For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தி.மு.க vs அ.தி.மு.க : கொங்கு மண்டல உள்ளாட்சி தேர்தல் கள நிலவரம் - தமிழ்நாடு அரசியல்

By BBC News தமிழ்
|

Click here to see the BBC interactive

மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றுவதற்கு தி.மு.க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சட்டமன்றத் தேர்தலில் கோவை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் தி.மு.கவுக்குக் கிடைத்த தோல்வியை ஈடுகட்டும் வகையில் கே.என்.நேருவும் செந்தில்பாலாஜியும் தீவிரம் காட்டி வருகின்றனர்'' என்கின்றனர் தி.மு.கவினர். என்ன நடக்கிறது மேற்கு மாவட்டங்களில்?

தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அ.தி.மு.க தரப்பிலும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் கடந்த 7ஆம் தேதி 526 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணொளி காட்சி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ''கொரோனா காலமாக இல்லாவிட்டால் நானே உங்களைத் தேடி வந்திருப்பேன். அனைத்து இடங்களிலும் நாம் வெற்றி பெற்றால்தான் கோட்டையில் இருந்தபடி நாம் அறிவிக்கும் நலத்திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடையும். இதனை மக்களிடம் சேர்க்கும் கடமை உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் கைகளில் உள்ளது'' என்றார்.

மேலும், ''சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நமக்கான செல்வாக்கு கூடியுள்ளது. நமக்கு வாக்களிக்கத் தவறியவர்கள்கூட வாக்களிக்கும் முடிவுக்கு வந்துவிட்டார்கள். இதில் சேலம் மாவட்டத்தின் வெற்றிச் செய்திதான் முக்கியமானது என்பதை முதலிலேயே சொல்லிக் கொள்கிறேன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் எதிர்பார்த்த வெற்றியை சேலத்தில் பெற முடியவில்லை. அதனை நகர்ப்புற உள்ளாட்சியில் கைப்பற்றியாக வேண்டும்'' என்றார்.

அதேநேரம், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தில், ''மக்களுக்கு பயன் அளிக்கக் கூடிய எந்தத் திட்டங்களையும் தி.மு.க அரசு செயல்படுத்தவில்லை. கடந்த எட்டு மாதத்தில் என்னென்ன திட்டங்களை ஸ்டாலின் நிறைவேற்றினார்? சைக்கிள் பயணம், நடைப்பயிற்சி, டீ குடிப்பது போன்ற காட்சிகளைத்தான் பார்க்க முடிகிறது. நன்மை செய்வதைப் பார்க்க முடியவில்லை'' எனச் சாடினார்.

கோவை நிலவரம் என்ன?

தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க, அ.தி.மு.க மோதல்கள் ஒருபுறம் இருந்தாலும் களநிலவரம் எப்படியிருக்கிறது? முதலில் கோவை நிலவரத்தைப் பார்ப்போம்.

தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் பெரும் சவாலாக கோவை மாநகராட்சி உள்ளது. அதிலும், முதல்முறையாக பெண் மேயர் வரவிருப்பது கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. கோவை மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளும் தி.மு.கவும் அ.தி.மு.கவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. தி.மு.க அணியில் காங்கிரஸ், சி.பி.எம், சி.பி.ஐ. வி.சி.க, ம.தி.மு.க, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, ம.ம.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இருப்பது கூடுதல் பிளஸ்.

அதேநேரம், அ.தி.மு.கவின் சட்டமன்றக் கொறடா எஸ்.பி.வேலுமணியின் தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் உள்ளூர் அ.தி.மு.க தலைவர்களின் ஆதிக்கம் ஆகியவை தங்களுக்கு வெற்றி தேடித் தரும் என அ.தி.மு.கவினர் நினைக்கின்றனர். கடந்த பத்து ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியின் செயல்பாடுகளையும் பிரசாரத்தில் கூறி வருகின்றனர். இவர்களை எதிர்கொள்வதே தி.மு.கவுக்கு பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது.

