என் கணவர் பேசியது தவறுதான்: திரினமூல் எம்.பியின் பலாத்கார பேச்சுக்கு மனைவி மன்னிப்பு!
கொல்கத்தா: தேவைப்பட்டால் சிபிஎம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யவும் தயாராக இருக்க வேண்டும் என்று கட்சியினர் மத்தியில் பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய திரினமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. தபஸ் பாலின் மனைவி தனது கணவரின் பேச்சுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆனால் தனது கணவர் தானாக பேசவில்லை என்றும், அப்படிப் பேசும் வகையில் அவர் தூண்டப்பட வேறு காரணம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து தபஸ் பாலின் மனைவி நந்தினி பால் கூறுகையில், எனது கணவரின் கருத்துக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். யாரும் இதை ஆதரிக்க முடியாது.
ஆனால் இதன் பின்னணியில் வேறு உள்ளது. இப்படிப் பேச எனது கணவர் தூண்டப்படக் காரணம் உள்ளது. எனது கணவர் இப்போது பேசியதல்ல இது. நீண்ட நாட்களுக்கு முன்பு பேசியது. அப்போது நடந்த விஷயம்தான் அவரை அப்படிப் பேசத் தூண்டியது.
அவர் சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் நந்தினி பால். இவரும் கூட ஒரு நடிகைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, தபஸ் பால் தனது பேச்சு குறித்து 48 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று திரினமூல் காங்கிரஸ் கட்சி உத்தரவிட்டுள்ளது.