தப்பட வேண்டும் என்று முயற்சிக்கிறார். என்ன நடக்கிறது?", என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக பேசுவது இல்லை.

காங்கிரஸ் தலைவரும் பிசிசிஐ துணைத் தலைவருமான ராஜீவ் சுக்லாவின் கருத்துப்படி, 'ஐசிசியுடன் இருக்கும் கடமை காரணமாக நீங்கள் எந்த அணிக்கும் எதிராக விளையாட மறுக்க முடியாது. நீங்கள் ஐசிசி போட்டிகளில் விளையாட வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.

பல தசாப்தங்களாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டிகளுடன் பதற்றமும் அழுத்தமும் நிலவி வருகின்றது. தற்போதைய வீரர்கள் வெளிப்படையாக எதுவும் சொல்லாமல் இருக்கலாம். ஆனால் பல முன்னாள் வீரர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி ஒரு போட்டி போல இல்லை என்று கருத்து தெரிவிக்கின்றனர்.

சச்சினின் தூங்கா நாட்கள்

பல நேரங்களில், மன அழுத்தம் காரணமாக, வீரர்கள் தூக்கத்தை தொலைக்கின்றனர்.

பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது சுயசரிதையான 'ப்ளேயிங் இட் மை வே' என்ற புத்தகத்திலும் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர், 2003 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியனில் நடந்த உலகக் கோப்பை போட்டியைப் பற்றி எழுதியுள்ளார். அதில், "இரு அணிகளுக்கும் இது ஒரு பெரிய போட்டியாக இருக்கும். உணர்ச்சிகள் மிகவும் வலுவாக இருந்ததால் போட்டிக்கு முந்தைய மூன்று இரவுகள் என்னால் சரியாக தூங்கமுடியவில்லை. நாங்கள் ஏதாவது ஒரு போட்டியில் வெல்ல விரும்பினால், அது இந்த போட்டிதான். " என்ற் குறிப்பிட்டுள்ளார்.

சச்சின்
Getty Images
சச்சின்

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் எல்லா காலத்திலும் மிகச்சிறந்த ஒருநாள் போட்டியாக கருதப்படுகிறது. அந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 75 பந்துகளில் 98 ரன்கள் எடுத்தார். சோயிப் அக்தரின் பந்தில் சச்சின் அடித்த சிக்ஸர் இன்றும் நினைவில் உள்ளது.

"(அப்போது) நாடு தோல்வியைத் தாங்க முடியாது. இது எங்களுடைய பல ரசிகர்களின் உண்மையான இறுதிப் போட்டி. நாங்கள் பாகிஸ்தானை செஞ்சுரியனில் வீழ்த்தினால், மீதமுள்ள போட்டிகளில் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கு முக்கியமல்ல.", என்று சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த போட்டி முடிந்து 18 ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால் 'வெற்றி பெறுவதற்கான பிடிவாதம்' எல்லைகளை தாண்டி அப்படியே உள்ளது.

சச்சின் டெண்டுல்கருடன் பல ஆண்டுகளாக உடை மாற்றும் அறையைப் பகிர்ந்து கொண்ட சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கின் வீடியோ சமீபத்தில் வைரலானது.

இதில், ஹர்பஜன் பாகிஸ்தான் அணிக்கு இந்தியாவுடன் டி20 போட்டிகளில் விளையாட வேண்டாம் என்றும், போட்டியை விட்டு விலகி செல்லுங்கள் எனவும் வேடிக்கையாக அறிவுறுத்தியுள்ளார்.

ஹர்பஜன், "நான் சோயப் அக்தரிடம் சொன்னேன், இந்த முறை விளையாடுவதால் என்ன பயன்? நீங்கள் விலகி விடுங்கள். நீங்கள் எங்களுடன் விளையாடுவீர்கள், பிறகு நீங்கள் தோல்வியடைவீர்கள், பிறகு நீங்கள் ஏமாற்றமடைவீர்கள், எங்கள் அணி மிகவும் வலிமையானது, எங்கள் வீரர்கள் ஜெயித்துவிடுவார்கள்! " என்று கூறியுள்ளார்.

ஆனால், இப்போது இந்த போட்டி குறித்து வெளியிடப்படும் கருத்துகளை வைத்து, யாரும் விட்டுக் கொடுக்கவோ விலகி செல்லவோ தயாராக இருப்பதாகத் தெரியவில்லை - அது களத்திற்கு உள்ளாக இருந்தாலும் சரி, வெளியில் இருந்தாலும் சரி!

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
India vs Pakitan t20 match latset updates in tamil. India in t20 World cup latset updates in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X