இதில், எஸ்.பி.வேலுமணியின் செல்வாக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முடிவில் செந்தில்பாலாஜியின் செயல்பாடுகள் ஒருபுறம் இருந்தாலும் கோவையில் உள்ள தி.மு.க சீனியர்கள் அவருக்குப் பெரிதாக ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

கோவையை புறக்கணித்ததா தி.மு.க?

இந்தத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கான வெற்றிவாய்ப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜுனன், கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் கோவையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். அதனால் சட்டமன்றத் தேர்தலில் 10 இடங்களிலும் அ.தி.மு.க கூட்டணி வென்றது. இங்கு தி.மு.க வெற்றி பெற முடியவில்லை என்பதால் கோவை மாவட்டத்தையே புறக்கணித்துவிட்டனர்'' என்கிறார்.

தொடர்ந்து பேசியவர், கடந்த எட்டு மாதகால தி.மு.க ஆட்சியில் கோவையில் எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. பொங்கல் பரிசுத் தொகுப்பில் தி.மு.க அரசு செய்துள்ள ஊழலால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். சட்டம் ஒழுங்கும் சீர்குலைந்துள்ளது. தி.மு.க அரசின் தோல்வியை முன்வைத்தே மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறோம். எங்கள் கூட்டணியில் இருந்து பா.ஜ.க பிரிந்து சென்றதால் எங்களுக்கு நஷ்டமும் இல்லை. தங்கள் கட்சி ஆட்களுக்கு இடம் தர வேண்டும் என்பதற்காக அவர்கள் தனித்து போட்டியிடுகின்றனர். அது அவர்களுடைய முடிவு. இது எந்தவிதத்திலும் அ.தி.மு.கவை பாதிக்காது. தனித்துத்தான் அதிக இடங்களில் போட்டியிடுகிறோம். இந்த முறையும் வென்று மேயர் பதவியை நாங்கள் பெறுவோம் என்றார்.

குறிப்பாக, பொங்கல் பரிசுத் தொகுப்பு, இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம் தராமல் இருப்பது, நீட் தேர்வு விவகாரம் ஆகியவற்றை முன்வைத்தே அ.தி.மு.கவின் பிரசாரம் அமைந்துள்ளது. நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடந்த பத்தாண்டுகளாக அ.தி.மு.கவின் உள்ளூர் பிரமுகர்களை சார்ந்திருந்ததால் தங்களுக்கான வெற்றி வாய்ப்பு அதிகம் எனவும் அ.தி.மு.கவினர் கணக்கு போடுகின்றனர்.

50 ஆயிரம் மனுக்களுக்குத் தீர்வு

அ.தி.மு.கவின் பிரசாரம் குறித்து, பிபிசி தமிழிடம் பேசிய கோவை மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் முத்துசாமி, கோவையை தி.மு.க புறக்கணித்ததாகச் சொல்வது அர்த்தமற்றது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நமக்கு வாக்களிக்காதவர்கள்கூட தி.மு.கவுக்கு வாக்களிக்க வேண்டும் என சொல்லும் அளவுக்கு வேலை செய்வோம் என முதல்வர் தெரிவித்தார். அப்படித்தான் வேலை செய்து வருகிறோம். கடந்த ஆட்சியில் செயல்படாமல் இருந்த 100-க்கும் மேற்பட்ட பணிகளுக்கு தற்போது டெண்டர் நடத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கோவை மாவட்டத்தில் மக்களிடம் 1,46,000 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அதில் 50,000-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது'' என்கிறார்.

https://twitter.com/SPVelumanicbe/status/1489632310014398464

உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தை கோவையிலிருந்துதான் முதலமைச்சர் தொடங்கியுள்ளார். கோவைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோம் என்பதை இதிலே தெரிந்து கொள்ளலாம். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் சில இடங்களில் தவறுகள் நடைபெற்றிருப்பதை விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.கவாக இருந்திருந்தால் இதை செய்திருக்கமாட்டார்கள். கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலைப் போலவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் நாங்கள் பெருவாரியாக வெற்றி பெறுவோம்'' என்கிறார் முத்துசாமி.

