விசாகப்பட்டினம்: தி டெக்கான் குரோனிக்கல் பத்திரிகை அலுவலகத்தை சூறையாடி தீ வைத்த நாயுடு தொண்டர்கள்!
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் The Deccan Chronicle ஆங்கிலப் பத்திரிகை அலுவலகத்துக்குள் நுழைந்து முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சித் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The Deccan Chronicle பத்திரிகையில் விசாகப்பட்டினம் ஸ்டீல் தொழிற்சாலை தனியார் மயமாக்கப்படுவதாக ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. இந்த கட்டுரையால் கொதிப்படைந்த தெலுங்குதேசம் கட்சித் தொண்டர்கள், விசாகப்பட்டினத்தில் உள்ள அப்பத்திரிகை அலுவலகத்தை சூறையாடித் தாக்கினர்.

இந்த தாக்குதலுக்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் புதிய அரசாங்கத்தில் ஜனநாயகம் சீர்குலைந்து கொண்டே இருக்கிறது. ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுதான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் காட்டமாக தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆனால் ஆந்திரா மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நாரா லேகேஷ், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் குரலாக ஆங்கிலப் பத்திரிகை செயல்பட்டு பொய்ச் செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் விசாகப்பட்டினம் ஸ்டீல் தொழிற்சாலையை தனியார்மயமாக்க எந்த நடவடிக்கையுமே எடுக்கப்படவில்லை. அதற்காக பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. தெலுங்குதேசம் கட்சித் தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றார்.
இத்தாக்குதலுக்கு இந்தியன் ஜேர்னலிஸ்ட் யூனியன் உள்ளிட்ட பத்திரிகையாளர் சங்கங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. முதல்வராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கைப்பற்றினார். லோக்சபா தேர்தலிலும் ஜெகன் மோகன் கட்சி பெரும் தோல்வியையே சந்தித்தது. இதனையடுத்து ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். கட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