கோவை மாவட்டத்தில் கூட்டணி உரசல்கள் தொடர்பாகக் கேட்டபோது, மிகப்பெரிய கூட்டணியை அமைக்கின்றபோது இதுபோன்ற விஷயங்கள் நடப்பது இயல்பு தான். ஒரு வார்டிலே 10 பேர் விருப்பமனு அளிப்பார்கள். அதிலும் அனைவருக்கும் போட்டியிட வாய்ப்பு கிடைத்துவிடாது. சில இடங்கள் கூட்டணி கட்சிகளுக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டிய தேவையில்லை. அதனால் சிலர் அதிருப்தி அடைவது வழக்கம்தான். அது தேர்தலை எந்த விதத்திலும் பாதிக்காது'' என்கிறார்.

சேலத்தை வெல்லுமா தி.மு.க?

அடுத்ததாக, சேலம் மாவட்டத்தில் 699 வார்டுகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகள் உள்ளன. மாநகராட்சியைப் பொறுத்தவரையில் 60 வார்டுகளில் 30 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமாக இருப்பதால் இங்கு வெற்றி பெறுவதை மிக முக்கியமானதாக அவர் பார்க்கிறார்.

சேலம் மாவட்டத்தின் வெற்றியை முதலாகக் கேட்க விரும்புகிறேன்' என தி.மு.க தலைவர் கூறிவிட்டதால், தொடர்ந்து கூட்டங்களை நடத்தி கட்சி நிர்வாகிகளை அமைச்சர் கே.என்.நேரு உற்சாகப்படுத்தி வருகிறார். அதிலும், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்களுக்கு வார்டுகளை ஒதுக்கியதால் தி.மு.கவில் உள்கட்சி பூசல் நிலவுவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், கடந்த எட்டுமாத கால தி.மு.க ஆட்சியில் சேலம் மாவட்டத்துக்குக் கொண்டு வரப்பட்ட நலத்திட்ட உதவிகளை முன்னிறுத்தி தி.மு.கவினர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அ.தி.மு.கவினர் பிரசாரம் மேற்கொண்டாலும் வலுவான கூட்டணி இல்லாதது மைனஸாகப் பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக, அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான செம்மலையிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

கடந்த எட்டுமாத தி.மு.க ஆட்சியால் மக்களுக்கு வெறுப்புதான் ஏற்பட்டுள்ளது. அவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை அந்தந்த பகுதியில் செல்வாக்கு உள்ளவர்கள் மற்றும் சேவை செய்தவர்கள் ஆகியோருக்குத்தான் வெற்றி வாய்ப்பு இருக்கும். அதனை உணர்ந்து அதுபோன்ற நபர்களுக்கே வார்டுகளை ஒதுக்கியுள்ளோம்'' என்கிறார்.

தொடர்ந்து பேசிய செம்மலை, நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் போல இந்தத் தேர்தல் இல்லை. சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதி போன்ற உள்ளூர் பிரச்சனைகள்தான் முன்னிலை வகிக்கும். அப்படிப் பார்த்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரமும் சமையல் எரிவாயு விலை குறைப்பு, ஐந்து சவரன் நகைக்கடன் தள்ளுபடி என ஆளுங்கட்சியினர் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளே, அவர்களுக்கு எதிரானதாக திரும்பும்'' என்கிறார்.

ஈரோடு நிலவரம் என்ன?

https://twitter.com/DMKErode/status/1490988530449141760

இதையடுத்து, ஈரோடு மாவட்ட நிலவரத்தை விசாரித்தோம். இங்கு ஒரு மாநகராட்சி, பவானி, கோபிச்செட்டிபாளையம், சத்தியமங்கலம், புளியம்பட்டி ஆகிய நகராட்சிகளும் 42 பேரூராட்சிகளும் உள்ளன. இங்கு தி.மு.கவினரைவிட அ.தி.மு.கவினரே செல்வாக்கு உள்ளவர்களாக இருக்கின்றனர். தி.மு.க சார்பாக அமைச்சர் முத்துச்சாமி உள்பட சீனியர்கள் பலர் இருந்தாலும் கடந்த பத்து ஆண்டுகளாக நகர்ப்புற, கிராமப்புறங்களில் அ.தி.மு.கவின் உள்ளூர் நிர்வாகிகள் செல்வாக்கை வளர்த்துள்ளனர்.

எனவே, கூட்டணி இல்லாவிட்டாலும் தங்களுக்கு மக்களிடம் இருந்து வாக்குகள் கிடைக்கும் என நம்புகின்றனர். இதனை முறியடிக்கும் வகையில் தி.மு.கவினர் பிரசாரம் மேற்கொண்டாலும் சீட் கிடைக்காதது, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது, உள்கட்சிப் பூசல் எனப் பல்வேறு அதிருப்திகளும் தி.மு.க அணியில் உள்ளன. தவிர, உள்ளூர் தி.மு.கவினர் சிலர் அ.தி.மு.கவின் சீனியர்களுடன் இணக்கமாக இருப்பதும் மைனஸாக பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சரும் தி.மு.க பிரமுகருமான தோப்பு வெங்கடாச்சலத்திடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் இங்கு அ.தி.மு.க வென்றுள்ளது. அதேநேரம், தி.மு.கவும் சில இடங்களில் வென்றுள்ளது. அ.தி.மு.க நிர்வாகிகளின் செல்வாக்கும் இங்கு உள்ளது. கொங்கு மண்டலத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை' என முதலமைச்சரும் கூறியிருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சியில் அண்ணா தி.மு.க நிர்வாகிகள் களத்தில் இறங்கி வேலை பார்ப்பதைப் போலவும் தி.மு.கவில் குழப்பம் நிலவுவது போன்ற செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், களநிலவரம் என்பது வேறாக இருக்கிறது'' என்கிறார்.

தி.மு.கவில் கூட்டணி வலுவாக உள்ளது. அவர்களை எல்லாம் திருப்திப்படுத்த வேண்டிய இடத்தில் தி.மு.க உள்ளது. அவ்வாறு அந்தக் கட்சிகளில் அமர்த்தப்படும் வேட்பாளர்கள் சரியானவர்களா என்பதுவும் முக்கியமானது. அ.தி.மு.கவைப் பொறுத்தவரையில் அந்தந்த வார்டுகளில் உள்ளவர்களை வேட்பாளர்களாக நியமித்துள்ளனர். கூட்டணிக் கட்சிகளின் முடிவில் தி.மு.க தலையிட முடியாது. இதுபோன்ற காரணங்களால் தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் போட்டி உள்ளது'' எனக் குறிப்பிடும் தோப்பு வெங்கடாச்சலம்.

சரிசமமான போட்டியா?

நியாய விலைக்கடையில் பொங்கலுக்குப் பணம் கொடுக்கவில்லை என்ற காரணத்தை தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன. சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் நான்காயிரம் ரூபாயை முதலமைச்சர் கொடுத்தார். பொங்கலைப் பொறுத்தவரையில் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களைக் கொடுத்தார். ஆனால், பொங்கலுக்கு நாங்கள் பணம் கொடுத்தோம் என அ.தி.மு.கவினர் பிரசாரம் செய்கின்றனர். அதனை ஓர் ஆயுதமாக கையில் எடுத்துள்ளனர். ஆனால், இந்த யுக்தி எடுபடப் போவதில்லை'' என்கிறார்.

கிராமப்புற பேருந்துகளில் மகளிர் செல்வதற்கு விலையில்லா டிக்கெட் வழங்குவது எடுபட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை முழுமையாக கொடுத்துள்ளனர். அரசு ஆசிரியர்களின் மீது போடப்பட்ட வழக்குகளை இந்த அரசு வாபஸ் பெற்றுள்ளது. பெண்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் தி.மு.கவுக்கு ஆதரவு உள்ளது. ஆளும்கட்சி என்பதால் பத்து சதவீத வாக்குகள் கூடுதலாக விழும். தற்போதைய சூழலில் சமமான போட்டி என்ற தோற்றம் இருந்தாலும் தேர்தல் முடிவில் தி.மு.கவே வெற்றி பெறும்'' என்கிறார்.

மேற்கு மண்டலம், யாருக்கு சாதகம்?

மேற்கு மண்டல நிலவரம் யாருக்கு சாதகமாக உள்ளது?'' என மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கீழ்மட்ட அலகு என்பது பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள்தான். பேரூராட்சிகளில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என 13,000 இடங்களுக்குப் போட்டி நடக்கிறது. கோவை, சேலத்தில் 2,000 இடங்கள் உள்ளன. இதில் எத்தனை இடங்களை தி.மு.க பிடிக்கப் போகிறது? எத்தனை இடங்களை அ.தி.மு.க பிடிக்கப் போகிறது என்பதுதான் கேள்வி. அதன்பிறகுதான் மேயர், சேர்மன் பதவிகள் எல்லாம் வரும். இதில் ஆளும்கட்சிக்கு சாதகமான அம்சங்கள் உள்ளன'' என்கிறார்.

தொடர்ந்து பேசிய ஷ்யாம், கோவை, சேலம் ஆகியவை தற்போது அ.தி.மு.க கோட்டையாக இருந்தாலும் தி.மு.கவுக்கான வாய்ப்புகள் அதிகம். வாக்குப் பிரிப்பு என்பது அடிப்படையான காரணமாக உள்ளது. பேரூராட்சிகளைப் பொறுத்தவரையில் 500 வாக்குகள் இருந்தாலே வெற்றி பெற்றுவிடலாம். வேட்பாளரை சரியாக நிறுத்துவதே முக்கியமானது. கோவை மாவட்டத்தில் ஒரு வார்டில் நிறுத்தப்படுகிறவர் எப்படிப்பட்டவர் என்ற கணக்குகள் தெரிய வாய்ப்பில்லை. இந்தத் தேர்தலில் தே.மு.தி.கவுக்கும் சில இடங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. இந்தமுறை தி.மு.க, அ.தி.மு.கவுக்கு அடுத்த இடத்தை நாம் தமிழர் கட்சியினர் பிடிக்கலாம். வடமாவட்டங்களில் மட்டும் பா.ம.கவுக்கு இடங்கள் கிடைக்கலாம். இதில் கடைசி இடத்துக்கு பா.ஜ.க தள்ளப்படலாம் என நினைக்கிறேன்'' என்கிறார்.

பத்து ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் இருந்ததால் உள்ளூரில் அவர்களுக்கான செல்வாக்கு அதிகம் உள்ளதே?'' என்றோம். அ.தி.மு.கவின் உள்ளூர் பிரமுகர்களை மக்கள் சார்ந்திருந்தது உண்மைதான். அவர்களுக்குப் போட்டியிடுவதற்கு அ.தி.மு.க தலைமை வாய்ப்பளித்துள்ளதா எனப் பார்க்க வேண்டும். பேரூராட்சி அளவில் அதுதான் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

மாநகராட்சிகள், நகராட்சிகள் ஆகியவற்றில்தான் செந்தில்பாலாஜியும் கே.என்.நேருவும் கவனம் செலுத்துகின்றனர். சேலத்தில் அ.தி.மு.க தோற்றால் அது எடப்பாடியின் தோல்வியாகப் பார்க்கப்படும். தி.மு.க தோற்றால் அது கே.என்.நேருவின் தோல்வியாகப் பார்க்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளையும் கைப்பற்ற வேண்டும் என தி.மு.க நினைக்கிறது. அ.தி.மு.க தரப்பில் சிலர் வென்றாலும் அவர்களை தி.மு.க பக்கம் இழுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தமுறை மாநகராட்சிகளை அ.தி.மு.க கைப்பற்றுமா என்ற சந்தேகமும் எனக்கு உள்ளது'' என்கிறார்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை
BBC
பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
The DMK is making strenuous efforts to capture all the corporations in the western region in the Tamil Nadu urban local body elections. KN Nehru and Senthilpology are working hard for this
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X